பட்டையக் கிளப்பும் ‘பைரவா’ பாடல்!

Monday, November 7, 2016

பாக்ஸ் ஆபீஸில் பெரிய ஓபனிங் உள்ள ஹீரோக்கள், திரையில் தோன்றும்போதே ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு எகிறும். அதற்கேற்றாற் போல ஒரு சண்டைக்காட்சியோ, பாடல் காட்சியோ படத்தின் ஆரம்பத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவுதான்! ரசிகர்களின் பல்ஸ் புரிந்த இளையதளபதி விஜய், இந்த விஷயத்தை நன்கு உணர்ந்தவர்.

இதனால்தான், அவரது படங்களில் பெரும்பாலும் ‘ஓபனிங் சாங்’ இடம்பிடிக்கும். இதனை அப்படியே அடியொற்றிப் பின்பற்றியிருக்கிறது ‘பைரவா’ டீம். இந்தப்படத்தில் வரப்போகும் ’பட்டைய கெளப்பு.. குட்டையக் குழப்பு..’ என்று தொடங்கும்பாடல், தற்போது நெட்டில் வைரலாகியிருக்கிறது.  

இளையதளபதி விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தை இயக்குபவர் பரதன். இவர் ஏற்கனவே ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கியவர். ’பைரவா’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. பொங்கல் திருநாளையொட்டி, இது ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பைரவா பற்றிய தகவல்கள் வெளியாகும்போதெல்லாம், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பைக் காண முடிகிறது. 

படத்தின் பாடல் வெளியீட்டை ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக ‘பட்டைய கெளப்பு.. குட்டையக் குழப்பு..’ என்று தொடங்கும் பாடல் வரிகள் வெளியானது. உடனே ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது. ‘பைரவா’ படத்தில் விஜய்யின் ஓபனிங் சாங் இது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், திடீரென்று பாடல் வரிகள் வெளியானது எப்படி என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. அதற்கடுத்த சில மணி நேரத்தில், ‘பட்டைய கெளப்பு’ அமிழ்ந்துபோனது. 

’பைரவா’ படத்திற்கு இசையமைப்பவர் சந்தோஷ் நாராயணன். பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர்கள் தரப்பிலிருந்து, இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் பாடல் வரிகள் ‘பைரவா’ படத்தில் இடம்பெற்றதுதானா? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம், பாடல் வரிகள் அப்படி. 

‘கட்டுக்கட்ட சேத்த நோட்டுக்கட்டு பெரும் பூட்டுப் போட்டுக் கிடக்கு..
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்ல.. அது பட்டினியா கிடக்கு..’ 

‘எதிரி வந்தால் மோதிப் பாக்கணுமே
ஏய்க்கும் கூட்டம் என்றால் சாய்க்கணுமே’

என்பது போன்ற வரிகள் இதில் விரவிக் கிடக்கிறதாம். 

ராபின்ஹூட் ஸ்டைலில், இந்தப் பாடலில் விஜய் வலம்வரப்போகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த வரிகள். ஆனாலும், இதுதான் படத்தில் இடம்பிடித்திருக்கும் பாடலா என்ற கேள்விக்கு விடையில்லை. ‘பைரவா’ டீம்தான், இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும்!

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles