கவலை வேண்டாம்' ஜீவாவுக்குக் கைகொடுக்குமா?

Monday, October 17, 2016

தமிழ் சினிமாவில் தனித்துவமான அடையாளம் பெற்றிருக்கும் நடிகர்களில் ஜீவாவும் ஒருவர். 'ஈ', 'சிவா மனசுல சக்தி', 'கோ', 'ரௌத்திரம்', ‘என்றென்றும் புன்னகை’ என தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பாத்திரப் படைப்பில் அவர் காட்டிய வேகம், கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஆனால், அந்த வேகம் ஏனோ சமீபத்தில் வெளிப்படையாகத் தெரியாமல் போனது. போக்கிரிராஜா, திருநாள் என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்த போதும் கூட, அந்தப் படங்களில் அவருடைய முத்திரை இல்லாமல் போனது. ஆனால், அவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள 'கவலை வேண்டாம்' படம், இடையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

‘கவலை வேண்டாம்’ பட டீசர் சமீபத்தில் வெளியானது. சில மணி நேரங்களிலேயே, இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் படமும் அப்படியே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இப்படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, தற்போது இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். ஆனால், 'கவலை வேண்டாம்' படத்தின் தெலுங்கு உரிமையை ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி பெற்றுள்ளாராம்!

'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சுனைனா நடித்துள்ளனர். மேலும் பாபி சிம்ஹா, ஆர்.ஜே. பாலாஜி, மந்த்ரா, பால சரவணன், சுருதி ராமகிருஷ்ணனா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இதன் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார் டிகே. இவர், ஏற்கனவே 'யாமிருக்க பயமே' என்ற படத்தின் மூலமாக, தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். 

புதுவிதமான திரைக்கதை, வசனம் என்றிருந்த ‘யாமிருக்க பயமே’, எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தப்படமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பெருகியிருக்கிறது. ‘இது ஒரு ரொமான்டிக் வகை படம்’ என்கிறது படக்குழு. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று சென்னையில் நடந்தது.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles