படத்துக்கு மிகப்பெரிய பலம் கமல் சார்! ’மீன் குழம்பும் மண் பானையும்’ இயக்குநர் அமுதேஷ்வர்

Thursday, September 15, 2016

“மலேசியாவுல எங்க படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்ய போயிருந்தோம். அப்போ ‘கபாலி’ படப்பிடிப்பு நடந்துகிட்டு இருந்துச்சு. படத்தோட மேனேஜர் மூலமாக துஷ்யந்த் சார் வந்திருப்பதை தெரிஞ்சு, ரஜினி சார் எங்களை அழைச்சாரு. நாங்க எல்லோரும் அவரைப் போய் சந்திச்சோம். படத்தோட தலைப்பை கேட்டவர் “ரொம்ப சந்தோஷம். நிச்சயம் இந்தப் படம் ஹிட் அடிக்கும்”னு சொல்லி வாழ்த்தினாரு.

ரஜினி சாரோட ஆசிர்வாதம் எங்க டீமுக்கு கிடைச்ச பெரிய ஜாக்பாட்!” என்று உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் அமுதேஷ்வர். ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலமாக கோலிவுட்டில் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் புதியவர். மனம் இதழுக்காக அவரைச் சந்தித்தபோது..!

 

“மலேசியாதான் நமக்கு நெருக்கமான ஊரா இருந்துச்சு. அப்புறம் சவுதி அரேபியா. நிறைய பேரு படிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகுதான், இப்போ அமெரிக்கா, ஐரோப்பிய தேசங்களுக்கு எல்லாம் போய் வேலை பார்க்கிறாங்க. நம்ம ஆட்கள் இங்க இருந்து மலேசியாவுக்குப் போனதற்குக் காரணமே வசதியின்மைதான். அப்படிப் போன பல பேரில், சிலருக்குதான் வேலை கிடைச்சிருக்கு. பல பேரு சொந்தமா ஏதாவது தொழில் செய்துதான் முன்னேற வேண்டி இருந்துச்சு. ஆனா தொழில் செய்றதுக்கான அடிப்படைப் பொருளாதாரம் கூட அவங்களுக்கு இல்லை. அதனால பேப்பர் போடறது, ஓட்டல் நடத்துறது, கார் கழுவுற வேலைகளை செஞ்சு, படிப்படியா மேலே வந்தாங்க. ரோட்டோரம் சின்ன கடைகளைப் போட்டு வியாபாரம் செஞ்சாங்க.

 

காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி என்கிற ஊர்ல, அண்ணாமலை செட்டியார் என்பவர் இருந்தாரு. அவரோட மனைவி திடீர்னு இறந்து போயிடுறாங்க. தன்னோட கைக்குழந்தையோட மலேசியா போனாரு, அங்கே போய் ஓட்டல் தொழில் செஞ்சு பெரிய ஆளாயிட்டாரு. அப்படி நம்மோட பாரம்பரியத்தோட போன ஒருத்தருக்கும், மலேசிய கலாச்சாரத்தோட வாழ்ற இளைஞனுக்கும் இடையேயான முரண்பாடுகளைத்தான் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படமா உருவாக்கியிருக்கிறோம்.

 

எங்க படத்துக்கு ஆனந்த் சார் புரொடக்ஷன் எக்ஸ்கியூடிவ்வா இருந்தாரு. இந்தப் படத்தை முதலில் மலேசிய புரொடியூசர் ஒருத்தர்தான் தயாரிக்கிறதா இருந்துச்சு. இந்தப் படம் அப்பா, பையன் கதை என்பதால முதலில் பையன் கேரக்டருக்கு ஒருத்தரைத் தேர்வு செஞ்சு வைச்சிட்டோம். அப்பா பாத்திரத்துக்கு, என் கண்முன்னால வந்தவரு பிரபு சார்தான். ஏன்னா, தென்னிந்தியாவிலேயே அப்பா பாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமான நடிகர்னு அவரைத்தான் சொல்லுவேன். அதனால அவர்கிட்டே போய் கதை சொன்னதும், தான் நடிக்கிறதா சொல்லிட்டாரு. சில காரணங்களால் படம் இயக்குறது தள்ளிப்போச்சு. அந்த சமயத்துல துஷ்யந்த் சார் ஈஷான் புரொடக்ஷன்ஸ் என்கிற படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பிச்சு, கதை கேட்டுகிட்டு இருந்தாரு. 

 

அப்போ ஆனந்த் மூலமாக நானும் போய் கதை சொன்னேன். அவங்களுக்கு கதை பிடிச்சிடுச்சு. அது மட்டுமில்லாமல், இதுல பிரபு சாரும் நடிக்கிறார்னு தெரிஞ்சதும், உடனே படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிச்சிட்டாங்க. படத்தை அபிராமி துஷ்யந்தும் சேர்ந்து தயாரிக்கிறாங்க. அதோட, படத்தின் காஸ்ட்யூம் டிசைனிங்கையும் அவங்களே பார்த்துக்கிட்டாங்க. 

 

ஈஷான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துல, ஏற்கனவே காளிதாஸ் ஜெயராமை தேர்வு செஞ்சு வச்சிருந்தாங்க. இந்தக் கதைக்கு அவர் பொருந்தி வந்ததால, அவரையே கதாநாயகனா ஆக்கிட்டோம். அவருக்கு ஜோடியா ஆஷ்னா சாவேரி நடிச்சிருக்காங்க. படத்தோட மற்றொரு ஸ்பெஷல் பூஜா குமார். ஏற்கனவே கமல் சாரோட இரண்டு படங்கள் நடிச்சிருந்தாங்க, இந்தப் படத்தின் மூலமாக, மீண்டும் நடிக்க வந்திருக்காங்க. மலேசியாவில் இருக்குற ‘மாலாக்கா’ என்கிற பெண் டானா நடிச்சிருக்காங்க. நிச்சயம், அவங்க பாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில பேசப்படும். 

 

வழக்கமாக, நடிப்புல ஊர்வசி மேடத்தை பெண் கமல்ஹாசன்னு சொல்வாங்க. அவங்களும் இந்தப் படத்துக்கு மற்றொரு பலம். காமெடி டானாக எம்.எஸ்.பாஸ்கர் வர்றாரு. இதெல்லாமே எங்களுக்குக் கிடைத்த ஆச்சர்யமமான விஷயங்கள். இதற்குப் பிறகு, படத்துல ஒரு சின்ன கேரக்டருக்கு ஒரு பெரிய நடிகர் தேவைப்பட்டாரு. அப்போ, அவர் எங்களுக்குக் கிடைச்சதுதான் படத்துக்கு மிகப்பெரிய பலமா அமைஞ்சது. அவர்தான் கமல்ஹாசன் சார்!

 

ராம்குமார் சாரும் துஷ்யந்த் சாரும், வேறு சில காரணங்களுக்காக கமல் சாரைப் போய் சந்திச்சிருக்காங்க. அப்போ படத்தைப் பத்தி, கமல் சார் கேட்டிருக்கார். தங்களோட படத் தயாரிப்பு பற்றி, இவங்க சொல்லியிருக்காங்க. கமல் சார் படத்துல நடிக்கணும்னு கேட்டதும், அவர் மறுக்கலை. பிறகு, அவரைப்போய் நாங்க சந்திச்சோம். அப்படித்தான் கமல்சார் இந்தப் படத்துக்குள்ள வந்தாரு. படப்பிடிப்புக்கு குறித்த நேரத்துக்கு வந்து, எங்க கூடவே ஒரு நாள் முழுக்க இருந்து நடிச்சு கொடுத்தாரு. சாப்பிட மட்டும்தான் ’பிரேக்’ எடுத்திருக்கிட்டாரு. கேரவேன் பக்கம் கூட போகாம, முழு அர்ப்பணிப்போட தன்னோட பாத்திரமா இந்தப் படத்துக்கு ஒப்புக்கொடுத்திருக்காரு. அவரு எங்க கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் பெரிய சந்தோஷமா இருந்துச்சு. ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தை பேண்டஸி கலந்து எடுத்திருக்கோம். அந்தப் படத்தோட பேண்டஸியா நாங்க கமல் சாரைப் பார்த்தோம்” என்று ஆச்சர்யம் விலகாமல் பேசினார். 

 

முதல் படத்திலேயே ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களின் அறிமுகம் கிடைப்பது எல்லா இயக்குநர்களுக்கும் வாய்க்காது. அது அமுதேஷ்வருக்கு கிடைத்திருப்பது, அவரின் உழைப்புக்கு கிடைத்த வெகுமானம். 

 

மேலும் படிக்க:

காக்காமுட்டைக்கு முன்னால் எடுக்க நினைத்த படம் ’ஆண்டவன் கட்டளை’! - இயக்குனர் எம்.மணிகண்டன் பேச்சு

நாயகனாக நடிக்க, யாருமே முன்வரவில்லை! ’கள்ளன்’ இயக்குநர் சந்திரா பேட்டி!

‘சவுகார்பேட்டை’யில் கற்றுக்கொண்டதை  ‘பொட்டு’ படத்தில் செயல்படுத்தியிருக்கிறேன்! - இயக்குனர் வடிவுடையான் 
 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles