பொங்கியெழுங்கள் விக்ரம்!

Monday, October 17, 2016

மின்மினிப்பூச்சிகள் நிறைந்திருக்கும் இடத்தில் நிலவாகவும் சூரியனாகவும் நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. ஓராயிரம் பேர் முண்டியடித்தாலும், ஒரு சில பேருக்கே அந்தரத்தில் தொங்கும் நாற்காலியில் இடம் கிடைக்கிறது. அதிலும் ஒரு சிலரே, அந்த இடத்தையும் வெற்றிபீடமாக மாற்றுகின்றனர். அதன் மீதமர்ந்து, ஒரு பேரரசனுக்கு ஈடான பெருமையைப் பெருகின்றனர். தமிழ் சினிமாவில் வெற்றியைச் சுவைத்த, சுவைத்துக் கொண்டிருக்கும் ஜாம்பவான்களுக்கு இது நன்கு புரியும். அப்படியொரு பெருமையைப் பெற்றவர் சீயான் விக்ரம். 

மின்னி மறைந்துபோகும் நட்சத்திர வாழ்க்கையின் நடுவே, என்றென்றும் போற்றக்கூடிய பாக்கியத்தைப் பெறும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிடைக்காது. இதுவே, 26 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் இயங்கிவரும் விக்ரமைக் கொண்டாடவும் காரணமாகிறது. 

எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் போராடி, தனக்கான வெற்றிகளை ஈட்டியவர் நடிகர் விக்ரம். ’என் காதல் கண்மணி’ படத்தில் அறிமுகமான விக்ரமின் சினிமா வரலாற்றை, சேது படத்திற்கு முன்னும் பின்னும் என்றே பிரிக்க முடியும். அதற்கு முன் இரண்டு டஜன் படங்களில் நடித்திருந்தாலும், சேது படம்தான் அவரது திறமையை உலகிற்குக் காட்டியது. இத்தனைக்கும் ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், பார்த்திபன் என்று அற்புதக் கலைஞர்களின் படங்களில் நடித்தவர்தான் விக்ரம். ஆனாலும், அவரது நடிப்புத்திறமையை ரசிகர்களிடம் வெளிக்காட்டும் விதமாக, அந்தப் படங்கள் வசூல் வெற்றியைக் குவிக்கவில்லை. 

ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளி, லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த விக்ரம், தமிழ்சினிமாவில் நுழைந்தபிறகு ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளும் மாணவனாக மாறினார். அஜித், வினித், பிரபுதேவா, அப்பாஸ் என்று தமிழ்சினிமா கொண்டாடிய நாயகர்களுக்குத் தன் குரலை இரவல் தந்தார். கேமிரா முன் நிற்கும் வாய்ப்பைத் தந்த தெலுங்கு, மலையாள சினிமாவோடு கைகோர்த்தார். இடைப்பட்ட நேரத்தில் சரியான இரையைப் பிடிப்பதற்காகக் காத்திருக்கும் காட்டுராஜா போலக் காத்திருந்தார். அப்போதுதான், அவர் முன்வந்து நின்றார் இயக்குனர் பாலா. ஏகப்பட்ட தடைகளைக் கடந்து, அதன்பின் இருவரும் அடுத்தடுத்து வெற்றிக்கோட்டையை எட்டிப்பிடித்தது தனிக்கதை. 

விக்ரமின் படங்களை ரசித்தவர்களுக்கு, தமிழ்சினிமாவின் போக்கைக் கண்காணித்து வருபவர்களுக்கு, இது எல்லாமே நன்கு தெரிந்த ஒன்று. சேது படத்திற்குப் பின் தில், தூள், சாமி, ஜெமினி என்று தமிழ்சினிமா ரசிகர்களை மகிழவைத்தார் அவர். பீமா, அந்நியன், தெய்வத்திருமகள், ஐ, இருமுகன் என்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையைக் காட்டினார். நடிக்கும் படத்திற்காக, தனது ஒட்டுமொத்தத் தோற்றத்தையும் மாற்றிக்கொண்டார். இதுவே, இப்போது விக்ரமின் படங்களைப் பார்க்கத் தூண்டும் அம்சமாகவும் மாறியிருக்கிறது. ஆனாலும், அவரது படங்களைத் தேடிப்பிடித்துப் பார்ப்பவர்களுக்கென்று ஒரு நீண்டகால வருத்தம் இருக்கிறது. வித்தியாசமாக எதையும் முயற்சிக்காமல், இயல்பாக அவர் திரையில் தோன்ற வேண்டுமென்பதே அது. 

கமர்ஷியலையும் ஆர்ட்டையும் கலந்து, கடந்த பத்தாண்டுகளாகத் தனக்கான சினிமாக்களைத் தந்திருக்கிறார் விக்ரம். இனிமேல், அவர் தன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படைப்புகளைத் தர வேண்டும். அது சாமியாகவும் தூளாகவும் மட்டுமே இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அவை சேதுவாகவும் காசியாகவும் கூட இருக்கலாம். படங்களின் பெயர்கள் இடம்பெற்ற இடத்தில், அதோ போன்ற பார்வையனுபவத்தைத் தரும் படைப்பு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். 

சீரான இடைவெளியில் விக்ரம் படங்கள் வெளியாவதில்லை என்றொரு வருத்தமும், அவரது ரசிகர்களிடத்தில் உண்டு. அதனைச் சரிசெய்யும்விதமாகவும், இனி விக்ரம் செயல்பட்டாக வேண்டும். 26 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்திருக்கும் நிலையில், விக்ரமிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். 

இயக்குனர்களின் நடிகராகவும், நடிகர்களின் நடிகராகவும் இருந்தது போதும்; ப்ளீஸ் விக்ரம், இனிமேலாவது பொங்கியெழுங்கள்! ரசிகர்களின் நடிகராக மாறுங்கள்!

-பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles