பிரேம்ஜி நடிகர் அஜீத் மாதிரி! டச்சப் பாய் சுரேஷ் 

Tuesday, November 15, 2016

ஒரு படம் எடுப்பது, ஊர் கூடித் தேர் இழுப்பதற்குச் சமம். ’ஒரு படத்தை எடுப்பதற்கே இவ்ளோ அக்கப்போருன்னா, கிட்டத்தட்ட 10 வருஷம் கழிச்சு அதே டீமை வச்சு ரீயூனியன் பண்றது ரொம்பப் பெரிய சாதனை.’ இது நடிகர், நடிகைகளுக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஆச்சர்யம் தரும் ஒரு விஷயம். ’அந்த இயக்குநரோட ஒரே தலைவலிதான்’ என்பது போன்ற புலம்பல்களைக் கோலிவுட் வட்டாரத்தில் ஆங்காங்கே அவ்வப்போது கேட்க முடியும்.

அப்படியொரு சூழலில், படப்பிடிப்பின்போது ஹீரோ முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் வெங்கட் பிரபு. சென்னை 28 படம் தொடங்கி செகண்ட் இன்னிங்ஸ் வரை, இயக்குனர் வெங்கட்பிரபுவின் டீமில் டச்அப் பாயாக பணிபுரியும் சுரேஷை சந்தித்தோம். 

“எங்க அனுபவத்தைச் சொல்றதுக்கு கண்டிப்பா இந்த நேர்காணல் பத்தாது, அவ்வளவு இருக்கு. எங்களுக்கெல்லாம் நண்பர்களை உருவாக்கிக் கொடுத்தது இயக்குனர் வெங்கட் பிரபுதான். அன்புக்கு இலக்கணம் யாருன்னு கேட்டீங்கன்னா, கண்டிப்பா அவரைத்தான் காட்டுவேன். நிறைய இடத்துல கோவத்துல வேலை செய்வோம். இங்கே நாங்க சந்தோஷமா வேலை செய்வோம்” என்று மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் சுரேஷ். அதோடு, தான் சினிமாவுலகினுள் நுழைந்த கதையையும் பகிர்ந்துகொண்டார். 

 

மேக்கப்ங்கிறது சாதாரண விஷயம் இல்ல. எனக்கு மேக்கப் தெரியாது. பிரேம்ஜிக்கு டச்சப் செய்யும்போதுதான், அதைக் கத்துக்கிட்டேன். அவரு ரொம்ப மேக்கப் எல்லாம் போட மாட்டாரு. ஜஸ்ட் முகத்தைக் கழுவிட்டு, சாதாரணமா தலை சீவிட்டு வந்தாலே சூப்பரா அஜீத் மாதிரி இருப்பாரு. 

 

அவுட்டோர் போனதை, எங்களால மறக்கவே முடியாது. அது என்னமோ படப்பிடிப்புக்குப் போனமாதிரியே இல்லை. ஏதோ நண்பர்கள்யெல்லாம் சேர்ந்து பிக்னிக் போனமாதிரிதான் இருந்தது. நாங்க வேலை செய்றதே மக்களை சந்தோஷப்படுத்துறதுக்குதான். 

 

ஒரு படம் வெளியாகி, வெற்றியடைஞ்சு, மக்கள் எல்லாரும் அதைக் கொண்டாடும்போது, எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். இதுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம்னு நினைச்சு, ரொம்ப பூரிச்சுப் போவோம். கடின உழைப்புக்கு மக்கள் கொடுத்த பரிசுதான், அந்த வெற்றி. அந்த வகையில, சென்னை 28 முதல் பாகம் எதிர்பார்த்ததுக்கு மேல வெற்றியைக் குவிச்சது. இரண்டாம் இன்னிங்ஸும் வெற்றியைக் குவிக்கும்னு நம்புறோம். 

 

இந்த நேர்காணல் மூலமா, சென்னை 28 குழுவுல பணியாற்றிய எல்லாருக்கும் என்னோட நன்றியைச் சொல்ல விரும்புறேன். முக்கியமா, இதுல பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் எல்லாருக்கும் என்னோட நன்றியோடு சேர்த்து மரியாதையையும் சொல்ல விரும்புறேன். இதுல பணியாற்றியதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். திரும்பவும் இப்படி ஒரு டீம், இனிமேல் யாருக்குமே அமையாது. அப்படியொரு சிறப்பான டீம் இது.

 

சினிமா படத்துல பணியாற்றும் ஆசையில, திருச்சி பக்கத்துல இருக்குற கிராமத்துலருந்து சென்னைக்கு வந்தவன் நான். வந்ததுலேருந்து இன்னிக்குவரை, வி.பி.கிட்டதான் பணிபுரிஞ்சிட்டு இருக்கேன். உங்க எல்லார்கிட்டயும் நான் விடுக்குற வேண்டுகோள் ஒண்ணுதான். எங்களோட கடின உழைப்பைப் புரிஞ்சுகிட்டு தியேட்டர்ல வந்து படம் பாருங்க. எங்க படத்துக்கு மட்டும் நான் சொல்லலீங்க, எல்லா படங்களுக்கும் பொதுவா தான் சொல்றேன்” என்றவாறே தனது டச்சப் பணிகளைத் தொடர ஆரம்பித்தார் சுரேஷ். 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles