எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் பலமே காமெடி தான்..!! ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி

Saturday, December 31, 2016

யதார்த்தமான, கண்ணை உறுத்தாத, அதேவேளையில் எல்லோரையும் ரசிக்கவைக்கிற ஒளிப்பதிவு மிகவும் அபூர்வமான ஒரு விஷயம். அதனை வெகு இயல்பாகக் கையாளக்கூடியவர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி. பி.சி.ஸ்ரீராம் குருகுலத்தில் இருந்து வந்த இவர், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, வம்சம், மௌனகுரு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று விதவிதமான கதைகளுக்குக் கலைவண்ணம் தந்தவர். விரைவில் வெளியாகவிருக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தை அழகூட்டியிருக்கிறது இவரது கேமிரா கண். 
 

முழுநீள நகைச்சுவைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றிக் கேட்டபோது, விழிகள் விரியப் பேசினார் மகேஷ் முத்துசுவாமி.

 

மகேஷ் முத்துசாமி காமெடிப்படத்தில் பணிபுரிகிறார் என்பதே பலருக்கும் ஆச்சர்யம் தரும் விஷயம். இது எப்படி சாத்தியமானது?

இதுக்கு முன்னால ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் பண்ணியிருக்கேன். ஆனா, இது வேற மாதிரி காமெடிப்படம். தனியா காமெடி ட்ராக் எதுவும் கிடையாது. ஒவ்வொரு கேரக்டரோடவும் காமெடி சேர்ந்தே வரும். அதனால விஷுவலா பண்ண நிறைய ஸ்கோப் இருந்தது. ரொம்பவும் புரபொஷனலான டீம், நிறைய ஐடியாக்களோட இருந்தாங்க. படத்துல ஒரு மார்ச்சுவரி சீன் வரும். அதுலயும் காமெடி இருக்கும். இந்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது. 

 

எனக்கு வாய்த்த அடிமைகள் உருவாக்கத்தில் இருந்த சவால்கள் பற்றி..

இந்தப் படத்தோட பலமே காமெடிதான். நாலு ப்ரெண்ட்ஸ், அவங்களோட உலகத்தைப் பத்தின ஒரு கதை. ஒவ்வொருத்தரும் வேறவேற பேக்ரவுண்ட்ல இருந்து வர்றவங்க. கால் செண்டரில் வேலை பார்ப்பவர், ஐடி ஊழியர், ஷேர் ஆட்டோ ஓட்டுனர் என்று வெவ்வேறு வேலை பார்க்கிறவங்க. இது தவிர, நான் கடவுள் ராஜேந்திரன் தனியா வருவார். இதனால, ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேற கலர் டோன் வச்சு ஒர்க் பண்ணோம். 

கண்ணாடி பூ என்ற டூயட் பாடலை கொடைக்கானல்ல ஷூட் பண்ணோம். அந்த லொகேஷனுக்குப் போகவே, குறைஞ்சது 2 மணி நேரம் ஆகும். கடுமையான பனி, மழை என்றிருந்ததால் முதல் நாள் எதுவும் ஷூட் பண்ணலை. அடுத்தநாள் அதே இடத்துக்குப் போனோம். ஒரே நாள்ல எல்லாத்தையும் ஷூட் பண்ணிட்டோம். ’அந்த லொகேஷன் எங்க இருக்கு?’ன்னு இப்போ நிறைய பேர் கேட்கிறாங்க. 

மண்ணெண்ணெய் விளக்கெண்ணெய் பாடல், எல்லோர்கிட்டயும் ஈஸியா ரீச் ஆகும். பிரபலமான டிவி ஷோ எல்லாம் காமெடியா வர்ற மாதிரி, இந்தப் பாடல் இருக்கும். ஒரு டிவி ஷோவுக்கு தேவையான லைட்டிங்கோட, ஒரு பாடலை ஷூட் பண்றது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இப்போ அந்த பாட்டு ட்ரெண்டிங்ல இருக்கிறதுல சந்தோஷம்..

 

இயக்குனர் மகேந்திரன் ராஜமணி கதை சொன்னபோது, நீங்கள் உணர்ந்தது என்ன?

ஸ்கிரிப்ட் கொடுத்தபோதே, மெயின் ரோல் ஜெய் செய்வதாகச் சொன்னார். அவருக்காகவே, அந்த ரோல் எழுதியது மாதிரி இருந்தது. முதல் நாள் ஷூட்டிங்ல ஜெய்யை பார்த்ததும், அது கரெக்ட்டுன்னு தோணுச்சு. படம் முடித்துவிட்டு பார்த்தபோது, ’விஷூவலா ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு’ என்றார் மகேந்திரன். எனக்கும் அப்படித்தான். இரண்டு மணி நேரமும் சிரிக்க வைக்கும் படமாக உருவாகியிருக்கு ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. 

 

ஷூட்டிங்ஸ்பாட் கலகலப்பாக இருந்ததா?

மகேந்திரன், நடிகர் சந்தானத்தின் டீமில் இருந்தவர். அதனால, ஒவ்வொரு சீன் எடுக்கும்போதும் கலர்புல்லா இருந்தது. நாம ஒரு டயலாக் சொன்னா, அவர்கிட்ட இருந்து ஒரு கவுண்டர் வரும். எதுக்கும் தயார்ங்கற மாதிரியான ஒரு டீம் இருந்ததால, ஷூட்டிங்ல எங்களுக்கு எந்த இடைஞ்சலும் தடையும் வரலை. திட்டமிட்ட நாட்களுக்கு முன்னாடியே, நாங்க படத்தை முடிச்சுட்டோம். எல்லாருமே போட்டி போட்டு வேலை பார்த்தாங்க. குறிப்பாக, நடிக்கிறவங்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. இப்போ படம் பார்க்கும்போது, அது நல்லாவே தெரியுது. எல்லோரும் ரொம்ப உற்சாகத்தோட செய்த படம் இது.

 

ஹீரோ, ஹீரோயினை அழகாகக் காட்ட எவ்வளவு மெனக்கெட்டீங்க?

இந்தப்படத்துல நான் ரொம்ப கஷ்டப்படலை. ஏன்னா, ரெண்டு பேரும் வரும்போதே அழகாதான் இருந்தாங்க. 

 

’எனக்கு வாய்த்த அடிமைகள்’ ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைத் தரும்?

இரண்டு மணி நேரமும் போரடிக்காம, ரொம்ப என்ஜாய் பண்ணி இந்தப்படத்தைப் பார்க்கலாம். ஆனா, இந்தப்படத்துல இளைஞர்களுக்குத் தேவையான ஒரு கருத்தும் இருக்கு. காதலுக்காக தற்கொலை செய்வது, ஆசிட் ஊற்றுவது என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடக்கின்றன. ரொம்பவே வேகமா இருக்குற உலகத்துல, வாழ்க்கையை எப்படிப் பார்க்கலாம் என்பதைச் சொல்கிறது படம். அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக, இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும்.  

 

உங்களது ஒளிப்பதிவில் அடுத்து வெளிவரவிருக்கும் படங்கள் பற்றி..

‘போங்கு’ என்ற படத்தில் வேலை செய்திருக்கேன். இதுவும் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இந்தப்படத்தோட ஹீரொ கேமிராமேன் நட்டி சார். ஷூட் பண்ணும்போது, ‘இந்த ஷாட் நான் பண்ணட்டுமா’ என்பார். இந்தப்படமும் ரொம்பவே நன்றாக வந்திருக்கு. கார் திருட்டு பற்றிய ஸ்டைலான படம் அது. 

அப்புறம் தினேஷ் மாஸ்டருடன் ‘ஒரு குப்பைக்கதை’ என்ற படத்துல ஒர்க் பண்ணியிருக்கேன். அது, பேமிலி சென்டிமெண்ட் நிறைந்த கதை. அது தவிர, ராதாமோகன் உதவியாளர் நவீன் இயக்கும் ‘சத்ரு’ என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்றேன். ’மதயானைக்கூட்டம்’ கதிர் அந்தப்படத்தோட ஹீரோ. அந்த வேலைகளும் போயிட்டிருக்கு. 

அளவாகப் பேசினாலும், தெள்ளத்தெளிவாக தனது கருத்துகளை முன்வைக்கிறார் மகேஷ் முத்துசுவாமி. மிகவும் இளமையான, கலகலப்பான, திறமையான ஒரு குழுவுடன் இணைந்து வேலை செய்த மகிழ்ச்சி அவரது பேச்சில் தென்படுகிறது. 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles