வெளியானது ‘சைத்தான்’ படத்தின் சில காட்சிகள்!?

Friday, November 18, 2016

'தொட்டதெல்லாம் பொன்' என்று ஒரு சொல் உண்டு. சிலருக்கு, அது முற்றிலுமாகப் பொருந்திப்போகும். அப்படியொரு காலகட்டத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அதற்காக, வந்தவரை போதும் என்ற எண்ணத்தில் எல்லா புராஜக்டையும் அவர் தொடுவதில்லை.

அதற்கான பலனாக, அவர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதில் ஒரு இழையாக, தற்போது யூடியுபில் வெளியாகியிருக்கிறது ‘சைத்தான்’ படத்தின் சில காட்சிகள். 

ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க, சிங்கிள் ட்ராக் வெளியிடுவார்கள் சிலர்; டீசர் அல்லது ட்ரெய்லரை வெளியிட்டு அசத்துவார்கள். அதிலிருந்து சற்றே விலகி, ‘சைத்தான்’ படத்தின் சில காட்சிகளை வெளியிட்டிருக்கிறது படக்குழு. 

இந்தப்படத்தில், தினேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தனக்கு ஏற்பட்டிருக்கும் மனபாதிப்பைச் சரிப்படுத்த, ஒரு சைக்காலஜிஸ்டை அணுகுகிறார் விஜய் ஆண்டனி. அவரிடம், தனக்குக் கடவுளின் குரல் கேட்பதாகச் சொல்கிறார். (படத்தின் பெயர் சைத்தான் என்பது நம் நினைவுக்கு வருகிறது!?) Past Life Regression Therapy முறையில் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுவதாகவும், இதனையடுத்து முன்ஜென்ம நினைவுகளுடன் அவர் நடமாடுவதாகவும் கதை நகர்கிறது. எது உண்மை, எது பொய் என்று எழும் கேள்வியுடன் திரிகிறார் விஜய் ஆண்டனி. தற்போது வெளியாகியுள்ள 10 நிமிடக் காட்சிகள் சொல்லும் கதை இது. 

இந்தக் காட்சிகளைப் பார்த்ததும், படத்தின் மீதான ஆவல் அதிகரிக்கிறது. படத்தின் பாடல்களை வெளியிடுவதற்குப் பதிலாக, சில காட்சிகளை வெளியிட்ட உத்திக்குப் பலன் கிடைத்திருக்கிறது. வழக்கமான சினிமா பாணியிலிருந்து சற்றே விலகி, கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஹேட்ஸ் ஆப்! உங்ககிட்ட இருந்து, இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்!!

சைத்தான் படத்தின் காட்சிகளைக் காண : https://www.youtube.com/watch?v=z2duX-_YVeE

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles