இருமுகனில் ஏறுமுகம் கண்ட விக்ரம்!

Thursday, September 8, 2016

இரட்டைப் பாத்திரப் படைப்புகள் என்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. இரட்டை வேடங்களில் நாயகர்கள் தோன்றினால், தியேட்டரில் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடும். அது மட்டுமல்ல, அத்தகைய  படங்கள் பெரும்பாலும் வசூல் வேட்டையும் நடத்தும். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தை, இதற்கு உதாரணமாகச் சொல்வார்கள். ஆனால், எல்லா நாயகர்களுக்கும் இரட்டைப் பாத்திரம் பொருந்திப் போவது இல்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விக்ரம், அஜித், சூர்யா, வடிவேலு என்று விரல்விட்டு எண்ணும் அளவிற்கு, சில நட்சத்திரங்கள் மட்டுமே அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறார்கள்.  கோலிவுட்டில் டூயல் ரோல் லிஸ்ட் உள்ளது.

 

எதனால் இரட்டை வேடம் பார்வையாளனை கவர்ந்திழுக்கிறது? தன்னுடைய நட்சத்திரம், இரு வேறு பரிமாணங்களை ஒரே படத்தில் காட்டும் சாகசத்தை ரசிக்கத்தான்! ரத்த உறவு கொண்டவர்கள் ஒரேமாதிரியாகத் தோற்றமளிப்பது, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவர்கள் ஒரேமாதிரி இருப்பது என்றுதான், பெரும்பாலான இரட்டை வேடப் படங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு கதாபாத்திரங்களில், ஒன்று பெண்ணாகவோ அல்லது பெண்தன்மை மிகுந்த ஆணாகவோ இருந்தால் எப்படியிருக்கும்? சமீபகாலத்தில், இப்படிப்பட்ட பாத்திர வடிவமைப்புகள் நட்சத்திரங்களின் நடிப்புத்திறமைக்குத் தீனிபோடுவதாக அமைந்துள்ளன. 

 

அந்த வரிசையில், தமிழ் சினிமா பார்வையாளர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ள படம்தான் ‘இருமுகன்’. வழக்கமாகத் தன்னுடைய பாத்திரத்தை மெருகேற்றிக்கொள்ள, தன்னை எப்படி வேண்டுமானாலும் வருத்திக்கொள்ளத் தயங்கமாட்டார் ’சீயான்’ விக்ரம். இந்தப் படத்திலும், அவருடைய அர்ப்பணிப்பு பளிச்செனத் தெரிகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்துக்காக, உடல் எடையை அதிகமாக்கி, குறைத்து மிகவும் சிரமப்பட்டார் விக்ரம். அதற்குப் பிறகு, ‘இருமுகனி’ல் தன்னை மீண்டும் புதுப்பித்துள்ளார்!

 

‘இருமுகன்’ படத்தில் விக்ரமுக்கு நயன்தாரா, நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள். “செம மச்சம் பாஸ் உங்களுக்கு?” என்று இளசுகள் டுவீட் அடிக்குமளவுக்கு, ரொமான்ஸ் காட்சிகளிலும் மிச்சம் வைக்காமல் செஞ்சுரி அடித்துள்ளார். சுமார் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது இருமுகன். ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், இப்படத்தை இயக்கியுள்ளார். 

 

நாயகர்கள் இரு வேடங்களில் நடிக்கும்போது, வேறொரு நடிகர் வில்லனாக வந்துபோவார். இருமுகனில் அந்தப் பாத்திரத்தையும் விக்ரமே ஏற்றிருக்கிறார். அதனால் விக்ரமை வெல்ல, இனி விக்ரமாலேயே முடியும். அப்படின்னா, விக்ரமுக்கு ஏறுமுகம்தான்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles