சீரியல் உலகின் கிளாசிக்  ‘மெட்டி ஒலி’தான் - எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

Friday, September 30, 2016

‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ நெடுந்தொடரின் மூலமாகவும், ‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட படங்களின் வாயிலாகவும் தனித்த அடையாளத்தைப் பெற்றிருப்பவர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. உச்சரிக்கும்போது தனித்துத் தெரிவதுதான் வசனம் என்ற நிலையை உடைத்து, கதாபாத்திரங்களின் மொழியை வெளிக்கொணர்ந்தது இவரது திரை எழுத்து. தனது பயணம் குறித்தும், அதில் உறுதுணையாக இருந்து வருபவர்கள் பற்றியும் நம்மிடம் விலாவாரியாகப் பேசினார் பாஸ்கர் சக்தி.

நவீன இலக்கிய உலகில் எழுத்தாளராக நுழைந்தது குறித்து..?

“அடிப்படையில், எழுத்தாளராக இருந்துதான் பத்திரிகையாளராக மாறினேன். அப்போது (1995ம் ஆண்டில்) இந்தியா டுடே இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதை அறிமுகப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு சாதனம் என்றொரு கதையை எழுதியிருந்தேன். அதற்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பிறகு, தொடர்ச்சியாகச் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்படியாகத்தான், பத்திரிகையில் பணியாற்றச்சொல்லி அழைப்பு வந்தது. எழுத்தாளராக இருந்ததால், மீடியாவுக்கு எழுதுவது என்பது எளிதாக இருந்தது. அதுவரைக்கும், எந்த வேலையைச் செய்வது என்கிற குழப்பம் என்னிடம் இருந்தது. நிருபராக மாறியவுடன் கட்டுரைகள், பேட்டிகள், சிறுகதைகள் எனத் தொடர்ந்து எழுதியபோது, என்னுடைய இடம் இதுதான் என்பதை கண்டுகொண்டேன். அப்படியாக, சுமார் நான்கு வருடங்கள் பத்திரிகையாளராக இருந்தேன். பிறகுதான், தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனம் எழுதப் போனேன்.”

 

கோலங்கள், மெட்டி ஒலி போன்ற தொடர்களில் பணியாற்றும் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது?

“என்னுடைய குறுநாவல் ஒன்று மின்பிம்பங்கள் நிறுவனம் மூலமாக, மறைந்த பாலகைலாசம் அவர்களின் உதவியோடு தொடராக வெளியானது. அப்போதுதான் இயக்குநர் திருமுருகன் எனக்குப் பழக்கமானார். அவர்தான் ஒரு குறுநாவலை எப்படி திரைக்கதையாக மாற்றி, அதற்கு வசனம் எழுதுவது என்கிற நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். ஏற்கனவே எழுதும் பயிற்சி இருந்ததால், என்னால் சிறப்பாக எழுத முடிந்தது. அந்தத் தொடரைப் பார்த்துவிட்டு, இயக்குநர் பாலசந்தர் கூட பாராட்டினார். பிறகு‘காவேரி’ என்றொரு தொடருக்கு எழுதினேன். அதன்பிறகு மூன்றாவது வந்த தொடர்தான் ‘மெட்டி ஒலி’. 

அடிப்படையில், கிளாசிக் என்பதை ஏதேனும் ஒன்றிரண்டு படைப்புகளுக்கு தான் கொடுப்பார்கள் இல்லையா? அந்தவகையில் சீரியலுக்கு கிளாசிக் அந்தஸ்து கொடுக்க வேண்டுமென்றால், அது ‘மெட்டி ஒலி’ தொடருக்குதான் கொடுக்க வேண்டும். எல்லா வகையிலும் செறிவான, வாழ்க்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிற தொடராக அது இருந்தது. இன்னொரு முக்கியக் காரணம், இப்போது போல ஆயிரம் எபிசோட் எல்லாம் தாண்டிப் போகாமல் 750 எபிசோடில் அந்தத் தொடர் முடிந்துவிட்டதும் அதன் சிறப்பம்சாகச் சொல்லலாம். அதேபோல, ‘கோலங்கள்’ தொடரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது!”

 

வசனம் என்பது எப்படி இருக்க வேண்டும்?

“நிறைய பேரு சொல்றமாதிரி, வசனம் என்பது சோற்றில் சேர்த்துக்கொள்கிற உப்பு மாதிரிதான். அது துருத்திக்கொண்டு வெளியே தெரியக்கூடாது. இரண்டு கதாபாத்திரங்கள் பேசும்போது, அந்த வசனங்கள் அப்படியே பார்வையாளனுக்குள்ளே போய் இறங்கிடணும். அவன் பேசுறது வித்தியாசமாக தெரியக்கூடாது. அந்தக் காட்சிகளுக்கு நியாயம் செய்யணும்னு நினைக்கிறேன். அப்படித்தான், நான் படங்களுக்கு வசனங்கள் எழுதறேன்.”

 

நெடுந்தொடர்களுக்கு நிறைய பேர் வசனம் எழுதினாலும், ஒரு சிலர் மட்டுமே வெளியுலகுக்கு தெரிவது ஏன்?

“சினிமாவை விட, சீரியலுக்கு எழுத்தாளர்களின் பங்கு என்பது அதிகம். உதாரணத்துக்கு, மெட்டி ஒலி தொடரின் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி என்பது நிறைய பேருக்குத் தெரியும். அந்தத் தொடரின் திரைக்கதையாசிரியர் முத்துச்செல்வன் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. அவருடைய போட்டோவைக் கூட யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. ஆனால், அவர் ஒரு வெற்றிகரமான ஸ்கீரின்பிளே ரைட்டர். ஒரு பேட்ஸ்மேன் நல்ல பிட்ச் இருந்தால்தான் சிறப்பா விளையாட முடியும். அப்படியான ஒரு பிட்ச்சை, எனக்கு சீரியலில் உருவாக்கித் தந்தவர் முத்துச்செல்வன்தான். அவரைப் போல கவிதாபாரதி, ராஜ்பிரபு, அமிர்தராஜ் என்று நிறைய பேர் இருக்காங்க. இவங்க எல்லோருமே சிறப்பாக எழுதக் கூடியவர்களே. நான் வெளியே தெரியக் காரணம், ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் இருக்கலாம்.”

 

சினிமாவிலும் வெற்றிகரமான வசனகர்த்தாவாக இயங்குகிறீர்கள். உங்களுக்குப் பிறகு நிறைய எழுத்தாளர்கள் சினிமாவிற்கு வந்ததைக் கவனிக்கிறீர்களா?

“நான் கல்லூரியில் படிக்கும்போதே, இயக்குர் ஷங்கர் தன்னுடன் எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களை உடன் வைத்துக்கொண்டுதான் படங்களை இயக்கினார். இவர்கள் இருவருமே வெற்றிகரமான வசனகர்த்தாக்கள். அதன்பிறகு, ஆல்பம் படம் மூலமாக எஸ்.ராமகிருஷ்ணன் வந்தார். அதன் தொடர்ச்சியாக, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டவர்களும் சினிமாவுக்கு எழுதுகிறார்கள். இதற்கு இடையில்தான் நானும் எழுத வந்தேன். ஒருவேளை என்னுடைய நாவலான ‘அழகர்சாமியின் குதிரை’ படமாகவும் வெளிவந்ததால், அப்படியொரு தோற்றம் உருவாகியிருக்கலாம். ஆனால், உண்மை அது இல்லை!

 

சினிமாவுக்கு எழுத்தாளர்கள் பங்கு அவசியமானதா?

“இரண்டு நெடுந்தொடர்களுக்கு பிஸியாக வசனம் எழுதிக்கொண்டிருந்தபோதுதான், இயக்குநர் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக் குழு’வுக்கு வசனம் எழுத அழைத்தார். தொடர்களுக்கு எழுதிக்கொண்டேதான், அந்தப் படத்துக்கும் எழுதினேன். அந்தப் படம் அடுத்தடுத்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தது. பொதுவாக, சினிமாவில் இயக்குநர்கள் டெக்னிக்கலாக திறமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், கதை ஒன்றுதான் பிரச்சினையாக இருக்கிறது. புதுசாக கதை ஒன்று தேவைப்படும்போது, அப்போதுதான் எழுத்தாளர் என்பவர் அவசியமாகிறார். அதை நிறைய இயக்குநர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ‘வட சென்னையின் கதை’ என்றொரு நூலை பாக்கியம் சங்கர் எழுதினார். அவரை இப்போது பலரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். முகநூல் போன்ற சமூக வலைதளங்களும் எழுத்தாளர்களை அடையாளம் காண உதவியிருக்கு. அதனால், எப்போதும் சினிமாவுக்கு ரைட்டர்ஸின் பங்கு அவசியம்தான்!”

 

அடுத்து, இயக்குநராவதுதான் திட்டமா?

“ஆமாம். ஒரு படத்துக்கான திரைக்கதையை மும்முரமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். முடித்தவுடன், ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற திட்டமும் இருக்கு.” இயல்பை உணர்த்தும் பாஸ்கர்சக்தியின் எழுத்து போலவே, அவரது பேச்சும் அமைந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் எல்லையை, அது ஒருபோதும் தாண்டுவதில்லை. தனது பலம் எது என்று உணர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் பாக்கியம் அது..!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles