என்னோட விசிட்டிங் கார்டு சென்னை 28 தான்! நடிகர் விராஜ்

Monday, October 31, 2016

'சென்னை 28' படத்தில் 'பேட் பாய்ஸ்' டீமில் வரும் பையனை ஞாபகம் இருக்கா? கிரிக்கெட் மட்டையால் 'ஷார்க்ஸ்' டீமை கதறக் கதற அடிப்பாரே, அவரேதான்! "இல்ல பாஸ், எங்களுக்கு ஞாபகமில்லே. வேற எதாவது க்ளு கொடுங்க?"ன்னு கேட்கிறீங்களா? "எப்படிப் போட்டாலும் அடிக்கிறான்டா..."ன்னு நிதின் சத்யா டயலாக் பேசுவாரே, அந்த சீன் இப்போ ஞாபகம் இருக்கா உங்களுக்கு?

அது ஞாபகம் இருந்துச்சுன்னா, அதுல வர்ற விராஜை உங்களுக்கு முன்னாடியே தெரியும்னு அர்த்தம். அந்தப் பாலகன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும் அதே எனர்ஜியோட வந்திருக்கார். 

 

விராஜ், பிரபல பின்னணிப் பாடகர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எஸ்.என்.சுரேந்தரின் மகன். தந்தையைப் பிரதியெடுத்தது போல, தாடியுடன் இருக்கும் விராஜைச் சந்தித்தோம்; சென்னை 28 இன்னிங்ஸ் 2 குறித்து பேசினோம். 

 

சென்னை 28 வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

" 'உன்னை சரணடைந்தேன்' படத்திலேயே எஸ்.பி.பி.சரண் அண்ணாவோட சின்ன வயசு கேரக்டரில் நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல இருந்தே வெங்கட் பிரபு சாரைத் தெரியும். இது, அவரோட சேர்ந்து வொர்க் பண்ற மூன்றாவது படம். 'சென்னை 28' பார்ட் ஒன் ஷூட்டிங்கின்போது, "சின்ன ரோல்தான் நடிப்பா.."ன்னு சொன்னாரு. அந்தப் படத்துல நடிச்சபிறகு, பல இடங்களில் அதுதான் எனக்கு விசிட்டிங் கார்டா இருந்துச்சு. இப்போ செகண்ட் இன்னிங்ஸிலும் நடிக்கிறதுல ரொம்ப சந்தோஷம். அவருக்கு நன்றின்னு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது."

 

இந்தப் படத்திலயும் எதிரணியை மிரள வைக்கிறீங்களா?

"செகண்ட் இன்னிங்ஸில் 'சென்னை ஷார்க்ஸ்' டீமை என்ன பண்ணப்போறோம்னு சொல்லிட்டா சுவாரஸ்யம் குறைஞ்சுடும். இப்போ சொல்ல வேணாம்னு டைரக்டர் சொல்லியிருக்காரு. அதனால, தியேட்டரில் பார்த்து தெரிஞ்சுக்குங்க!" 

 

செகண்ட் இன்னிங்ஸில் நடிக்கும்போது தயக்கம் ஏதும் இருந்ததா?

"முன்னே பின்னே பழக்கம் இல்லாதவங்களோடு நடிக்கும்போது கொஞ்சம் தயக்கம் இருக்கலாம். ஆனா, 'சென்னை 28' பார்ட் ஒன்ல எல்லோருடனும் சேர்ந்து நடிச்சிட்டதால, எனக்கு தயக்கம் எல்லாம் இருந்ததில்லை. அந்தப் படத்துக்குப் பிறகு, நிறைய நிகழ்ச்சிகள்ல எல்லோரையுமே சந்தித்துப் பேசியிருக்கேன். அதனால, படப்பிடிப்பின்போது பயப்படாமல்தான் நடித்தேன். சில நேரங்களில் அஜய் மாஸ்டர், அரவிந்த் ஆகாஷ் சார் எல்லாம் இடையில் வந்து சில டிப்ஸ் கொடுத்து உதவி பண்ணினது ரொம்ப ஹாப்பியாக இருந்துச்சு!"

 

ஷூட்டிங்கின்போது நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம்?

"இந்தப் படத்துல, எனக்கு ஒரு வாரத்துக்கு மேல படப்பிடிப்பு இருந்தது. எல்லா நாளுமே கலகலப்பா, ஜாலியாதான் போச்சு. வெங்கட் பிரபு சார் ஷுட்டிங்கை பொறுத்தவரைக்கும் எல்லா நாளுமே ஸ்பெஷல் தான்!"

 

அடுத்தப் பட வாய்ப்பு?

"இப்போது சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸில் மட்டும் நடிச்சிருக்கேன். வேறு படங்கள் கைவசம் இல்லை. நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்!"விராஜின் குரலில் தன்னம்பிக்கையின் அழுத்தம் அதிகமாக இருக்கிறது. சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ், அவருக்கு மேலும் சில நல்வாய்ப்புகளை நல்குமென நம்பலாம்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles