ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஜீவா! களைகட்டும் ‘கவுரவ தோற்ற’ ட்ரெண்ட்!!

Tuesday, October 4, 2016

ஒருகாலத்தில் தமிழ்ப்படங்களில் ’கவுரவ தோற்றத்தில் நடிக்கும்’ என்ற வார்த்தை இடம்பெற்றால், ரசிகர்களிடம் ’அப்ளாஸ்’ பறக்கும். தங்கள் அபிமானத்திற்குரிய நட்சத்திரத்தை ஓரிரு காட்சிகளில் பார்த்து ரசிப்பதற்காக, ரசிகர் கூட்டம் கூடும். இதற்காகவே, புதுமுகங்கள் நிறைந்திருக்கும் திரைப்படங்களில் புகழ்பெற்ற நட்சத்திரத்தை இடம்பெறவைக்க முயற்சிப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

 

தமிழ்சினிமாவில் இந்த ‘கவுரவ தோற்ற’ ட்ரெண்ட், அவ்வப்போது தலைகாட்டிவிட்டு மறைந்துபோகும். ஒவ்வொரு சினிமா நட்சத்திரத்திற்கும் இருக்கும் தனிப்பட்ட அந்தஸ்தே, இது தொடரமுடியாமல் துண்டிக்கப்படுவதற்குக் காரணம். தற்போதைய தமிழ் சினிமா, இந்த விஷயத்தில் ரொம்பவே முன்னோக்கிப் பயணிக்கிறது. இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது, ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கும் செய்தி.

 

ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளில் ஒரு நட்சத்திரத்தை ‘கவுரவமாக’ தலைகாட்ட வைப்பதென்பது காலம்காலமாக நடந்துவரும் ஒரு வழக்கம். ஒரு படத்தின் மீதான ரசிகனின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்த, அதன் வியாபாரத்தை எகிறவைக்க, திரைக்கதையின் அழுத்தத்தை அதிகப்படுத்த என்று இதற்குப் பல காரணங்கள் உண்டு. எம்ஜிஆர் - சிவாஜி தலைமுறையில் ’கவுரவ’ தோற்றத்தில் நடிப்பதற்காகவே சில நடிகர்கள் இருந்தார்கள். 

 

கடோத்கஜனாக நடித்த எஸ்.வி.ரங்காராவ், கிருஷ்ணனாக நடித்த என்.டி.ராமாராவ் என்று இதற்குச் சில உதாரணங்கள் உண்டு. ’பாரத விலாஸ்’ படத்தில் சஞ்சீவ்குமார், நாகேஸ்வரராவ் போன்றவர்கள் தலைகாட்டியிருப்பார்கள். மேற்சொன்ன அனைவருமே, பிறமொழிப்படங்களில் கோலோச்சியவர்கள் என்பது நாம் அறிந்ததே. இதேபோன்று நம்மூர் சிவாஜியும், தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களில் நடித்திருக்கிறார். 

 

எழுபதுகளின் பின்பகுதியில், ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இந்த ‘கவுரவ தோற்ற’ ட்ரெண்டை அதிகம் பயன்படுத்தியிருப்பார்கள். தில்லுமுல்லு, தப்புத்தாளங்கள் உட்பட ஒரு டஜன் படங்களில் கவுரவமாக வந்து போயிருக்கிறார் கமல்ஹாசன். இவர்கள் கொடி உயரப் பறந்தபோது, இந்த வழக்கமும் குறைந்துபோனது. ஆனாலும், ‘மனதில் உறுதி வேண்டும்’ போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்திருக்கின்றனர் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள். 

 

மன்னன் படத்தின் ஒரு காட்சியில் தலையைக் காட்டி ‘கலக்கிட்டீங்க குரு’ என்பார் பிரபு. இதேபோல, ‘மாப்பிள்ளை’ படத்தில் இடம்பெற்றிருப்பார் சிரஞ்சீவி. இவர்கள் இருவருமே, சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்கள் என்பது வேறு விஷயம். கவுரவ தோற்றத்தில் நட்சத்திரங்களைப் படத்தில் காட்டுவது அடிக்கடி நடக்க வாய்ப்பு கிடையாது. இவ்வாறு நட்சத்திரங்கள் தோன்ற வேண்டுமானால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். நட்பு, உறவு, நன்றி, அடுத்தபட வாய்ப்பு என்று பல காரணங்கள் இதன் பின்னணியில் இருக்கும். 

 

அது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நட்சத்திரத்தின் ‘இமேஜ்’ அந்தப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருக்கும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சுக்ரன்’ படத்தில் விஜய் நடித்ததும், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித் நடித்ததும் கூட இந்தக் கணக்கில்தான் வரும். அதாவது, இந்த நட்சத்திரங்கள் திரையில் தோன்றும்போது அதுவரையிலான திரைக்கதை போக்கு சட்டென மாறும். அதற்கேற்ப, திரையரங்கங்களில் இருக்கும் ரசிகர்களின் மகிழ்ச்சி கூடும். மேற்கண்ட அனைத்துக் காரணங்களையும் ஒருசேர அறிந்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ். தனது முதல் படமான ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் இருந்தே, இந்த உத்தியைப் பின்பற்றி வருகிறார் இவர். 

 

’சிவா மனசுல சக்தி’ படத்தில் ஒரு காட்சி முழுக்க, நடிகர் ஆர்யாவின் நடிப்புத்திறமையை களமிறக்கியிருப்பார். படத்தின் உயிர்நாடியான காட்சி அது. அதற்கு ஈடாக, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெற்றிருப்பார் நடிகர் ஜீவா. இதனைத் தொடர்ந்து, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்று தனது அனைத்துப் படங்களிலும், இந்த உத்தியை விடாமல் தொடர்ந்து வருகிறார் இயக்குனர் ராஜேஷ். இவர் தற்போது, ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. அதோடு, சந்தானமும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கவுரவ தோற்றத்தில் இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது. 

 

திரைக்கதையின் அழுத்தத்தைப் போலவே, நடிகர்களின் முக்கியத்துவத்தையும் ஒரு இயக்குனர் முழுதாக உணர்ந்திருக்க வேண்டும். கமர்சியல் சினிமாக்களைத் தரும் இயக்குனர்களிடம், இந்தத் தகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும். ரசிகர்களைச் சிரிக்கவைக்கும் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் ராஜேஷிடம், இந்தக் குணாதிசயம் அளவுக்கு அதிகமாகவே உண்டு. இதுவே, ‘கடவுள் இருக்கான் குமாரு’ மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது. 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles