குறிபார்த்து அடிக்குமா ‘கவண்’?

Thursday, October 20, 2016

ஆங்கிலத்தில் ’Y’ என்ற எழுத்தைப் போன்றிருக்கும் ஒரு கருவிக்கு ‘கவண்’ என்று பெயர். ஆதிகாலத்தில், இது வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. குறிவைத்து இலக்கைத் தாக்கும் கருவிகளுள், கவணுக்கு தனி இடம் உண்டு. இந்த அர்த்தத்தை உணர்த்தும் வகையில், இந்தப் பெயர் தங்கள் படத்திற்கு வைக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறது ‘கவண்’ டீம். கே.வி. ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதியும் டி.ராஜேந்தரும் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் இதுதான். 

 

இயக்குனர் ஷங்கரை முன்மாதிரியாக வைத்துச் செயல்படுபவர் கே.வி.ஆனந்த். அவரது படங்களுக்கான கதையைத் தேர்ந்தெடுப்பது, திரைக்கதையில் புதிய உத்திகளைப் பயன்படுத்துவது, தொழில்நுட்ப அசத்தல்கள், படத்தை விளம்பரப்படுத்தும் விதம் போன்றவற்றில் இது தென்படும். படங்களுக்கான டைட்டிலைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட, ஷங்கர் பாணியையே பின்பற்றுவார் கே.வி. ஆனந்த். அயன், கோ, மாற்றான் என்று ‘லபக்’கென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் டைட்டிலாகத் தேடிப்பிடிப்பார் மனிதர். (முதல் படத்தில் மட்டும், ஏனோ ‘கனா கண்டேன்’ என்று வைத்துவிட்டார்!)

கொஞ்சம் உற்றுக்கவனித்தால், இவை அனைத்துமே ஒற்றை வார்த்தையில் இருப்பது தெரியவரும். அந்த வகையில்தான், தன் புதிய படத்திற்கு ‘கவண்’ என்று பெயர் வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். ஆர்யா, ஜெயம்ரவி என்று சில ஹீரோக்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தனது புதிய படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என்று சிலமாதங்களுக்கு முன் அறிவித்தார் கே.வி.ஆனந்த். அதே சூட்டில் ஷூட்டிங்கும் நடத்தப்பட்டது. சில நாட்களுக்கான படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில், இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. 

மடோனா செபாஸ்டியன், ஜெகன், விக்ராந்த் என்று பல தெரிந்த முகங்கள் இருந்தாலும், பர்ஸ்ட் லுக்கில் சிங்கமெனத் தோன்றும் டி.ராஜேந்தர்தான் ரசிகர்களின் கவனத்தை முதலில் பெறுகிறார். வீராச்சாமி படத்திற்கு பிறகு, இந்தப்படத்தில் அவர் படம் முழுக்க வரப்போகிறாராம். எத்தனை வயதானாலும், இன்றும் உற்சாகத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் உதாரணமாக இருப்பவர் டி.ஆர். அவரது வரவே, இந்தப்படத்திற்கான துருப்புச்சீட்டு. இந்தப்படத்திற்கு இசையமைக்கப்போகிறவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதனால், இந்தப் படத்தில் டி.ஆர். பாடும் பாடல் கண்டிப்பாக இடம்பெறும் என்று நம்பலாம். 

தான் இயக்கும் படங்களின் ஒளிப்பதிவை, வேறு ஒரு திறமையாளரிடம் கொடுப்பது கே.வி.ஆனந்தின் வழக்கம். அந்த வகையில், இப்படத்தின் பொறுப்பை ‘போஸ்ட்மேன்’ குறும்படம் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்த அபிநந்தன் ராமானுஜம் கையில் ஒப்படைத்திருக்கிறார். எடிட்டிங்கில், வழக்கம்போல ஆண்டனி தன் கைவண்ணத்தைக் காட்டவிருக்கிறார். இந்தப்படத்தின் இன்னொரு ஆச்சர்யம், கபிலன் வைரமுத்து. எழுத்தாளர்கள் சுபா மற்றும் கே.வி.ஆனந்துடன் இணைந்து, இவரும் இப்படத்தின் திரைக்கதையை வடிவமைத்ததாகச் சொல்லப்படுகிறது. 

புதிய கதை சொல்லல்முறையில் ‘கவண்’ தயாராகி வருவதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறது படத்தின் பர்ஸ்ட்லுக். சொல்லியடிக்கும் கில்லியாக, விஜய் சேதுபதிக்கு மற்றுமொரு ஹிட் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், ’கவண்’ அதனைத் தருமென்று நம்பலாம்!

- பா.உதய் 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles