சென்னைக்கு இன்னொரு முகம் இருக்கு! இயக்குநர் மீரா கதிரவன் 

Saturday, December 31, 2016

"பொதுவா, நான் இமேஜ் என்கிற வளையத்துக்குள்ளே சிக்கிக்கொள்ள விரும்பாத ஆள். கலைத்தன்மைமிக்க படமாக 'அவள் பெயர் தமிழரசி'யை  இயக்கியதால், அடுத்து ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய தேக்கம் இடையில் ஏற்பட்டுவிட்டது. எவ்வளவு வேகமாக, தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்தேனோ, அதற்கு நேர் எதிரான நிலைக்குப் போய்விட்டேன். அதை தேக்கம் என்றும் சொல்லிவிட முடியாது.

வேகமாக ஓடி வந்ததால் ஏற்பட்ட களைப்புக்காக எடுத்துக்கொண்ட சின்ன இளைப்பாறல் என்று வைத்துக்கொள்ளலாம்!" பேசத் தொடங்கும்போதே, நீண்ட இடைவெளிக்கான தன்னிலை விளக்கம் தருகிறார் மீரா கதிரவன். 'விழித்திரு' மூலமாக, மீண்டும் கோலிவுட்டில் பட்டையைக் கிளப்ப வருகிறார்.  

 

படத்தின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறதே?

"வெவ்வெறு வகையான நான்கு கதைகளை ஒரே படமாக பண்ண ஒரு ஸ்கிரிப்ட் வைத்திருந்தேன். அதற்கு, ஆரம்பத்தில் 'சென்னையில் ஒரு நள்ளிரவு' என்று பெயர் வைத்தேன். இது கவித்துவமாக இருப்பதால், 'வெண்ணிற இரவுகள்' என பெயர் மாற்றினேன். இந்தப் பெயர் சினிமா நண்பர்கள் பலருக்கும் பிடித்திருந்தது. ஆனால், என் மேல் உள்ள ஆர்ட் பிலிம் மேக்கர் என்கிற இமேஜை உடைக்க வேண்டும் என நினைத்தேன். அதன்பிறகு யோசித்து வைத்த டைட்டில்தான் 'விழித்திரு' " 

 

என்ன மாதிரியான கதை இது?

"இந்தப் படம் ஒரு பெரிய செய்தியை உங்களுக்குச் சொல்லும். நாம் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், ஒரு நொடியில் அல்லது ஒரு நிமிஷத்தில் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் நம்ம வாழ்க்கையில நடந்து, எல்லாத்தையுமே புரட்டிப்போட்டுடும். அதற்கு கண் முன்னாலேயே நிறைய உதாரணங்கள் இருக்கு. அதனால் எப்பவும் நாம விழிப்போடு இருக்க வேண்டியிருக்கு. அதனாலதான் படத்துக்கு 'விழித்திரு' என்றும் பேர் வைத்தேன். அதை விழித்திருக்கும் இரவு என்றும் சொல்லலாம்!"

 

போஸ்டர் முழுக்க நட்சத்திரப் பட்டாளங்களாக இருக்கிறதே?

"படத்தில் விதார்த், வெங்கட் பிரபு, கிருஷ்ணா, தம்பி ராமையா, நாகபாபு, தன்ஷிகா, அபிநயா, பேபி சாரா என நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தில் வர்ற பாத்திரங்களுக்கு இவங்க எல்லோருமே தேவைப்பட்டதால் தான், கேஸ்ட்டிங் வேல்யூவோட அவர்களைத் தேர்வு செய்தேன். புதுமுகங்களை தேடிப் போயிருக்கலாம். பிரபலமான இயக்குநராகவோ அல்லது பிரபலமான தயாரிப்பு நிறுவனமாகவோ இருந்தால்தான், அது சாத்தியம். என்னை மாதிரி வளர்ந்து வருகிற இயக்குநர்களுக்கு புதுமுகங்களை வைத்து இயக்குவது சாத்தியமில்லை. ஆனால், ஒரே நாளில் ஒரே விளம்பரத்தில் படம் வெளியே தெரிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த நட்சத்திரப் பட்டாளம் தான். இந்தப் படத்தின் பலமும் அவர்கள் தான்!"

 

இந்தப் படத்தின் ஹீரோ யார்?

"ரொம்ப சிக்கலான கேள்வி. இந்தப் படத்தில் எல்லோருமே இருக்காங்க. எல்லா ஆர்ட்டிஸ்ட்டிக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கு. ஆனா, திரைக்கதைதான் ரியல் ஹீரோ!"

 

ஒரே இரவில் நடக்கும் கதை எனும்போது, நிறைய உழைப்பு தேவைப்படுமே?

"இந்தப் படத்தின் படப்பிடிப்பை பகலில் நடத்த முடியாது. இரவில்தான் பண்ணியாகணும். கதைப்படி, 95 சதவீத காட்சிகள் சென்னை நகரத்தின் சாலைகளில்தான் எடுக்க வேண்டியிருந்தது. அதனால் இரவு 9லிருந்து 10 மணிக்கு தான் கேமிரா ஆன் பண்ணுவோம். இரவு 11 மணிக்கு மேலே நிறைய ஆர்ட்டிஸ்ட்டை வைச்சுட்டு ஷூட் பண்ணும்போது, ஆடியன்ஸ் கூடிடுவாங்க. அப்புறம் போலீஸ் தொந்தரவுகள் இருக்கும். அதற்குள் 2 மணி ஆயிடும். அதனால டபுள் கால்ஷீட்டில்தான் முழுப்படத்தையும் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமானது. 

வேறு ஊரில் வைத்தும் இந்தப் படத்தை எடுக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால், இந்தப் படத்தின் உயிர்நாடியே சென்னைதான் என்பதால், வேறு எங்கும் படமாக்கவில்லை. இரவில் இன்னொரு உலகமாக இருக்கிற சென்னையைப் பதிவு செய்ய நினைத்தேன். அதற்கு இன்னொரு முகம் இருக்கு. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு, நான் நினைத்ததை எடுத்துவிட்டேன். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நடிகர், நடிகையருக்கு தான் நன்றி சொல்லணும்!" நம்பிக்கையோடு பேச்சை முடிக்கிறார் மீரா கதிரவன். காத்திருப்பவனுக்குத்தான் தெரியும் இரவின் நீளம். விழித்திருப்பவனுக்குதான் எப்போதும் வெற்றி. மீரா கதிரவனின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, இந்த வார்த்தைகள் மனசுக்குள் ஒலித்தது!

 - கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles