எல்லோருக்கும் ஒரே கேரவன்தான்! செகண்ட் இன்னிங்ஸ் அனுபவம் சொல்லும் விஜய் வசந்த்

Monday, October 31, 2016

"நாங்க எல்லோருமே வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்துகிட்டு இருந்தோம். 'சென்னை 28' பார்ட் ஒன் எடுக்கறதுக்காக, எங்களை ஒண்ணு சேர்த்தாரு வெங்கட் பிரபு அண்ணா. 'பிளாக் டிக்கெட் கம்பெனி' மூலமா, இன்னிக்கு மறுபடியும் அதே டீமை சேர்த்து வச்சு சிறப்பா படத்தை முடிச்சிருக்காரு. இப்போ மட்டுமில்லை, எப்போ கூப்பிட்டாலும் அவர் படத்தில் நடிக்க நாங்க எல்லோருமே தயாராக இருப்போம்" என்று ஓப்பனிங்கிலேயே ’பஞ்ச்’ வைக்கிறார் நடிகர் விஜய் வசந்த்.

பெரியஇடத்துப்பிள்ளை என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார்; இருக்கிறார். அதுவே, அவரை மிக அழகாகக் காட்டுகிறது. 

 

செகண்ட் இன்னிங்ஸில் உங்களுடைய பாத்திரம் எப்படியிருக்கும்?

" 'சென்னை 28' படத்தோட முதல் பாகத்துல, பாட்டிலும் கையுமாகத் திரியுற ஒரு இளைஞனாகப் பார்த்திருப்பீங்க. இந்தப் பத்து வருட இடைவெளியில், கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிட்டு நல்ல பையனா மாறியிருக்கேன். முதல் பாகம் மாதிரியே செகண்ட் இன்னிங்ஸிலும் காதல், நட்பு, பாடல், கிரிக்கெட் எல்லாம் இருக்கு!" 

 

இந்தப் படத்துல, சேட்டுப் பொண்ணை உஷார் பண்ணிட்டீங்களாமே?

"ஆமாங்க. தமிழ்ப் பொண்ணை உஷார் பண்றதே ரொம்ப கஷ்டமான விஷயம். இதுல சேட்டுப் பொண்ணுன்னா சொல்லவே வேண்டாம். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, அதுல ஒரு வசதி இருந்துச்சு. அவங்க ஹிந்தில திட்டினா நமக்குப் புரியாது. நாம தமிழ்ல திட்டினா அவங்களுக்குப் புரியாது. அதனால, எங்க வாழ்க்கை கிளுகிளுப்பாகவும் சலசலப்பாகவும் இருக்கும். சேட்டுப் பெண்ணை எப்படி உஷார் பண்ணினேன் என்பதை, படத்துல ஒரு பாட்டுல சொல்லியிருக்கார் இயக்குநர்"

 

அந்த கிரிக்கெட் மட்டை திரும்பக் கிடைச்சிடுச்சா?

(பலமாக யோசிக்கிறார்) பின்னர், " இந்தப் படத்திலும் அந்தப் பையன் இருக்கான். பேட்டும் இருக்கு. ஆனா, அது எனக்கு கிடைச்சிடுச்சாங்கறதை மட்டும் கொஞ்சம் படம் பார்த்து தெரிஞ்சுக்குங்களேன். ப்ளீஸ்!" 

 

ஆர்ட்டிஸ்ட் நிறைய இருந்ததால, நிறைய கேரவன் தேவைப்பட்டிருக்குமே?

"ஆக்சுவலா, எல்லோருக்கும் அப்படித்தான் கேரவன் கொடுத்தாரு வி.பி. அண்ணா. தனி கேரவனில் இருக்குறப்போ, ஒரு ரூமில் நம்மைப் போட்டு அடைச்சு வச்சமாதிரி இருக்கும். அதனால, ஒரே கேரவனில்தான் பத்து பேரும் இருந்தோம். பெட்ஷீட்டை எல்லாம் விரிச்சுப் போட்டு, உட்கார்ந்து கதை அளப்போம். கேரவனே கலகலன்னு இருக்கும். எங்களை ஸ்பாட்டில் நிறுத்தி ஷூட் பண்றதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கும். எல்லா பிரச்னைகளையும் கடந்து, படத்தை வெற்றிகரமாக முடிச்சிட்டாரு வி.பி. அண்ணா. இந்த நேரத்துல அவருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்!"

 

'கிளப் செவன்' பத்தி சொல்ல முடியுமா?

"நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நண்பர்கள் எல்லோரும் திரும்பி ஒண்ணு சேர்ந்து நடிக்கிறோம். எல்லோருடைய வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள். பகிர்ந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கு. அதனால, படப்பிடிப்பில் மட்டுமில்லை, நீங்க சொல்ற அந்த கிளப் செவன்லயும் நாங்க ஹேப்பியாகத்தான் இருந்தோம். காலையில் எங்களோட பொழுதுபோக்கு ஷூட்டிங் ஸ்பாட், மாலையில் கிளப் செவன்தான்!"

 

இந்தப் படத்துல, எதிர் டீம் கூட அடிதடி எல்லாம் நடந்துச்சாமே?

"ஆமாம் பாஸ். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு?" (வடிவேலு ஸ்டைலில் சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்)

 

'சென்னை 28' ஒன் பாயிண்ட் பைவ் எடுக்கவும் திட்டம் இருக்காமே?

"எனக்கு தெரிந்து, 'சென்னை 28' படம் தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி. வழக்கமா, ஒரு படத்தோட பார்ட் 2, பார்ட் 3 வருதுன்னா, மையக்கருவை மட்டுமே வச்சிக்கிட்டு வேற வேற கதைகளைப் பண்ணுவாங்க. ஆனா, 'சென்னை 28' படம் மட்டும்தான், அதுல வர்ற கதாபாத்திரங்களும் கதையும் கால மாற்றத்தில் என்னவாகுதுன்னு சொல்லுது. செகண்ட் இன்னிங்ஸுக்கு இடையில், ஒன் பாயிண்ட் பைவ் வந்தால் நல்லாத்தான் இருக்கும். ஏன்னா, திரைக்கதையை வெங்கட் பிரபு சார் சிறப்பாகவே பண்ணிடுவாரு. அதனால நாங்க, 'சென்னை 28' படத்தை பார்ட் 20 வரைக்கும் பண்ணலாம்னு இருக்கோம். வி.பி. அண்ணா நோட் பண்ணிக்குங்க!" என்று கூறிவிட்டு கேமிராவைப் பார்த்து கண் சிமிட்டுகிறார் விஜய் வசந்த்.  2.0 இருக்கும்போது 1.5வும் வரலாமே, தப்பில்லையே!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles