எதைச் சொன்னாலும் நம்புற வெகுளியான மனைவி! தனது கேரக்டர் பற்றிப் பேசுகிறார் நடிகை மகேஸ்வரி

Monday, October 31, 2016

" ’கல்யாணம் ஆகலை, கேர்ள் பிரென்ட் கிடைக்கலை’ன்னு ஏங்கும் இளசுகள், கல்யாணம் ஆனவுடன் மனைவிகளிடம் படும் பாட்டைச் சொல்லி மாளாது. சாதாரணமான ஆளுங்களா இருந்தா கூட பரவாயில்ல, பெரிய நட்பு வட்டாரம், அடிக்கடி பார்ட்டி, பப்ன்னு இருக்குறவங்களோட கதி ரொம்ப கஷ்டம். அந்த இடங்களுக்கு மனைவியை அழைச்சிட்டுப் போகமுடியாது, அவங்ககிட்ட பொய் சொல்லி சமாளிச்சு ’எஸ்கேப்’ ஆகவும் முடியாது.

அப்படிப்பட்ட கணவன்மார்களுக்கு, எதைச் சொன்னாலும் நம்புற வெகுளியான மனைவி கிடைச்சா எப்படி இருக்கும்?” இப்படியொரு கேள்விக்கான பதிலாக, சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸில் மகேஸ்வரியின் பாத்திரத்தை வார்த்தெடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. சென்னை 28 படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்த ஏழுமலையின் (அஜய்ராஜ்) மனைவியாக வருகிறார் மகேஸ்வரி. அதாவது, சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு இடம்பெயர்கிறார் மகி. 

 

“ சென்னை 28 படத்துல நடிக்கறதுங்கிறது எல்லாருக்கும் பெரிய கனவு. அந்த அழகான கனவு எனக்கும் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் படத்துக்கான ஆடிஷன் நடக்குதுன்னு சொன்னதுமே சந்தோஷம். ஆடிஷன்ல கலந்துக்கிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டேங்கறதை, என்னால நிஜமாவே நம்ப முடியலை. 

 

படத்துல மாஸ்டர் அஜய்ராஜோட ஜோடியா நடிச்சிருக்கேன். அவரு ரொம்ப நல்லவரு. அவர் எதைச் சொன்னாலும் நம்புற வெகுளியான மனைவி நான். இந்தப் படத்துலதாங்க அப்படி. நிஜத்துல எல்லாம், நான் அந்தமாதிரி பொண்ணு இல்லை. 

 

படப்பிடிப்பு தொடங்கின நாள்ல இருந்து முடியுற வரைக்கும், எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்தோம். நிறைய கலாட்டா, கொண்டாட்டம்னு ஒவ்வொரு நாளும் ரொம்ப கலகலப்பா இருக்கும். அவுட்டோருக்காக தேனி மாவட்டம்  போயிருந்தோம், அங்கேயும் அவ்ளோ ஹாப்பி இருந்தோம்.

 

முக்கியமா, சாப்பாட்டைப் பத்தி இங்கே சொல்லியே ஆகணும். அவ்ளோ வெரைட்டீஸ். வஞ்சனையே இல்லாம, எல்லாரும் நல்லா வச்சு செஞ்சோம். தேனி  படப்பிடிப்புல, டின்னருக்கு நம்ம பாரம்பரியமான உணவு கொடுப்பாங்க. தோசை எல்லாம் செம்ம டேஸ்ட்டா இருக்கும். அப்படியே பாடிட்டு, பேசிகிட்டு சாப்பிடுவோம். எளிமையா சொல்லணும்னா, குடும்பத்தோட போற சுற்றுலா மாதிரி இருந்தது.

 

எங்க டைரக்டர் பற்றி சொல்லியே ஆகணும். நான் படப்பிடிப்புக்கு வந்த முதல் நாள்ல இருந்தே, அவர்கூட வொர்க் பண்ண ரொம்ப எளிமையா இருந்தது. ரொம்ப ப்ரென்ட்லியான டைரக்டர் அவர். ரொம்ப கம்பர்ட்டபிளான மனிதர். மற்ற இயக்குனர் மாதிரி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்க மாட்டாரு. தொழில்ல அவ்வளவு அர்ப்பணிப்பு, எங்க நமக்கு சுதந்திரம் கொடுக்கணுமோ அங்க நமக்குக் கொடுப்பாரு. என்ன பிரச்சனையா இருந்தாலும், முதல்ல அதை சார்ட்அவுட் பண்ணிட்டுதான், அடுத்ததுக்கு போவாரு. டைரக்டர்ங்கிற விஷயத்தை எல்லாம் தாண்டி, அவரு ஒரு நல்ல மனிதர்னு சொல்லுவேன்.

 

சென்னை 28 இன்னிங்ஸ் 2, எனக்கு ரொம்ப சவாலான படம். ஏன் தெரியுமா? இந்தப் பசங்களைச் சமாளிக்குறதுதான் இதுல பெரிய விஷயமே. முக்கியமா, எல்லாரும் இருக்குற மாதிரி காம்பினேஷன் சீன் வந்ததுன்னா அவ்வளவுதான். டயலாக் பேசவே விடமாட்டாங்க. அவங்க ஏதாவது கமெண்ட் அடிச்சுட்டே இருப்பாங்க. அதுக்கு, நம்மளால யோசிச்சு கூட பதில் சொல்லமுடியாது. அப்படி இப்படி ட்ரை பண்ணி ஏதாவது கவுண்டர் கொடுப்பேன். இல்லேன்னா, ‘ஹி.. ஹி..’ன்னு சிரிச்சுட்டு போய்டுவேன்” என்று குமுறியவரிடம், ’உங்களை அதிகமாக கலாய்த்தது யார்’ என்று கேட்டோம். 

 

“யாரு கலாய்க்க மாட்டாங்கன்னு கேளுங்க, சொல்றேன். மாஸ்டர் அஜய்ராஜ்தான் கொஞ்சம் கம்மியா கலாய்ப்பாரு. பிரேம்ஜி, சிவா எல்லாம் சேர்ந்துட்டாங்கன்னா அவ்வளவுதான். என்னை மட்டுமில்லீங்க, படப்பிடிப்புல இருக்குற எல்லாரையும் கிண்டல் அடிச்சிட்டே இருப்பாங்க.

 

சென்னை 28  பார்ட் 1ல நட்பு இருந்தது. அதனால அவங்க ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாங்க. இந்த பார்ட் 2ல பார்த்தீங்கன்னா, அவங்களுக்கே கல்யாணம்  ஆகி குழந்தை குட்டிங்க இருக்கும். லைப்ல நிறைய மாற்றங்கள், பிரச்சினைகள்னு வரும். அதை எப்படிக் கடக்குறாங்கங்கிறதுதான் சென்னை 28 பார்ட் 2. அதோட, பசங்க அவங்களோட நட்பு வட்டாரத்தை எப்படி தக்க வச்சுக்கிறாங்கங்கறதை இதுல சொல்லியிருக்காங்க. அந்த மாதிரி சிச்சுவேஷனை, நீங்க எல்லாரும் உங்க வாழ்க்கையில ரிலேட் செஞ்சு பார்த்துக்கலாம். 

 

பசங்க வாழ்க்கைன்னு மட்டுமில்லாம, ஒரு பெண்ணோட பக்கத்துல இருந்து பார்த்தீங்கன்னா, அவங்களுக்கும் கணவர்கள்கிட்ட சில பிரச்சனைகள் இருக்கும். அதையும் நீங்க இந்தப் படத்துல பார்ப்பீங்க. இந்த மாதிரி பல நல்ல ’லைவ்லி’ விஷயங்கள் இந்தப்படத்துல இருக்கு. யுவன் பாடல்கள்ல தெறிக்கவிட்டிருக்காரு. கண்டிப்பா தியேட்டர்ல இந்தப் படத்தை பாருங்க” என்றார் மகேஸ்வரி. கொண்டாட்டமாகத் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் மகேஸ்வரிக்கு, இந்தத் திரைப்படம் கண்டிப்பாக இரண்டாவது இன்னிங்ஸ்தான். 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles