தமிழ் சினிமாவின் முதல் மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘குற்றம் 23’ @மனம் எக்ஸ்கிளுஸிவ்!

Thursday, September 1, 2016

இயக்குநர் அறிவழகன், கோலிவுட்டின் பொக்கிஷங்களில் ஒருவர். ‘ஈரம்’ படம் வெளியானபோது, அவரைத் தென்னிந்திய சினிமாவே திரும்பிப் பார்த்தது. மாறுபட்ட திரைக்கதை உத்தி, விறுவிறுப்பான காட்சியமைப்பு, அழுத்தமான பாத்திரங்கள், பார்வையாளனுக்கும் திரைக்குமான இடைவெளியைக் குறைத்தது, ஒலியமைப்பில் கூடுதல் கவனம் என தெறிக்கவிட்டிருந்ததுதான், அவர் மீது கவனம் குவியக் காரணம். அறிவழகனின் ஒவ்வொரு படங்களுமே கவனிக்கத்தக்கவை.

அவர் லேட்டஸ்ட்டாக இயக்கியுள்ள ‘குற்றம் 23’ படமும், இந்தியத் திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையிலான கதையமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

இந்திய சினிமாவில் ‘மெடிக்கல் க்ரைம் திரில்லர்’ வகையிலான பட்டியலில் ஒரேயொரு படம்தான் உண்டு. அந்தப் படமும் நகைச்சுவை பாணியில் அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழாமல் போனது. ஆனால், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தகுந்த படமாக ‘குற்றம் 23’ இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, மெடிக்கல் க்ரைம் திரில்லர் பாணியிலான முதல் படம் இது. 

 

இந்தப் படத்தின் கதையை, பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். அவருடைய நாவல் ஒன்றை மையமாக வைத்துதான் ‘குற்றம் 23’ திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பரபரப்பான சம்பவங்களைக் கோர்த்து, விறுவிறுப்பாக நகரும் காட்சிகளுடன் கூடிய இந்தப் படம் வெளியாகும் நாளன்று, அந்த நாவலின் பெயரை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். கும்பகோணம் அருகே பெரும்பண்ணையூரில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான தேவாலயம் ஒன்றில், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இங்கு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்துவதற்காக, 5 மாதம் வரை காத்திருந்து படம்பிடித்திருக்கின்றனர் படக்குழுவினர். படத்தில் இந்தக் காட்சி மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துமாம். 

 

'குற்றம் 23' நாயகனான அருண் விஜய், முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்பது படத்தின் கூடுதல் சிறப்பு. அவருக்கு ஜோடியாக, ’சாட்டை’ படத்தில் நடித்த மகிமா நம்பியார் நடித்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு நாயகியான அபிநயா, உணர்ச்சிகரமான நடிப்பில் பிச்சு உதறியிருக்கிறாராம். அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஆக்‌ஷனும் த்ரில்லும் மிகுந்திருந்தாலும், படத்தில் சென்டிமெண்டுக்கும் முக்கிய இடம் இருக்கிறதாம். 

 

 ‘குற்றம் 23’ படத்தினுடைய ஆடியோ வெளியீட்டு விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும், இதில் பங்கேற்றனர். அருண்விஜய் தனது உடல்எடையையும் உடல்மொழியையும் முழுவதுமாக மாற்றி நடித்துள்ளதால், இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ’என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு, இதுவரை அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெளியாகவிருக்கும் ‘குற்றம் 23’, நமது எதிர்பார்ப்புகளைத் தாண்டியதாக அமையட்டும்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles