பத்து மாத உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது! நடிகர் அருண் விஜய் பெருமிதம்!

Friday, November 25, 2016

'ஈரம்' பட இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள படம் 'குற்றம் 23'. இதில் முற்றிலும் மாறுபட்ட போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். இது அவர் நடிக்கும் 23-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து, சென்சாருக்காக காத்திருக்கிறது ‘குற்றம் 23’. 

இப்படம் குறித்து அருண் விஜய் பேசும்போது,  

"ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு.  நல்லதொரு கதைக்களத்திற்காகவும், அதில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். அதன்படி இயக்குநர் அறிவழகன் செதுக்கி இருக்கும் படம் 'குற்றம் 23'. படத்தின் காட்சிகள் அனைத்தும் அற்புதமான முறையில் உருவாகியிருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பிரமாதமாக இருப்பதனால், பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார். 

 

சமீபத்தில் 'குற்றம் 23' படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த எங்கள் இருவருக்கும், எப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. ஒரு கதாநாயகனாக நான் மேற்கொண்ட பத்து மாத கால கடின உழைப்பிற்கு, தற்போது பலன் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் இந்தெர் குமார் என்னைப் பாராட்டினார். 'குற்றம் 23' படத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இன்று வரை ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி வருகிறார். அவரது சிறப்பான பணி 'குற்றம் 23' படத்தை விளம்பரம் செய்வதிலும், வெளியிடுவதிலும் தொடரும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கின்றது" என்றார். டிசம்பர் மாத இறுதியில், ‘குற்றம் 23’யை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles