நாயகனாக நடிக்க, யாருமே முன்வரவில்லை! ’கள்ளன்’ இயக்குநர் சந்திரா பேட்டி!

Thursday, September 15, 2016

“எதிர்பாராத ஒரு சந்திப்பின்போது இயக்குநர் ராம் சார், ’இன்னும் படம் பண்ணலையா?’ன்னு கேட்டார். ’ரொம்ப விரக்தியில இருக்கேன். படம் பண்ற ஐடியாவே போயிடுச்சு. திரும்பவும் வேலைக்கு போய்டலாம்னு இருக்கேன்’னு சொன்னேன். ஆனா அவர், ’நம்முடைய கடைசி படம் பண்றவரைக்கும் கூட நம்முடைய முயற்சியை விடவே கூடாது’ன்னு சொல்லி, சில தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.

நிறைய நடிகர்களிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்தார். ’எப்படியாவது என்னை டைரக்டராக்கிப் பார்க்கணும்’ என்கிற ராமின் ஆசைதான், என்னை உங்க முன்னாடி உட்கார வச்சிருக்கு” எனப் பேசும் இயக்குநர் சந்திராவின் பேச்சில் தெறிக்கிறது நம்பிக்கையின் கீதங்கள். பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று அறியப்பட்ட சந்திரா, ‘கள்ளன்’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். எழுத்து முதல் திரைப்படம் வரை, எல்லா விஷயங்களைப் பற்றியும் அவர் மனம்திறந்து பேசினார். 

 

“அடிப்படையில் நாம எல்லோருமே வேட்டை சமூகத்தை சார்ந்தவர்களாகத்தான் இருந்தோம். இடையில் உருவான அரசாங்கம், வேட்டைக்கு தடைவிதிச்சதால இப்போ நாம வேற மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோம். அப்படி இருக்கும்போது, வேட்டையையே தொழிலாக வச்சிக்கிட்டு வாழுறான் ஒருத்தன். அது இல்லாமப் போகும்போது, அவன் வாழ்க்கை என்னவாக மாறுது என்பதை மையமாக வைத்துதான் ‘கள்ளன்’ படத்தோட கதையை எழுதியிருக்கேன்.

 

இலக்கியத்தைப் பற்றி தெரிந்த அளவுக்கு, எனக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனுடைய தொழில்நுட்பங்களைக் கூட, நான் அறிந்து வைத்திருக்கவில்லை. இந்த சூழலில்தான், இயக்குநர் அமீர் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய முதல்படம் ‘பருத்திவீரன்’. அந்தப் படத்தில் ஏ.டி.யாக (அஸிஸ்டென்ட் டைரக்டர்) சேர்ந்த பத்து நாட்களிலேயே, ஓரளவுக்கு சினிமா தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். ஏன்னா, அமீர் எந்த கேள்வியைக் கேட்பார் என்று யாருக்குமே தெரியாது. அதனால், டைரக்ஷன் டீமில் உள்ள எல்லோருமே படம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருப்போம். ஒரு சினிமாவில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை, அந்தப் பத்து நாட்களே எனக்கு சொல்லிக் கொடுத்தது. 

 

அமீர் எவ்வளவ சுதந்திரம் கொடுத்தாரோ, அதே அளவுக்கு சுதந்திரம் கொடுத்து சினிமாவைச் சொல்லிக் கொடுத்த மற்றொருவர் என்னுடைய நண்பரும் இயக்குநருமான ராம். சினிமாவுக்கு எப்படி கதை, திரைக்கதை எழுத வேண்டும் என்பதை, அவரோட பட்டறையில்தான் பயின்றேன். என்னுடைய திரை வாழ்க்கைக்கு அடித்தளமிட்டவர்கள் இவர்கள் இருவரே!

 

பொதுவாக, தமிழ் சினிமாவில் ஒரு உதவி இயக்குநர் முதல் படத்தை எடுக்க நிறைய போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதேமாதிரியான போராட்டம் எனக்கும் உண்டு. ஆனால், ஒரு பெண்ணாக நான் கொஞ்சம் கூடுதலாகப் போராட வேண்டியிருந்தது. படத் தயாரிப்பு கம்பெனிகளுக்குப் போய் ஒரு அஸிஸ்டென்ட் டைரக்டர் பத்து முறை கதவை தட்டுறார்னா, ஒரு பெண்ணாக நான் நூறு முறை தட்ட வேண்டியிருந்தது. சினிமா மட்டுமில்லை, பெண்கள் கால்பதிக்காத எந்தத் துறையிலும், ஒரு பெண் தன்னை நிலைநிறுத்தக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அப்படி ஆறு வருட கடும் முயற்சிகளுக்குப் பிறகுதான், ‘கள்ளன்’ படம் இயக்கும் வாய்ப்பு கிடைச்சது. கதை கேட்ட அன்றே, தயாரிப்பாளர் மதியழகன் படம் தயாரிக்க முன்வந்ததில் எனக்குப் பெரிய சந்தோஷம்!

 

இந்தப் படத்தோட கதையை, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் சொன்னேன். ஆனால், யாருமே நடிக்க முன்வரவில்லை. அப்படியான சமயத்தில்தான், டைரக்டர் கரு.பழனியப்பனை நாயகன் பாத்திரத்துக்கு தேர்வு செய்யலாம்னு முடிவெடுத்தேன். தன் மனசுல இருக்கிறதை வெளிப்படையாகவும் தைரியமாகவும் சொல்லக்கூடியவர் அவர். என்னுடைய கதைக்கும், அப்படி ஒருத்தர்தான் தேவைப்பட்டார். அதனால அவரையே தேர்ந்தெடுத்தோம். 

 

ஏற்கனவே நிறைய படம் இயக்கியவர். ஆனாலும், படப்பிடிப்பில் இயக்குநரா நான் எது வேணும்னு சொல்றேனோ, அதை உள்வாங்கி நடிச்சுக் கொடுத்தார். இந்தப் படத்துக்கு, அவரோட அர்ப்பணிப்பு பெரிய பலம்னு சொல்லுவேன்!

 

படத்துக்குப் பொருத்தமான கதாநாயகிக்கு, நிறைய பேரைப் பார்த்தேன். ஆனா, யாரும் என்னோட மனசுக்கு நெருக்கமாக இல்லை. படப்பிடிப்புக்குப் போகிற வரைக்கும், நாங்கள் நாயகியைத் தேர்வு செய்யவே இல்லை. கடைசி நேர பரபரப்பில் இருக்கும்போதுதான், நண்பர் ஒருவர் வாட்ஸ்அப்பில் ஒரு பெண்ணோட படத்தை அனுப்பி வைச்சாங்க. நான் தேடிகிட்டு இருந்தது சாதாரண ஒரு பெண்ணைத்தான். அந்த வாட்ஸ்அப் போட்டோவுல இருந்தது, படத்தினுடைய நாயகி நிகிதா. கேரளாவைச் சேர்ந்த அவங்க, டெல்லியில் செட்டிலாயிருந்தாங்க. இந்தப் படத்துக்காக, அவங்களை சென்னைக்கு அழைச்சிட்டு வந்தோம்” என்றவரிடம், ‘கள்ளன் கமர்ஷியல் படமா?’ என்று கேட்டோம். 

 

”பெண் இயக்குநர்கள் கமர்ஷியல் படம் இயக்குவார்களா என்கிற கேள்விக்கு, ’கள்ளன்’ நிச்சயமாகப் பதில் சொல்லும். இந்தப் படத்தை  ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள பிலிமாகத்தான் பண்ணியிருக்கேன். இந்தப் படத்துல சிறுத்தை, பண்றி வேட்டையை எடுத்திருக்கேன். அப்புறம், கதையின் நாயகன் சிறையிலிருந்து தப்பித்துப் போகிற ஒரு அட்வென்ச்சர் காட்சியும் கண்டிப்பாகப் பேசப்படும். இது தவிர, ஒரு குத்துப்பாட்டும் படத்துல இருக்கு. அதனால ‘கள்ளன்’ படத்தை நம்பி தியேட்டருக்கு வரலாம்!” என்று நம்பிக்கையுடன் பேசி முடித்தார் சந்திரா. 

 

தமிழ் சினிமாவில் பெண்களின் வரவு என்பது அரிதானது. தன்னுடைய எழுத்தில் தற்காலச் சமூகத்தைப் பிரதிபலித்துவரும் சந்திரா, ‘கள்ளன்’ படத்தின் மூலமாகத் திரையிலும் தனது கலையம்சத்தை வெளிக்காட்டுவார் என நம்பலாம்!

 

மேலும் படிக்க:

காக்காமுட்டைக்கு முன்னால் எடுக்க நினைத்த படம் ’ஆண்டவன் கட்டளை’! - இயக்குனர் எம்.மணிகண்டன் பேச்சு

படத்துக்கு மிகப்பெரிய பலம் கமல் சார்! ’மீன் குழம்பும் மண் பானையும்’ இயக்குநர் அமுதேஷ்வர்

‘சவுகார்பேட்டை’யில் கற்றுக்கொண்டதை  ‘பொட்டு’ படத்தில் செயல்படுத்தியிருக்கிறேன்! - இயக்குனர் வடிவுடையான் 
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles