பிருத்வி + லாலேட்டன் + முரளிகோபி = கலக்கல் காம்போ!!

Thursday, September 15, 2016

நடிகர் தனுஷின் இயக்கத்தில் ’பவர்பாண்டி’ உருவாகிறது என்ற தகவலையே, இன்னும் தமிழ் ரசிகன் சீரணிக்கவில்லை. காரணம், இந்தப் படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்கப் போகிறார். பிரசன்னா, நதியா உட்பட ஒரு பட்டாளமே இதில் நடிக்கவிருக்கிறது. ஆனால், தனுஷ் இதில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு நடிகர் இயக்குனராகும்போது, வேறொரு நடிகரை வைத்துப் படமெடுப்பது ஹாலிவுட்டில் சாதாரணமான விஷயம்.

ஆனால், அது இந்தியாவில் செல்லுபடியானதில்லை. அமீர்கான் தொடங்கி சுதீப் வரை, எல்லா நாயகர்களும் தங்களது இயக்கத்தில் தானே ஹீரோவாக நடித்துக் கொண்டார்கள்; நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து விலகி நின்றதால் தனித்துத் தெரிந்தார் தனுஷ். தற்போது இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் மலையாள நடிகர் பிருத்விராஜ்.

 

பிருத்விராஜ் ஒரு ரசனையான படைப்பாளி. அவர் நடித்த படங்களை வரிசைப்படுத்தினாலே, இது புரியும். லாலேட்டனும் மம்மூக்காவும் கமர்ஷியல் படங்களில் நடித்து சரிவைச் சந்தித்த வேளையில், அசாதாரணமான வெற்றிகள் கொடுத்தவர் பிருத்வி. நடிக்கவந்த சில ஆண்டுகளிலேயே, சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர். 

 

மாலிவுட்டில் ஜனப்ரிய நாயகனாக கோலோச்சிக் கொண்டிருக்கும் திலீப்புக்குப் போட்டியாக, தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களில் கலக்கியவர் இவர். ஆனாலும், சில ஆண்டுகளுக்கு முன் தனது பாதையை மாற்றிக் கொண்டார் பிருத்வி. வெவ்வேறு கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். அதனாலேயே, இவர் நடிப்பில் வெளியான படங்கள் வித்தியாசமான அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தந்தன. உருமி, இந்தியன் ருபி, மெமரீஸ், மும்பை போலீஸ், செல்லுலாய்ட், டபுள் பேரல், என்னு நிண்டே மொய்தீன், பாவாட என்று இவரது ஹிட்லிஸ்ட் நீள்கிறது. இவை வெறும் கமர்ஷியல் படங்கள் மட்டுமல்ல, இதில் சில புதிய முயற்சிகளையும் செய்திருப்பார் பிருத்வி. இதில் சில படங்களை, தானே முன்வந்து தயாரித்திருக்கிறார் பிருத்வி. சமீபத்தில் இவர் நடித்த ‘ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ்’, திரைக்காதலர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஓணம் பண்டிகைக்காலத்தில் வெளியாகியிருக்கும் ‘ஊழம்’ படம் கூட, சிறப்பான ஓப்பனிங் கண்டிருக்கிறது. 

 

வெற்றியின் நாயகனாக இருந்தாலும், பிருத்வியின் தேடல் எப்போதும் மேல்நோக்கியே இருந்திருக்கிறது. அதற்கேற்றாற் போல, இன்று வெளியாகியிருக்கிறது ஒரு அறிவிப்பு. ‘லூசிபர்’ என்ற படத்தை இயக்கப் போகிறார் பிருத்விராஜ். இந்தப் படத்தின் நாயகன் மோகன்லால். என்ன, கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா? 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ராஜேஷ் பிள்ளையின் இயக்கத்தில் தயாராகவிருந்தது இந்தத் திரைப்படம். திடீரென்று ராஜேஷ் பிள்ளையின் மரணம் நிகழ, அந்தத் திட்டம் அப்படியே நின்றது. இந்த நிலையில்தான், திருவோணக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கிறது புதிய அறிவிப்பு. இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதுபவர் முரளிகோபி. மறைந்த ‘பெரு’ நடிகர் பரத்கோபியின் மகன். இவர் ஒரு தேர்ந்த நடிகரும் கூட. 

 

’திருஷ்யம்’ படத்திற்குப்பிறகு, மோகன்லாலின் படங்கள் ‘அடிபொலி’ ரகத்தில் அமையவில்லை. தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ’ஒப்பம்’ படம் கூட, கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ‘லூசிபர்’ அறிவிப்பு லாலேட்டன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சினிமாவைக் காதலிப்பவர்களால் மட்டுமே, அற்புதமான சினிமாக்களைத் தர முடியும். ‘லூசிபர்’ அப்படியொரு அனுபவத்தைத் தரும் என்று தாராளமாக நாம் நம்பலாம்!

- பா.உதய் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles