’ஹல்க்’ ராணா!

Wednesday, October 5, 2016

பிட்னஸ் பற்றிக் கவலைப்படாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் யுகம் இது. உடற்பயிற்சி, யோகா, தியானம், நடனம் என்று ஏதோ ஒன்றைப் பயிற்சி செய்து, ஒவ்வொருவரும் தங்களை ‘பிட்’டாக வைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக, இன்றைய திரைத்துறையினரிடம் இந்தப் பழக்கம் ஆழமாகப் பரவியிருக்கிறது.

தாங்கள் நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப, அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர். ஆண், பெண் என்று இதில் பாகுபாடு ஏதுமில்லை. இந்த ‘பிட்னஸ் மேனியா’வைப் பரப்பும் விதமாக, அவ்வப்போது சில போட்டோக்கள் அல்லது வீடியோ இண்டர்நெட்டில் வைரலாகும். அந்த வகையில், நம்மை அச்சப்படுத்தி உச்சம் தொட்டிருக்கிறார் நடிகர் ராணா. 

 

’பாகுபலி’ படத்தில் பல்லாலதேவனாக நடித்திருப்பார் நடிகர் ராணா. வயதான தோற்றத்தைக் காட்டுவதற்காக, தனது உடல் எடையையும் அதிகரித்திருந்தார். ஆனாலும், அந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளில் அவரது புஜபல பராக்கிராமங்கள் வெளிப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாகத் தயாராகி வருகிறது ‘பாகுபலி 2’. இந்தப்படத்தில், ராணா இளம்வயது தோற்றத்தில் நடித்து வருகிறாராம். இதற்காகத் தனது உடல் எடையை 90 கிலோவாகக் குறைத்திருக்கிறாராம். (அப்படின்னா, இதுக்கு முன்ன எத்தனை கிலோ இருந்தாருன்னு கேட்கப்பிடாது!) அதோடு, மிகவும் முறுக்கேறிய உடலோடு காட்சியளிப்பதற்காகக் கடுமையாகப் பிரயத்தனப்பட்டிருக்கிறாராம்.

 

அதன் பலன் என்னவென்பதை, சமீபத்தில் பதிவிட்டிருந்தார் ராணா. அந்த போட்டோவைப் பார்த்ததும் மயங்கி விழாத குறைதான்! ’ஹல்க் படத்தில் வரும் ராட்சஷன் போல இருக்கிறாரே’ என்றுதான், இதைப்பார்த்து பலரும் ‘கமெண்ட்’டியிருக்கிறார்கள். ஆனால், ராணாவின் இந்த அசுரத் தோற்றம் சும்மா வந்துவிடவில்லை. இதற்காக, சுமார் 5 மாத காலம் ஜிம்மே கதி என்று கிடந்திருக்கிறார் மனிதர். தினமும் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்து, உடலை வலுவேற்றியிருக்கிறார். 

 

‘ஒரு படத்திற்காக இவ்வளவு மெனக்கெடணுமா?’ என்பதே, இதைப் பார்த்தவர்களின் மனதில் எழுந்த கேள்வி. ஆனால், இன்றைய இளைய தலைமுறை திரைக்கலைஞர்கள் இந்த விஷயத்தில் கறாராக இருக்கின்றனர். அவர்களது ‘டெய்லி ஷெட்டியுல்’ பார்த்தால், இது புரியவரும். பிரபலமானவர்களாக இருந்தாலும் சரி; புதுமுகங்களாக இருந்தாலும் சரி. உடலைப் பராமரிப்பதிலும், அதனை ‘பிட்’டாக மாற்றுவதிலும் உறுதியாக இருக்கின்றனர். தாங்கள் நடிக்கும் கதாபாத்திரத்தை அழுத்தமாக வெளிப்படுத்த முயல்கின்றனர். ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலேறிச் செல்கின்றனர், ராணாவைப் போல. ஆர்யா, சாந்தனு, பரத், விஷால், தனுஷ், சூர்யா என்று கோலிவுட்டைச் சேர்ந்த பலரும் இதனைச் செய்து காட்டியவர்கள்தான். 

 

சினிமா என்பதே மாயைதான். அழகான பொய் என்பது கொஞ்சம் உண்மை கலந்து சொல்லப்பட வேண்டும் என்பது போல, நல்ல சினிமா யதார்த்தத்தைப் பொய்யாகப் புனைய வேண்டும். அதற்கான அடிப்படைகளில் ஒன்று, கதாபாத்திரத்தைப் பிரதிபலிப்பவர்களின் தோற்றம். அந்த வகையில், தான் எடுத்துக்கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முயற்சித்திருக்கிறார் ராணா. தோற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, தேவையான நடிப்பைக் கோட்டை விடுபவர்களும் உண்டு. ராணா அப்படிப்பட்டவரில்லை என்பதனை, பாகுபலியின் முதல் பாகத்திலேயே நிரூபித்துவிட்டார். 

 

அந்தப்படத்தில், கட்டப்பாவைப் பிரதியெடுத்தது போலவே தோற்றமளித்திருப்பார் பல்லாலதேவன். சரியாகச் சொல்வதானால், அவரது வாரிசு போன்றே ராணாவின் உடலசைவுகள் வெளிப்பட்டிருக்கும். அதனை உறுதி செய்யும் விதமாகவும், ராணாவின் ’லுக்’ அமைந்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகுபலி 2 வெளியாகும்போது, அந்த உண்மை முழுக்க உணர்த்தப்படும் என்று நம்பலாம்! 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles