ஆர்யா இந்திய டார்ஜான்? கடம்பன் பர்ஸ்ட் லுக் செய்த மாயம்!!

Thursday, November 3, 2016

ஒரே ஒரு போஸ்டர்; ஒரு டீசர். அவ்வளவுதான், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நடிகர் ஆர்யா. அவர் நடித்துள்ள ‘கடம்பன்’ தான், இந்த மாயத்தை நிகழ்த்தியிருக்கிறது. 

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, இஞ்சி இடுப்பழகி படங்களின் சுமாரான வெற்றி, ஆர்யா மீதான ஈர்ப்பை ஆறப்போட்டிருந்தன. கடும் உழைப்பாளிக்கு, இம்மாதிரியான சறுக்கல்கள் ஒரு பொருட்டல்லவே? இடைப்பட்ட காலத்தில், ஜிம்மே கதியென கிடந்தார் ஆர்யா. நட்சத்திர கிரிக்கெட் ஆகட்டும், சக நடிகர்களின் திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் ஆகட்டும்; வழக்கமான ஜாலியோடு அந்த இடங்களில் காட்சி தந்தார் மனிதர். அவ்வப்போது, டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தனது ஜிம் சாகசங்களைப் பகிர்ந்து கொண்டார். 

ஆர்யா ஒரு சைக்கிளிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தற்சமயம் போட்டிகளில் கலந்துவரும் எந்தவொரு அத்லெடிக் வீரருக்கும் இணையான உடல்தகுதி கொண்டவர் அவர். ’இத்தனை கடுமையான பயிற்சிகள் எதற்காக?’ என்று கேட்கும்விதமாகவே, அவர் தரப்பிலிருந்து வெளியான வீடியோக்கள் இருந்தன. ’ஒரு திரைப்படத்திற்காக உடலை முறுக்கேற்றி வருகிறார் ஆர்யா’ என்றே, அதற்குப் பதில்தரும் வகையில் சில செய்திகளும் வெளியாகின. ஆனால், அவை போதுமானதாக இல்லை. 

இந்த நிலையில்தான், ஆர்யாவின் பராக்கிரமத்தை வெளிப்படுத்தியிருக்கிறது ’கடம்பன்’ பர்ஸ்ட் லுக். அருவி, காடு, மலை என்று காட்சிகளில் நிறைந்திருக்கும் சூழலே, இது பழங்குடியின மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம் என்று புரியவைக்கிறது. இந்தப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து காடுகளில் நடந்து முடிந்திருக்கிறது. 

யானைகளுக்கு நடுவே ஆர்யா ஓடிவரும் காட்சி, பார்த்த எல்லோரது கண்களிலும் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆர்யாவின் டுவிட்டர் கணக்கில் நிரம்பி வழியும் வாழ்த்துகள், இதனை நமக்கு எடுத்துச் சொல்கிறது. ’இந்திய டார்ஜான்’ என்றே, ஆர்யாவைக் கொண்டாடுகிறார்கள் பிரபலங்களும் ரசிகர்களும். 
பிரமிக்கும் மனப்பான்மை எல்லோருக்குள்ளும் உண்டு. அதனை வெளிக்கொணர, பெருமுயற்சியும் கடின உழைப்பும் அசாத்திய திறமையும் தேவை. ’கடம்பன்’ மூலமாக, அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஆர்யா. 

எதிர்பார்ப்பைத் தக்கவைப்பதும் அதிகப்படுத்துவதும்தான், திரைக்கலைஞனுக்கு இருக்கும் ஆகப்பெரிய சவால். அந்தவகையில், மீண்டு(ம்) வந்திருக்கிறார் ஆர்யா. 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles