எல்லோரையும் வசியப்படுத்தும் தோனி மந்திரம்!

Thursday, September 8, 2016

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திரசிங் தோனி. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவான உலகக்கோப்பையை, இந்தியாவிற்குப் பெற்றுத்தந்தவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசும் படம்தான் ‘M.S. Dhoni: The Untold Story’. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிக்க வருகிறது.

தோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த்சிங் ராஜ்புத் நடித்திருக்கிறார். இந்தியத் திருநாட்டின் மீது, தோனிக்கு அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரது விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, ஏற்றுக்கொண்ட பொறுப்பை வெற்றிகரமாக செய்துமுடிக்கும் திறன் ஆகியவற்றைப் பற்றி, இப்படம் விரிவாகப் பேசுகிறது. 

மகேந்திரசிங் தோனி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தோனி நன்றாகப் படித்து, நிலையான ஒரு வேலையில் சேர்ந்து, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது, அவரது தந்தையின் கனவு. கிரிக்கெட் விளையாட்டில், தோனி விக்கெட் கீப்பிங் செய்தால் சரியாக இருக்கும் எனக் கண்டறிந்தவர் அவருடைய பள்ளியில் இருந்த விளையாட்டு ஆசிரியர். அப்போது ஆரம்பித்த அவரது வெற்றிப்பயணம், பல பயிற்சியாளர்கள், நலம் விரும்பிகள், நண்பர்கள் ஆகியோரின் ஆசியுடன் நீண்டது. சிறு நகரத்தில் இருந்து கிளம்பிய ஒரு இளம்வீரர், இன்று இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாகத் திகழ்கிறார். இடைப்பட்ட காலத்தில், அவரது பெர்சனல் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தது என்பதையும் விவரிக்கிறது இந்தத் திரைப்படம். வரும் செப்டம்பர் 30ம் தேதி ஹிந்தியில் வெளியாகும் இந்தத் திரைப்படம், வெவ்வேறு மாநில ரசிகர்களைக் கவரும்பொருட்டு தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை, தோனி என்பவர் மிஸ்டர் கூல். சென்னை வீதிகளில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வலம்வரும் தோனியை, கிரிக்கெட் மைதானத்தின் பக்கம் தலைவைத்துப் படுக்காதவர்களுக்கும் கூட பிடிக்கும். ஏனெனில், தோனி என்ற மந்திரம் எல்லாரையும் வசியப்படுத்தும்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles