செல்வராகவன் இயக்கத்தில் #சூர்யா 36

Friday, November 18, 2016

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் உருப்படியாக ஒரு படத்தை எடுத்துவிட்டால், காலத்துக்கும் அவருக்குப் பட வாய்ப்புகள் நிச்சயம். இது, எழுதப்படாத சினிமா விதி. அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் ஹிட்டடித்தால் கேட்கவே வேண்டாம். அந்த இயக்குநரது காட்டில் அடைமழைதான்! 

அந்த வகையில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களின் மூலம் கோலிவுட்டில் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் செல்வராகவன். தொடர் வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் காதல் கதைகளிலிருந்து சற்று விலகி மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டார். அந்தப் படைப்புகள், அவருக்கு கைகொடுக்கவில்லை. ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, தற்போது செல்வராகவன் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கியுள்ளார். வெற்றிக் கூட்டணியான ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தைத் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். இதுதான், தற்போது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்! 

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மறுபுறம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிஸியாக இருக்கிறார் சூர்யா. இதன் ஷூட்டிங் விரைவாக முடிந்துவிடும் என்றும், அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நடிகர் சூர்யாவுக்கு 36வது படமாகும். இதன் படப்பிடிப்பு, அநேகமாக ஜனவரி 2017ல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 - கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles