விக்ரமின் அடுத்த படம் ‘பக்கா கமர்ஷியல்’!

Thursday, November 17, 2016

‘பக்கா கமர்ஷியல்’ படத்தில் விக்ரம் நடித்தால் எப்படியிருக்கும்? விதவிதமான மேக்கப்பில் விக்ரம் நடிப்பதைப் பார்த்துச் சலித்த அவரது ரசிகர்களுக்கு, இதுமாதிரியான கேள்விகள் அடிக்கடி தோன்றும். அதற்கு ஏற்றவாறு, அவரும் மஜா, பீமா, தாண்டவம், பத்து எண்றதுக்குள்ள என்று நடித்துத் தள்ளுவார்.  ஆனாலும், ப்ளாக்பஸ்டர் ஹிட்களான தூள், சாமி, ஜெமினி போன்ற வெற்றிகள் மீண்டும் அமையவேயில்லை. அந்தக்குறையைப் போக்க, ‘வாலு’ இயக்குனர் விஜய்சந்தருடன் தற்போது கைகோர்த்திருக்கிறார் விக்ரம். 

 

’வாலு’ படத்தின் மூலமாக, சிம்புவின் கமர்ஷியல் இமேஜை தக்கவைத்தவர் அதன் இயக்குனர் விஜய் சந்தர். அந்தப்படத்தில் சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் சிம்பு நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை உருவாக்கியது நினைவிருக்கலாம். ஆனாலும், அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவே இல்லை. இந்த நிலையில்தான், விக்ரமின் அடுத்த படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

தரணி, சாக்ரடீஸ், ஹரி, ஆனந்த் ஷங்கர், கௌதம் மேனன் என்று அரை டஜன் டைரக்டர்களின் பெயர்கள் அடிபட்டாலும், இறுதியாக அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் விஜய் சந்தர். ‘நல்ல ரசனையான கமர்ஷியல் படம் கொடுங்க விக்ரம்’ என்பதே, அவரிடம் தமிழ் சினிமா ரசிகர்கள் விடுக்கும் வேண்டுகோள்! தனது மேக்கப் ஆசைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, இதில் விக்ரம் ‘தூள்’ கிளப்புவார் என நம்பலாம்! 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles