எய்ட்ஸ் நோயை மையமாக வைத்து உருவாகும் ’சில சமயங்களில்’.. பிரியதர்ஷனுக்கு அடுத்த விருது ரெடி!?

Thursday, September 22, 2016

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் தயாராகிறது. ஆனாலும், சிலருக்கே பல மொழிகளில் படமெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு தயாராகும் திரைப்படங்கள் மூலமாக, சிலருக்கு மட்டும் எல்லா திசைகளிலும் வெற்றிகள் கிடைக்கும். அந்தப் பட்டியலில் தவிர்க்க முடியாதவர் இயக்குனர் பிரியதர்ஷன். கேரளம்தான் இவரது பூர்வீகம் என்றாலும், பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் இப்போதும் இவருக்கு மவுசு இருந்துகொண்டுதான் இருக்கிறது. 

பொதுவாக, பிரியர்தர்ஷன் படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது. அதே நேரத்தில், கமர்ஷியல் சினிமாவுக்குரிய மற்ற அம்சங்களும் அவரது படங்களில் தவறாமல் இடம்பிடிக்கும். சிறந்த படங்களை இயக்கி வசூலில் வேட்டையாடினாலும், எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய யதார்த்த சினிமாக்களைத் தருவதே பிரியதர்ஷனின் ஆசை. அந்தவகையில், அவர் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘காஞ்சிவரம்’ இரண்டு தேசிய விருதுகளை அள்ளித் தந்தது. 

 

நெசவாளர்களின் வாழ்வியலைப் பதிவுசெய்த ‘காஞ்சிவரம்’ படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி இருவரும் கதையின் பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். தற்போது அதே கூட்டணியோடு இணைந்து, மேலும் ஒரு அழுத்தமான கதையுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன். ‘சில சமயங்களில்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எய்ட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

இதற்காக, எட்டு கதாபாத்திரங்கள் தங்களுடைய எய்ட்ஸ் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியிருக்கிறாராம் பிரியதர்ஷன். இப்படம் ‘கோல்டன் குளோப் விருது விழா’வில் திரையிடத் தேர்வாகியுள்ளது. அமெரிக்காவில் வருகிற அக்டோபர் 6ம்தேதி நடைபெறும் விழாவில், ‘சில சமயங்களில்’ திரையிடப்படவுள்ளது. 

 

‘காஞ்சிவரம்’ படத்தைப் போலவே, இந்தப் படமும் தேசிய விருதைக் குறிவைத்தே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். இந்தப்படத்தை, இயக்குநர்கள் பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இருவரும் கூட்டாகத் தயாரித்துள்ளனர். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநர் பிரியதர்ஷனை கௌரவித்து மகிழ்ந்தது படக்குழு. வெற்றி யானை பின்னே வர, கொண்டாட்ட ஓசை மட்டும் முன்னே ஒலிக்கிறது!

- கிராபியென் ப்ளாக்
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles