'சுப்ரமணியபுரம்' மாதிரியான படம் 'எங்கிட்ட மோதாதே'!

Thursday, November 17, 2016

தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகள் தோற்பதில்லை. அந்தவகையில் 'எங்கிட்ட மோதாதே' படத்துக்கு, அது வெளிவரும் முன்னே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கதாநாயகன் நட்ராஜ், ஈராஸ் சாகர், படத்தின் இன்னொரு நாயகனாக ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், பாடலாசிரியர் யுகபாரதி, படத்தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா, ஸ்டன்ட் மாஸ்டர் மைக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியபோது,     

"சில வாரங்களுக்கு முன்பு, என்னோட உதவியாளர் இயக்கிய 'ப்ரூஸ் லீ' படத்தின் பாடல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்கினேன். இப்போது, என்னுடைய உதவி இயக்குநர் ராமு செல்லப்பாவின் 'எங்கிட்ட மோதாதே' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்திருக்கிறேன். ராமு செல்லப்பா என்னிடம் உதவி இயக்குநராகச் சேரும்போது நான் அவரிடம் கேட்ட முதல் விஷயம், "உனக்கு சமைக்க தெரியுமா?" என்பதுதான்.

அப்போது, அவர் "தெரியும்" என்றார். அதன்பிறகு, நான் அவரை சமைக்கச் சொன்னேன். அவர் சமைத்த உணவு மிகவும் மோசமாக இருந்தது. அதன்பிறகு, நான் அவருக்கு முதலில் சமைக்கத்தான் கற்றுக் கொடுத்தேன். அதன்பிறகு தான், என்னிடமிருந்து அவர் சினிமாவை கற்றுக்கொண்டார். 

வம்சம் திரைப்படத்தின் படப்பிடிப்புத்தளத்தில், எப்போதும் கூட்டத்தில் மறைந்து இருந்து தான் வேலை வாங்குவார். ஏனென்றால், அவர் உயரம் கம்மியாக இருப்பதால் யாரும் அவரைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்பதால் தான். பின்னர், இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, அதன்பின்னர் என்னிடம் வந்து ’சியர்ஸ்’ என்னும் தலைப்பில் கதை சொன்னார்.

அதை என்னைத் தயாரிக்கவும் சொன்னார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், அப்படத்தின் கதை அப்படி. அந்தப் படம் ’யு / ஏ’ வகையறா கதை கூட இல்லை அது ஒரு ’ஏ ஏ ஏ’ வகை கதை. "எங்க இருந்து இந்த மாதிரி கதையெல்லாம் பிடிச்ச?" என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் "இது என்னுடைய நண்பரின் கதை, இதில் நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன்" என்றார். "இதைத் தயாரிக்க முடியாது" என்றதும், வெகுநாட்கள் கழித்து "வேறு ஒரு கதை எழுதி இருக்கிறேன்.

இந்தக் கதை சுப்பிரமணியபுரம் போல இருக்கும்" என்று கூறினார். அதுதான் ’எங்கிட்ட மோதாதே’ படத்தின் கதை. இப்படத்தின் ட்ரைலர் முதல் அனைத்தும் நம்மை ஈர்க்கும் வகையில் உள்ளது" என்று படக்குழுவை உற்சாகமூட்டினார். அவரைத் தொடர்ந்து படத்தின் நாயகன் நட்ராஜ் பேசினார்.

"இப்படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பா, என்னிடம் கதை சொல்லவரும்போது சிறுவன் போல் இருந்தார். இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் என்று கூறி, என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் கதை கூறியதும், எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இப்படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. மகிழ்ச்சி!" என்று முத்தாய்ப்பாக முடித்தார்.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles