நம்பிக்கை தரும் ‘யாக்கை’ - ட்ரெய்லர் விமர்சனம்

Wednesday, October 19, 2016

யாக்கை என்ற சொல்லுக்கு உடல் என்ற அர்த்தம் உண்டு. இதனை எடுத்துக்கொண்டு, மருத்துவத்துறையில் இருக்கும் அடாவடித்தனங்களை, ஊழல்களை, மோசடிகளைச் சொல்லப் போகிறது, விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘யாக்கை’ திரைப்படம். 

ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே ஹிட்ஸ் அள்ளியிருக்கிறது ‘யாக்கை’. இப்படத்தில் கிருஷ்ணா, சுவாதி ஜோடியாக நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் காட்சிகளில் காதல் ததும்பி வழிகிறது. அது, வழக்கமான தமிழ் சினிமாக்களை நினைவுபடுத்துகிறது. ‘ஆண்மை தவறேல்’ என்ற திரைப்படம் மூலமாக, தமிழ் சினிமாவைத் தொடர்ந்து கவனித்துவரும் ரசிகர்களின் குட்புக்கில் இடம்பிடித்தவர் அதன் இயக்குனர் குழந்தை வேலப்பன். அவரது அடுத்த படமாக வெளியாகப் போகிறது ‘யாக்கை’. 

குரு சோமசுந்தரம் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அந்நியன் படத்தில் வந்ததைப்போல, இதிலும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவருடன் வருகிறார் சிங்கம்புலி. இவர்கள் இருவரும் வரும் பகுதிகள் நகைச்சுவையை வெளிப்படுத்தும் என நம்பலாம்!

ட்ரெய்லரின் ஆரம்பத்தில், ஒரு மருத்துவமனையின் மேல்பகுதியும் அதில் ஒரு கார் இருப்பதும் காட்டப்படுகிறது. சில நொடிகளே வரும் அந்தக் காட்சியைச் சுற்றியே, யாக்கை ட்ரெய்லர் நகர்கிறது. படத்தின் மையக்கதையாகவும் இது இருக்கலாம். தனியார் மருத்துவமனை நிர்வாகம், அதில் நடைபெறும் தவறுகள், அதனால் பாதிக்கப்படும் முதன்மை பாத்திரங்கள் போன்றவற்றைச் சுற்றி நகரும் படம் இது என்பதனைப் பறைசாற்றுகிறது ‘யாக்கை’ ட்ரெய்லர். சத்யன் பொன்மார் ஒளிப்பதிவில், தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பில் வெளியாகும் இப்படத்திற்கு இசையமைப்பவர் யுவன்சங்கர் ராஜா. ‘காதலைச் சொல்லித்தொலையேன்மா’ என்று தனுஷின் பாடல், ஏற்கனவே ரசிகர்கள் மனதில் ஊடுருவிவிட்டது. மற்ற பாடல்களும் ஹிட்டடிக்கும் பட்சத்தில், இது யுவனின் வெற்றி ஆல்பங்களுள் ஒன்றாக மாறலாம்!

ட்ரெய்லர் நன்றாக இருப்பது மட்டுமே, ஒரு திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்யாது. அதேபட்சத்தில், அதுதான் ரசிகர்களைத் தியேட்டருக்கு வரவழைக்கும் அடிப்படைத் தந்திரம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இது இரண்டுமே, இப்படத்தின் ட்ரெய்லரில் நன்றாகத் தெரிகிறது. ’அலிபாபா’வுக்குப் பின், கிருஷ்ணாவுக்கு வெற்றிதரும் படைப்பாக இது அமையும் என்ற நம்பிக்கையைத் தருகிறது ‘யாக்கை’. 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles