நம்ம ப்ரெண்ட்ஸ் நமக்கு அடிமை தானே! இயக்குனர் மகேந்திரன் ராஜமணி

Saturday, December 31, 2016

ஷான் சுதர்சன் வான்சன் மூவிஸ் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. ஜெய், பிரனிதா, கருணாகரன், காளிவெங்கட், நவீன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் இயக்குனர் மகேந்திரன் ராஜமணி. சந்தானத்தை திரையுலகத்திற்குத் தந்த ‘லொள்ளு சபா’ குழுவைச் சேர்ந்தவர். சந்தானம் நாயகனாக நடித்த படங்களில் இணைந்து பணியாற்றியவர். காமெடியே எனது பலம் என்று களமிறங்கியிருக்கும் இவரைச் சந்தித்தோம். 

எனக்கு வாய்த்த அடிமைகள் என்று படத்திற்கு பெயர் வைத்தது ஏன்?

நம்மோட பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் எல்லோருமே, நம்ம அன்புக்கு அடிமையானவங்க தான். அந்த வகையில, ஜெய்யோட அன்புக்கு அடிமையான மூணு ப்ரெண்ட்ஸை பத்தின கதை இது. அதனால, நாலு பேருக்குமே இதுல முக்கியத்துவம் உண்டு. 

 

ஜெய், பிரனிதா காம்பினேஷன் திரையில் எப்படி வந்திருக்கிறது?

காதல் தோல்வியுற்ற ஒரு ஆள் என்ற கேரக்டருக்கு, ஜெய் ரொம்பவே பொருந்திப் போயிருக்கார். பிரனிதா உடனான லவ் போர்ஷனிலும்  சரி, ப்ரெண்ட்ஸை டார்ச்சர் பண்ற காட்சிகள்லயும் சரி, ஜெய் ரொம்ப அருமையா பண்ணியிருக்கார். நடிப்புல ரொம்பவே அர்ப்பணிப்புள்ள ஆள் அவர். ஷூட்டிங்ல நிறைய ஐடியாக்கள் சொல்வார். அது எனக்கு உதவிகரமா இருந்துச்சு. 

அதேமாதிரி, இதுல கொஞ்சம் நெகட்டிவான கேரக்டர்ல நடிக்கிறாங்க பிரனிதா. இந்தக்கதையை, அவர்கிட்ட போன்ல தான் சொன்னேன். சுமார் 45 நிமிஷம் தமிழ்ல பேசினேன். அவங்க கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. ஆனாலும் சொன்னதைப் புரிஞ்சுகிட்டு, உடனே நடிக்க சம்மதிச்சாங்க. 

 

அடிமைகள் பற்றி..

முதல் அடிமை கருணாகரன், இந்த படத்துல பேங்க் கேஷியரா வர்றார். அவரோட ஜோடியா பிரியங்கா வர்றாங்க. அடுத்தது காளி வெங்கட். மைதீன் பாஷா என்ற கேரக்டர்ல, ஷேர் ஆட்டோ ஓட்டுறவரா நடிச்சிருக்கார். முக்கியமா, இதுல அவர் தல ரசிகரா வர்றார். மனைவி, மகன்னு இருக்குற குடும்பஸ்தர் அவர். 

அப்புறம் மூன்றாவது அடிமையா வர்றார் நவீன். இவர் இயக்குனர் விக்ரம் குமாரின் அசோசியேட் டைரக்டர். கஸ்டமர் கேர்ல வேலை பார்க்குற ஆளா, இதுல நடிச்சிருக்கார் நவீன். டாம் அண்ட் ஜெர்ரியாக கருணாகரனும் காளி வெங்கட்டும் சண்டை போடும்போது, சமாதானப்படுத்தும் வேலை இவருடையது. ஹீரோவைச் சுத்தியிருக்குற வழக்கமான ப்ரெண்ட்ஸா, இவங்க இருக்க மாட்டாங்க. இதுல எல்லோருக்குமே ஒரு வாழ்க்கை இருக்கும். 

இதுதவிர, நான் கடவுள் ராஜேந்திரன் WWF ராக் ரசிகனா நடிச்சிருக்கார். இவங்களோட, தம்பி ராமையா ஒரு சைக்கியாட்ரிஸ்டா வர்றார். 

 

’இனிமே இப்படித்தான்’ சந்தோஷ் தயாநிதியோட இணைந்த அனுபவம் பற்றி..

இதுல மூன்று பாடல்கள் இருக்கு. ‘ஒன்றோடு தான் ஒன்றாக வாழும்’ என்ற பாடலைப் பாடியிருக்கார் சந்தோஷின் நண்பர் அனிருத். இதை கபிலன் எழுதியிருக்கார். நட்பைப் போற்றும் பாடல் இது. 

‘கண்ணாடிப் பூவுக்கு வண்ணமில்லை’ என்ற பாடலையும் கபிலன் தான் எழுதியிருக்கார். ஜெய்க்கும் பிரனிதாவுக்கும் இடையே காதல் அரும்பும்போது வரும் பாடல் இது. 

மூன்றாவது பாடல், நண்பர்கள் ஒருவருக்கொருவர் திட்டும் விதமாக வரும் ‘மண்ணெண்ணெய் வேப்பெண்ணெய்’ பாடல். இது யூடியுப்ல ட்ரெண்டிங்கில் இருக்கு. இதை எழுதியவர் காமெடி பஜார் மாறன். இந்த பாட்டுல, சில டிவி ஷோக்களை இமிடேட் பண்ணியிருக்கோம். 

 

இது வயது வந்தோருக்கான படமா?

போஸ்டர் எல்லாம் பார்த்துட்டு, இது அடல்ட் படமான்னு கேட்குறீங்க. இது அடல்ட் மூவி இல்ல, ஆல் கிளாஸ் மூவி. குடும்பம், குழந்தைகளோட வந்து படத்தைப் பார்க்கலாம். இளைய தலைமுறைக்கும் பிடிக்கும்விதமா இது இருக்கும். 

 

குறுகிய காலத்தில் இந்தப்படம் தயாரானது எப்படி?

படம் குறுகிய காலத்தில் தயாரானாலும், இந்தக்கதையை நான் நாலு வருஷமா மனசுல வச்சிட்டிருக்கேன். நிறைய தயாரிப்பாளர்களைப் பார்த்து, இந்தக் கதையைச் சொல்லியிருக்கேன். ஒவ்வொரு நாளும் கதையை மெருகேத்துனேன். இடையில ஒருநாள் ஷான் சுதர்சன் சாரை பார்த்தேன். தயாரிப்பு நிர்வாகி சுப்பு நாராயணன் தான், அவரைச் சந்திக்க உதவி செய்தார். அதன்பிறகு படமா தயாராகும்போது, எல்லாருமே இன்வால்மெண்டோட வேலை பார்த்தாங்க. அதனால, படம் சீக்கிரமா தயார் ஆயிடுச்சு. எல்லாருமே பக்காவான ஆர்ட்டிஸ்ட் என்பதால, 35 நாள்ல ஷூட்டிங் முடிச்சுட்டோம். 

 

காமெடிப்படம் எடுக்கிறவங்க ஸ்பாட்ல சீரியஸா இருப்பாங்கன்னு சொல்வாங்களே?

நாமும் டென்ஷனாகி, மத்தவங்களையும் டென்ஷன் ஆக்குறது எனக்குப் பிடிக்காது. அப்படி இருக்கவும் தெரியாது. ஏன்னா, நான் சந்தானத்தோட டீம்ல இருந்து வந்தவன். கூட இருக்கிறவங்களை சந்தோஷமா வச்சுக்கணும்கறதுக்காக, ரொம்ப ஜாலியா தான் ஷூட் பண்ணோம். 

 

முதல் படத்திலேயே முழுநீள காமெடியை நம்பியது ஏன்?

முதல் படம் கமர்ஷியல் பார்முலாவுக்குள்ள இருக்கணும்னு எதுவும் நினைக்கலை. எனக்கு எது வருகிறதோ, அதை செஞ்சிருக்கேன். எனக்குன்னு எந்த எல்லையும் வச்சுக்கலை. 

 

எனக்கு வாய்த்த அடிமைகள் ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைத் தரும்?

எதிர்பார்ப்பு இல்லாம தியேட்டருக்கு வாங்க; நிறைய சந்தோஷத்தோட போங்க. இதைத்தான் சொல்ல விரும்புறேன். அதை என்னால உறுதியா சொல்ல முடியும். சிம்பிள் அண்ட் பெஸ்டாக தனது பதில்களைத் தருகிறார் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ இயக்குனர் மகேந்திரன். இவரது வரவு தமிழ்த்திரையில் புது வெளிச்சம் பாய்ச்சட்டும்!

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles