இந்தப் படத்தில் எல்லோரும் 'அங்கிள்' தான்!! குதூகலிக்கும் இளவரசு!

Monday, October 31, 2016

தமிழ் சினிமாவில் குணச்சித்திர பாத்திரங்களில் செஞ்சுரி அடித்து வருபவர் இளவரசு. எந்த ரோலிலும் நடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்பவர். ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக உருமாறியவர். நல்ல ரசனைக்காரர். 'சென்னை 28' படத்தில் சலூன் கடை மனோகராக வந்து, எல்லோரது மனங்களிலும் இடம்பிடித்தவர். இவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே ரகளையுடன் இறங்கியுள்ளார். படப்பிடிப்புக்காகத் தயாராகிக் கொண்டிருந்தவரை கேரவனிலேயே மடக்கி, பேசினோம்! ’சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’ பற்றிய தனது கருத்துகளை முன்வைத்தார் இளவரசு. 

"தமிழ் சினிமாவுல ரொம்ப முக்கியமான படம் 'சென்னை 28'. ஏன்னா, அதுக்கு முன்னாடி வரைக்கும் ஹீரோ என்பவர் தோல்வியே காணாதவராகவும், பஞ்ச் டயலாக் பேசுபவராகவும்தான் தமிழ் சினிமாவுல காட்டிட்டு இருந்தாங்க. ஆனா, அது மனித யதார்த்தம் இல்லை. எந்தவொரு மனிதனும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துதான் ஆகணும். 'சென்னை 28' படத்தில் ஒரு ஹீரோ (ஜெய்) பயந்துக்கிட்டு போய் பாத்ரூமில் அழுகிற மாதிரி காட்சியை வச்சிருந்தாங்க. அதை ஷூட் பண்ணும்போது, "ஏம்பா.. இதெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா?"ன்னு கேட்டேன். ஆனா, அந்தப் படம்தான் கோலிவுட்டுக்கு ஒரு டிரெண்ட் செட்டராக ஆச்சு. 

'பதினாறு வயதினிலே' படம் எப்படி ஒரு பாரதிராஜாவை  நமக்கு அடையாளம் காட்டுச்சோ, அப்படி நவீன சினிமாவுக்கு வெங்கட் பிரபுவை அடையாளம் காட்டியது 'சென்னை 28' படம்தான்! அந்தப் படத்தில்தான் மனோகர் என்கிற பாத்திரத்தில் நானும் நடிச்சிருந்தேன். ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகு, அதோட செகண்ட் இன்னிங்ஸில் அதே பாத்திரத்தில் நடிச்சிருக்கேன்.

பிளஸ் டூ முடிச்சதுக்குப் பிறகு, நமக்குன்னு ஒரு நண்பர்கள் வட்டம் உருவாகியிருக்கும். அந்த நட்பு வட்டத்தோடு பேசி, சிரித்து, சண்டையிட்டிருப்போம். அப்படியாக நட்பு வட்டத்தை வளர்த்தெடுக்கிற இடமாக தேநீர் விடுதியும், சலூன் கடையும் தான் முன்னணியில் இருக்கும். இப்படித்தான் நான், என்னுடைய இளமையைக் கடந்து வந்திருக்கிறேன். அப்படித்தான் எல்லோரும் கடந்து வந்திருப்பாங்க. அப்படியாக, நவீன இளைஞர்களின் வாழ்க்கையைச் சொன்ன படம்தான் சென்னை 28 பார்ட் ஒன். சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, அந்த வாழ்க்கை என்னவாக மாறியிருக்கும் என்பதைச் சொல்லவரும் படம்தான் 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்'!

பார்ட் ஒன்ல, என்னை எல்லோரும் "அங்கிள்... அங்கிள்"னு சொல்லிக் கலாய்ப்பாங்க. இப்போ அவங்களே அங்கிளா மாறி நிக்கிறாங்க. ’இந்த நாட்டினுடைய கடைசி இளைஞன் நான்தான்’னு எல்லோரும் நினைப்போம். நாம யோசிக்கிறதுக்கு முன்னாடியே, நமக்குப் பின்னாடி நிறைய பேர் லைன் கட்டி நின்னுக்கிட்டு இருப்பாங்க. இதுதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம். அதைத்தான் செகண்ட் இன்னிங்ஸா எடுத்திருக்காரு வெங்கட்பிரபு.

பேச்சிலராக இருக்கும்போது வீட்டுல அம்மா, தங்கை, தம்பிகிட்ட நிறைய பொய் சொல்லலாம். அதனால் எந்தப் பாதிப்பும் வரப்போறதில்லை. ஆனா, மனைவி வந்ததற்குப் பிறகு எல்லாமே மாறும். எனக்கு, என்னுடைய மனைவிகிட்ட இருக்கிற ஒற்றுமை வேறு. நாங்க முந்தைய தலைமுறை. இன்று நிறைய பேருக்கு திருமணமாகி, அவர்களுடைய குழந்தைங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்காங்க. இயல்பாகவே அவர்களுக்குள் ஏற்படுகிற மனமாற்றத்துக்கும், இந்தப் படத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. இன்றைய இளைய தலைமுறையின் திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையை, அதற்கு அருகிலேயே போய் யதார்த்தமாகப் படம்பிடித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. அதனால, தைரியமாக தியேட்டருக்கு வாங்க; வீட்டுக்கு சந்தோஷமா போவீங்க!"என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் இளவரசு. 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles