எப்படி வேலை வாங்க வேண்டுமென்று வெங்கட்பிரபுவுக்குத் தெரியும்! பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதி 

Tuesday, November 15, 2016

நிரஞ்சன் பாரதி, தமிழ் சினிமாவில் புதுரத்தம் பாய்ச்சும் பாடலாசிரியர்களில் ஒருவர். பாரதியாரின் 5ம் தலைமுறை வாரிசு. 'மங்காத்தா', 'வடகறி' உட்பட சில படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ள இவர், சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் கொண்டாட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 

'மங்காத்தா' படத்திற்குப் பிறகு, யுவன் மற்றும் வெங்கட்பிரபுவுடன் கைகோர்த்திருக்கிறார் இந்த இளைஞர். மங்காத்தாவில் இடம்பெற்ற ‘கண்ணாடி நீ.. கண் ஜாடை நான்..’ என்ற பாடல் மூலமாக, இவர் திரையுலகிற்குள் நுழைந்தார். சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ கிடைத்தாயென என் முன்னைத் தவம் போல’ என்ற பாடல், இவரது கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது. இந்தப் பாடலுக்கு ஹரிசரணும் சின்மயியும் உயிர் கொடுத்திருக்கின்றனர். 

 

படத்தில் இந்தப் பாடல் அமைந்த சூழ்நிலையை நம்மிடம் விளக்கினார் நிரஞ்சன் பாரதி. ”நிறைய போரட்டங்களுக்குப் பிறகு, தனது காதலியைச் சந்திக்கிறார் ஜெய். அதன்பிறகு, இருவரும் தங்களது காதலைக் கொண்டாடுகின்றனர். இதுதான் பாடலுக்கான சூழல். ’நீ கிடைத்தாயென என் முன்னைத் தவம் போல’ என்று இந்தப் பாடல் வரும். இதில் வரும் முன்னை என்பது ஒரு பழமையான சொல். அதாவது, ’பல காலங்களுக்கு முன்பு’ என்று அர்த்தம். பல ஆண்டுகளாகச் செய்த தவத்தின் பலனாக, நீ எனக்குக் கிடைத்தாய் என்று இந்தப் பாடல் நீளும். இசையுடன் பாடல் வரிகள் இயைந்து, நல்ல படைப்பாக இது வெளிவந்திருக்கிறது. பாடல்காட்சிகளும் வெளிவந்தபிறகு, இது மக்கள் மத்தியில் மேலும் பேசப்படும் என நம்புகிறேன்” என்று நம்பிக்கையுடன் பேசினார் நிரஞ்சன் பாரதி.

 

முதன்முதலாக வெங்கட்பிரபுவைச் சந்தித்தது குறித்தும், அதன்பின் பாடல் எழுதக் கிடைத்த வாய்ப்பு பற்றியும் நிறையவே பேசினார். 

 

”இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கும் எனது தந்தை ராஜ்குமார் பாரதிக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு. அவரது மிருதங்க அரங்கேற்றத்தில் அப்பா பாடியிருக்கிறார். கோவா ரிலீஸாகியிருந்த சமயம், எனது பெரியம்மா விலாசினி பேஸ்புக்கில் வெங்கட்பிரபுவைத் தொடர்புகொண்டார். என்னைப்பற்றி அவரிடம் சொல்லி, நான் பாடல் எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார். அதன்பின், நான் அவரைச் சந்தித்தேன். 

 

ஏற்கனவே ஹிட்டாகியிருந்த பாடல்களின் மெட்டுகளுக்கு, பாடல்வரிகள் எழுதிப் பழகிக் கொண்டிருந்தேன். அந்த வகையில், ‘உசுரே போகுதே’ பாடலை நான் மாற்றி எழுதியிருந்ததைச் சொன்னேன். அவருக்கு, அது பிடித்திருந்தது. ’கண்டிப்பாக உன்னை அழைத்து வாய்ப்பு தருவேன்’ என்று சொல்லியனுப்பினார். அதன்பின், நான் படிக்கப்போய்விட்டேன். 

 

அவர் சொன்ன மாதிரியே, மீண்டும் என்னைக் கூப்பிட்டார். மங்காத்தா படத்தின் பாடலுக்கான சிச்சுவேஷனை விளக்கினார். ’கண்ணாடி நீ கண் ஜாடை நான், என் வீடு நீ, உன் ஜன்னல் நான்..’ என்று பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தேன். நீ, நான் என்று வருமாறு நிறைய வரிகளை எழுதியிருந்தேன். அன்றிரவே, அந்தப் பாடல் பதிவானது. பாடல் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ’தல’ அஜித்துக்கும் பிடித்த பாடல் இது என்றும் கேள்விப்பட்டேன். அந்தப் பாடலில் பணியாற்றியது எவ்வளவு சுவையாக இருந்ததோ, அது போலவே சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் பாடலும் அமைந்திருக்கிறது” என்றார். 

 

’வெங்கட்பிரபு சீரியசான மனிதர் இல்லை’ என்று பெரும்பாலான திரை பிரபலங்கள் சொல்வதை வழிமொழியும் நிரஞ்சன் பாரதி, அதுகுறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். “வேலை சரியா நடக்க வேண்டும், அவுட்புட் கரெக்டாக இருக்க வேண்டுமென்று மெனக்கெடுவார் வெங்கட்பிரபு. ஆனால், பழகும்போதும் பேசும்போதும் ரொம்பவே அணுக்கமாக இருப்பார். என்னிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று அவருக்குத் தெரியும். என்னிடம் சிறப்பாக இருப்பவற்றை வெளிக்கொணரும் லாவகம் அவருக்கு அதிகம். அவருடன் பணிபுரிவது சுமை கிடையாது. அவரிடம் இருந்து எந்த பிரஷரும் இருக்காது. அதற்காக, என்ன எழுதினாலும் அவர் ‘ஓகே’ சொல்லிவிடுவார் என்று அர்த்தமில்லை. நம்மை நன்றாக ஊக்கப்படுத்தி திறமைகளை வெளியுலகத்திற்குக் காட்டுவதில்,  அவரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. கண்டிப்பாக இதன் பலன் இந்தப்பாடலில் தெரியவரும். 

 

வெங்கட்பிரபுவுடன் பணிபுரியும்போது, நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்; நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம். மங்காத்தா, சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் போலவே, இந்தக்கூட்டணியுடன் இணைந்து பல வெற்றிப்பாடல்கள் தர வேண்டும். அதற்கு தெய்வம் அருள் புரியுமென நம்புகிறேன்” என்று முடித்துக்கொண்டார்.  செய்யும் வேலையில் லயித்து, அந்த அனுபவத்தை முழுதாக உணர வேண்டும். ஒரு இயக்குனராக வெற்றிபெற்றுள்ள வெங்கட்பிரபுவின் பலம் என்னவென்பதைச் சொல்லாமல் சொல்கிறது பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதியின் வார்த்தைகள்.  

- ஜென்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles