என்றும், தனித்துத் தெரியும் சத்யராஜ்!

Tuesday, October 4, 2016

’எந்தக் கூட்டத்திலயும் தனியாத் தெரியறீயேப்பா’ என்று ஒரு படத்தில் சத்யராஜைப் பார்த்துச் சொல்வார் வடிவேலு. அவரது உயரத்தைக் கிண்டலடித்துச் சொல்லப்பட்ட வசனமாக இருந்தாலும், சத்யராஜின் பெருமையைப் பேசும் வசனமாகவும் அதனை எடுத்துக் கொள்ளலாம். காரணம், அவருக்கே உரித்தான தனித்தன்மை. கூட்டத்தில் ஒருவராக நடித்து, அதன்பின் ஹீரோவிடம் அடிவாங்கி, மெதுவாக வில்லனாகி, ஒருகட்டத்தில் தன்னை தனித்துவமாகக் காட்டும் நாயக வேடங்களைத் தாங்கியவர் சத்யராஜ்.

தனது பலவீனங்களைப் பார்வையாளனுக்குக் காட்டாமல், பலத்தை மட்டுமே விஸ்வரூபமாக வெளிப்படுத்தியவர். ஏறுவதைப் போன்றே, இறங்குவதும் இயல்பானதுதான் என்பதை உணர்ந்த யதார்த்தவாதியும் கூட. அதனால்தான், இன்றும் அவர் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கப்படாமல் இருக்கிறார். 

’கீழிருந்து மேலேறி வந்தேன்’ என்று சொல்லும் பலர், தனது வறுமைப்பின்னணியை அதற்கான உத்வேகமாகக் குறிப்பிடுவார்கள். சத்யராஜ் விஷயத்தில், அப்படி எதுவும் இல்லை. வளமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை, அவர் எந்நாளும் மறைத்ததில்லை. அப்படியொரு பின்னணி இருந்தும், அவர் முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. சினிமா வாய்ப்புகள் கிடைக்காதா என அல்லாடிய காலத்தில் கூட, தான் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறோம் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. அந்த மனம்தான், அவரை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. 

சிறு வேடங்களில் நடித்து, அதன்பின் நாயகன் ஆனவர் எம்.ஜி.ராமச்சந்திரன். 16 வயதினிலே, மூன்று முடிச்சு போன்ற படங்களின் வழியாகக் கிடைத்த நெகட்டிவ் இமேஜைப் பயன்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் ரஜினிகாந்த். அந்த வழியில், ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானபின்பு நாயக வேடம் தரித்தவர் சத்யராஜ். ஆனால், இடைப்பட்ட காலத்தில் சத்யராஜ் சிறுசிறு வேடங்களில் நடித்த படங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதன் மூலமாக, ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று ஒரு இமேஜ் உருவாகியிருந்தது. நான் சிகப்பு மனிதன், மங்கம்மா சபதம், காக்கிசட்டை, 24 மணி நேரம், 100வது நாள் போன்ற படங்கள் இந்த வேலையக் கச்சிதமாகச் செய்தன. இந்தப் படங்களில் தரப்பட்ட முக்கியத்துவத்தைவிட, ‘சாவி’யில் சத்யராஜின் நடிப்புக்கு அதிக வேலை இருந்தது. 

அதற்குப் பின்பும், அவரால் வேறொரு வில்லனைப் பந்தாட முடியவில்லை. காரணம், அந்தக் கண்றாவி இமேஜ்தான். விடிஞ்சா கல்யாணம், கடலோரக் கவிதைகள், பூவிழி வாசலிலே மூலமாகத்தான், அவரால் முழுக் கதாநாயகனாக மாற முடிந்தது. வில்லனாக இருந்து நாயகனாக மாறியவர் என்பதால், நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகள் நிரம்பிய படங்களில் அவரால் நடிக்க முடியவில்லை. மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம், திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் இருந்ததுதான் இதற்குக் காரணம். அந்தத் தடையைத் தாண்ட, தன்னைத் தனித்துவமாகக் காட்டும் திரைக்கதைகளைப் பயன்படுத்திக்கொண்டார் சத்யராஜ். சுந்தர்ராஜன், மணிவண்ணன் போன்ற இயக்குனர்களின் சிந்தனை அலைவரிசையை, அவர் புரிந்து வைத்திருந்ததும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். 

அண்ணாநகர் முதல்தெரு, ஜீவா, பிக்பாக்கெட், வேலை கிடைச்சிடுச்சு, மல்லுவேட்டி மைனர் என்று சத்யராஜ் தேர்ந்தெடுத்த திரைக்கதைகளே அவரது வெற்றியின் ரகசியம் சொல்லும். இதனையடுத்து, பி.வாசு இயக்கத்தில் ‘நடிகன்’ என்ற படத்தில் நடித்தார் சத்யராஜ். கவுண்டமணி என்ற ஜாம்பவானுடன், சத்யராஜ் அதற்கு முன்னரும் நடித்திருக்கிறார். ஆனால் இந்தப்படத்தில் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளுக்குச் சிரிக்காதவரே இருக்க முடியாது. இன்றும் இந்தப் படத்தினைப் பார்த்தால், இருவரது வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் ஒரு ‘ப்ரெஷ்னெஸ்’ இருப்பதை உணரலாம். அதனால்தான், தமிழ் மசாலப்படங்களின் வரிசையில் நடிகனுக்கென்று தனி இடம் இருக்கிறது. 

நடிகன் படத்தில் சில காட்சிகளில் வயதான தோற்றத்தில் வருவார் சத்யராஜ். அந்த ஒப்பனை, அவரது முகத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கும். அதனைத் திரையுலகினரே வியந்து பாராட்டியிருக்கிறார்கள். ’ஏர்போர்ட்’ படத்தில் சத்யராஜின் நடிப்பைப் பார்த்துவிட்டு, நடிகர் கார்த்திக் ஒரு பத்திரிகையில் மனம்விட்டுப் பாராட்டியிருந்தார். இதுவே சத்யராஜின் தனித்த நடிப்புத்திறமைக்குச் சான்று. விதவிதமான பாத்திரங்களில் நடித்தாலும், எந்தவொரு நடிகரும் தொய்வான காலமொன்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 95க்குப் பிறகு, சத்யராஜூக்கும் அப்படியொரு நிலைமை வந்தது. மண்ணைக் கவ்வும் தோல்வி இல்லை என்றாலும்கூட, மிகப்பெரிய வெற்றிகளை அவரால் தர முடியவில்லை. அதன்பின், மெதுவாக அவரது படங்களின் வரத்து குறையத் தொடங்கியது. 

விஜய், அஜித் என்ற புதிய அலை பரவத் தொடங்கிய நேரமது. 1990களில் ஏழு முன்னணி கதாநாயகர்களைக் கொண்ட தமிழ் திரையுலகம் மெதுவாகத் தடம்புரண்டது. ரஜினி, கமல் தவிர, மற்ற நாயகர்களின் படங்களுக்கான வரவேற்பு குறைந்தது. இந்த காலகட்டத்தில், குறைந்த பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கினார் சத்யராஜ். அதுவும் பெரிய வரவேற்பைப் பெறாமல் போகவே, தனக்கான பாதையை வகுத்துக்கொண்டார் சத்யராஜ். 2007ம் ஆண்டுவாக்கில் பெரியார், கண்ணாமூச்சி ஏனடா, ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களில் நடித்தார். நாயக அவதாரம் எடுப்பதைத் தவிர்த்து, முதன்மைப் பாத்திரங்களில் ஒருவராகத் தன்னை மாற்றிக்கொண்டார். 

தனது கொள்கைகளைத் தளர்த்திக்கொண்டு, மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது தொடங்கிய அவரது பயணம், இன்றுவரை தொடர்கிறது. நண்பன், தலைவா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜாராணி, சிகரம் தொடு, இசை என்று கலக்கி வருகிறார் சத்யராஜ். உலகமே உற்றுக்கவனித்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம், இவரது பாத்திரத்தை வைத்தே சுழலப்போகிறது. இதுதான், சத்யராஜின் சிறப்பம்சம். 

இடைப்பட்ட காலத்தில், சத்யராஜைத் தேடி நிறைய படவாய்ப்புகள் வந்தன. வதந்திகளாகவும் செய்திகளாகவும் அவை ரசிகர்களைச் சென்றடைந்தன. அவற்றுக்கு நேரடியாகப் பதிலளித்தார் சத்யராஜ். ‘மீண்டும் வில்லனாக நடிப்பீர்களா’ என்ற கேள்வியே, இதற்கான மூலாதாரம். மிகப்பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் கேட்டபோதும், ‘இல்லை’ என்பதே இவரது பதிலாக இருந்தது. இப்போதும் அதுவே தொடர்கிறது. எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதனை, எல்லோராலும் பின்பற்ற முடியாது. ஒருசிலர் மட்டுமே அதில் விதிவிலக்காக இருப்பார்கள். சத்யராஜ் அப்படியொரு மனிதர் ; கலைஞர். அதனால்தான், இன்றும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். சத்யராஜ் எனும் கலைஞனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles