மசாலா காட்சிகள் இல்லாத படம் மரகத நாணயம்!  - நடிகர் ஆதி பளீர்!

Friday, November 25, 2016

'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவண் இயக்கி இருக்கும் படம் 'மரகத நாணயம்'. ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே .சரவண் பேசியபோது, "இதுவரை ஆதி சாரை, ஒரு அதிரடி நாயகனாகத்தான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், 'மரகத நாணயம்' மூலமாக முற்றிலும் மாறுபட்ட ஆதியைக் காண இருக்கிறார்கள். இதுவரை எவரும் கண்டிராத நகைச்சுவை குணங்களைக் கொண்டு, இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஒரு அறிமுக இயக்குநருக்கு இத்தகைய சுதந்திரம் கொடுத்து ஊக்குவித்த, தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அதேபோல், ஒவ்வொரு காட்சியிலும் கனகச்சிதமாக நடித்து, மரகத நாணயத்தின் ஒளியைக் கூட்டிய கதாநாயகன் ஆதி சாருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

 

அவரைத் தொடர்ந்து படத்தின் நாயகன் ஆதி பேசும்போது, 

"திரைப்படங்களில் பொதுவாக இருக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் மசாலா காட்சிகள் இந்தப்படத்தில் இருக்காது. ஆனால் படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் நொடி வரை, ரசிகர்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் மிதப்பார்கள். இதுவரை யாரும் பார்க்காத நகைச்சுவை பாணியை, எங்களின் மரகத நாணயம் படத்தில் உள்ளடக்கி இருப்பதே அதற்குக் காரணம். என்னுடைய புதிய அவதாரத்திற்கு பிரகாச வெளிச்சத்தை இந்த மரகத நாணயம் ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது!" என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

- கிராபியென் பிளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles