‘சவுகார்பேட்டை’யில் கற்றுக்கொண்டதை  ‘பொட்டு’ படத்தில் செயல்படுத்தியிருக்கிறேன்! - இயக்குனர் வடிவுடையான் 

Thursday, September 15, 2016

பேய்களை மையமாக வைத்து, இரண்டாவது முறையாகக் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் வி.சி.வடிவுடையான். ’தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தின் மூலமாக, ஆக்‌ஷன் படங்களை விரும்புபவர்களின் குட்புக்கில் இடம்பிடித்தவர். ‘சவுக்கார்பேட்டை’ படத்தில் கிளாமர் குயீன் லட்சுமி ராயை அழகான பேயாக்கி நம்மை மிரட்டியவர். தற்போது இவரது இயக்கத்தில் தயாராகிவருகிறது ‘பொட்டு’ திரைப்படம்.  

பரத், இனியா நடிக்கும் இந்தப் படத்தில் நமீதாவும் உண்டு. அவர் பேய்களை ஆட்டுவிக்கும் பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ‘பொட்டு’ படத்தில் இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றி, நம்மிடம் மனம்திறந்தார் வடிவுடையான்.

 

'தொடர்ந்து திகில் படமாகத் தந்து ரசிகர்களை பயமுறுத்துறீங்களே' என்றதற்கு, “திகில் படங்களா வந்துட்டு இருந்த காலகட்டத்துல, நானும் ‘சவுக்கார்பேட்டை’ படத்தை எடுத்தேன். அந்தப் படத்துல கத்துகிட்ட விஷயத்தை, இப்போ ‘பொட்டு’ படத்துல செயல்படுத்தியிருக்கேன். பொட்டுங்கிற மங்களகரமான பெயரை, எதுக்கு பேய் படத்துக்கு வச்சிருக்காங்கன்னு யோசிக்காதீங்க. திகில் படமாக இருந்தாலும், இதுல காமெடி நிறையா இருக்கும். நீங்க ரசிக்கும்படியான கதை இதுல இருக்கு. முதல்ல திகில், அப்புறம் காமெடின்னு படம் முழுக்க இருந்தாலும், தியேட்டர்ல இருந்து வெளியே வரும்போது கனத்த இதயத்தோடதான் வெளியே வருவீங்க.

 

சமீபமாக நிறையா ஹாரர் படங்கள் வருது. அதுல இருந்து இந்தப் படத்தை  தனிச்சுக் காட்டணும்னு, நாங்க கதையில நிறைய ஒர்க் பண்ணியிருக்கோம். போன படத்தை விட நல்லா பண்ணனும்னு, இன்னும் நாலு படி மேல உழைச்சிருக்கோம். டெக்னிகலா நிறையா விஷயங்கள் இருக்கு. 

 

இந்தப் படத்துல நடிகர் பரத்தை வேறு ஒரு பரிமாணத்துல பார்க்கலாம். அதோட, நடிகை நமீதாவை நீங்க பார்க்கப் போற கோணமே வேற மாதிரி இருக்கும். அவங்க கண்டிப்பாக கிளாமரா வரமாட்டாங்க. கதையம்சம் ரொம்ப நல்லா இருந்ததால, நமீதா வித்தியாசமா நடிக்க சம்மதிச்சாங்க. ஒரு நடிகைய ஒரே மாதிரி காட்டுறது, நல்ல டைரக்டரோட வேலை இல்லை. அந்த ஆர்ட்டிஸ்ட்கிட்ட இருக்குற வெரைட்டியான திறமைகளை வெளிக்கொண்டு வரணும். இதுல அவங்க மாந்த்ரீக தன்மை இருக்குற ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. 

 

இதுல இனியா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசின்னு ஒரு பட்டாளமே களமிறங்கியிருக்காங்க. இது நல்ல விஷூவல் ட்ரீட்டா இருக்கப் போகுது. அது மட்டுமில்லை, தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு ஒரே நேரத்துல மூன்று மொழிகள்ல பிரம்மாண்டமா வரப்போகுது. 

 

இந்தப் படத்தை முழுக்க முழுக்க இருட்டுலதான் ஷூட் செஞ்சிருக்கோம். நிஜமான சுடுகாடு, பேய் பங்களா இங்கெல்லாம் தனி ஆளா போகப் பயப்படுவீங்க. நாங்க குழுவாகப் போனதால, எங்களுக்கு அவ்வளவா ஒண்ணும் தெரியலை.

 

இதுக்கு முன்னாடி எடுத்த படமும் பேய் படமாச்சே. இதுவும் அதே மாதிரி இருக்குமோன்னு நீங்க பயப்பட வேண்டாம். ‘பொட்டு’ படத்தோட திரைக்கதையை வித்தியாசமா ட்ரீட் பண்ணியிருக்கேன்.  அதனால, உங்க எல்லாருக்கும் அருமையான விஷுவல் ட்ரீட் காத்துட்டு இருக்கு” என்று திகிலை மேலும் அதிகமாக்கினார் வடிவுடையான். 

 

வடிவுடையான் அருகே, அமைதியாக நின்று கொண்டிருந்தார் நடிகர் ஆர்யன். ‘பான்பராக் ரவி’ என்று சொன்னால், நம்மூர் ரசிகர்கள் நன்கறிவார்கள். ‘பொட்டு படத்துல நீங்க என்ன பண்றீங்க?” என்றதும், சிரித்தவாறே பேசத் தொடங்கினார் ஆர்யன். 

 

”இன்னும் எல்லாரும், என்னை ‘பான்பராக் ரவி’ன்னுதான் ஞாபகம் வச்சிருக்காங்க. இயக்குனர் சொன்னமாதிரி காமெடி, செண்டிமெண்ட் கலந்த ஒரு திகில் படம் ‘பொட்டு’. டப்பிங் தியேட்டர்ல படத்தைப் பார்க்கும்போது, எனக்கே பயமாகத்தான் இருக்கு. இதுவரைக்கும் நடிச்ச எல்லா படங்கள்லயும், நான் வில்லனாகத்தான் நடிச்சிருக்கேன். இந்த படத்துல, இயக்குனர் வடிவுடையான் எனக்கு அப்பாவியான ஒரு கேரக்டரைக் கொடுத்திருக்காரு. கடைசில வில்லனா மாறுவேன்னு, நீங்க நினைக்கலாம். ஆனா அப்படி எதுவும் இல்லேங்க. கடைசி வரைக்கும், என்னோட கேரக்டர் அப்பாவியாத்தான் இருக்கும். 

 

இதுமாதிரி, இந்தப் படத்துல டிவிஸ்ட் நிறையா இருக்கு.எனக்கு படத்துல ரெண்டு பாடல் இருக்கு. எனக்கு டான்ஸ் தெரியாதுன்னு நினைச்சு, அந்த பாடல்களை ஷூட் பண்ண 5 நாட்கள் ஒதுக்கியிருந்தாங்க. ஏற்கனவே டான்ஸ் தெரிஞ்சதாலே, மூன்று நாட்கள்ல பாட்டு முடிஞ்சு போச்சு. 

 

ஓரு சீன் எப்படி வரணும்னு, வடிவுடையான் நம்மகிட்டே நடிச்சுக் காட்டுவார். நமக்கும், அவரு என்ன நினைக்கிறார்னு புரிய வரும். நல்ல அவுட்புட் கொடுக்க முடியும். இந்தப் படக் குழு ரொம்ப இளமையான, ஆற்றல் மிகுந்த டீம். பரத், இனியா, நமீதா இப்படி எல்லோருக்கும் பெரிய பிரேக்கா அமையப்போகுது ‘பொட்டு‘.

 

என்னைப்பொறுத்தவரைக்கும், ஒரு நடிகன் எல்லாவிதமான கதாபாத்திரங்கள்லயும் நடிக்கணும். இதுவரை என்னை எல்லாரும் வில்லனாதான் பார்த்திருக்காங்க. இன்னும் சொல்லப்போனால், நான் ஒர்க் பண்ணாத ஸ்டண்ட் மாஸ்டரே இல்லேன்னு தான் சொல்லணும். அப்படி இருந்த என்னை, இரண்டு பாட்டு கொடுத்து ஆட வச்சதும் இல்லாம, ஒரு கேரக்டரையும் கொடுத்து நடிக்க வச்சிருக்காரு. இந்தஇடத்துல நான் என்னோட இயக்குனர் வடிவுடையானுக்கு நன்றி சொல்ல விரும்பறேன்” என்றவரிடம், ’படப்பிடிப்பில் பயமான அனுபவம் ஏதும் வாய்த்ததா’ என்றோம். 

 

”கொல்லிமலையில் ஒரு கிராமம். இன்னும் அந்த கிராமத்துல டெக்னாலஜி அவ்வளவா வளரலை. ஒரு வருஷத்துக்கு முன்னாடிதான் கரண்ட் கனெக்ஷனே அவங்களுக்கு வந்திருக்கு. நாம முன்னாடி வாழ்ந்த வாழ்க்கை, இப்போ வாழணும்னு நினைக்கிற வாழ்க்கையைத்தான் அவங்க வாழ்ந்திட்டு இருக்காங்க. அப்படி ஒரு அழகு அந்தக் கிராமம். அது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு. கொல்லிமலைன்னா பேய்கள் உலாவிட்டு இருக்கும்னு யாரோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ ’பொட்டு’ ஷூட்டிங்குக்காக முதன்முதலாகக் கொல்லிமலைக்குப் போனது, ரொம்ப திகிலான அனுபவம்” என்று நெகிழ்ந்தார் ஆர்யன். 

 

திகிலுடன் நகைச்சுவையைக் கலப்பது, தற்போதைய ஹாட் ட்ரெண்ட். ‘பொட்டு’ படமும், அந்த வரிசையில் நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று நம்பலாம். 

 

மேலும் படிக்க:

படத்துக்கு மிகப்பெரிய பலம் கமல் சார்! ’மீன் குழம்பும் மண் பானையும்’ இயக்குநர் அமுதேஷ்வர்

காக்காமுட்டைக்கு முன்னால் எடுக்க நினைத்த படம் ’ஆண்டவன் கட்டளை’! - இயக்குனர் எம்.மணிகண்டன் பேச்சு

நூறு கலைஞர்களை உருவாக்குறதுதான் ஆரிமுகத்தோட கனவு! - நடிகர் ஆரி

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles