டிஜிட்டல் பிலிம் மேக்கிங் என்பது வரம்! ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத்

Friday, December 16, 2016

தமிழ் சினிமாவில் தடதடவென சிகரம் நோக்கி வளர்ந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி. தான் தயாரித்து நடிக்கும் ஒவ்வொரு படத்தையும், அவர் தேர்ந்தெடுக்கும் விதமே தனி. அதனால்தான், அவரிருக்கும் திசையில் வெற்றி மேல் வெற்றி. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் 'சைத்தான்'. அதற்கேற்றாற்போல, தன்னுடைய படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேடித்தேடித் தேர்ந்தெடுக்கிறார் விஜய் ஆண்டனி. அந்தவகையில், இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத்தின் பங்கு முக்கியமானது. 'சைத்தான்' படத்தில் பிரேம் பை பிரேம் திகிலூட்டியிருந்தார். அவரைச் சந்தித்தபொழுது...

'சைத்தான்' பட அனுபவம் குறித்து..

"ஒரு சவுண்ட் இன்ஜினியராக வேலை பார்க்கும்போதிருந்தே விஜய் ஆண்டனி சாரை எனக்குத் தெரியும். எப்பவும் தன்னுடைய வேலைகளில் ஒரு ஒழுங்கை பாலோ பண்ணுவாரு. கடினமான உழைப்பாளி.  'சைத்தான்' படத்தில அவரோட வொர்க் பண்ணும்போது, அதைத்தான் பார்த்தேன். அதேபோல, படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும் தன்னோட ஸ்கிரிப்ட்டுக்காக நிறைய ஹோம் வொர்க் செஞ்சிருந்தாரு. அடிப்படையில் அவர் ஒரு ஆவணப்பட இயக்குநர் என்பதால், அது ரொம்ப சப்போர்ட்டிவா இருந்துச்சு. ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படத்துக்கு தேவையான எல்லா டேட்டாவும் அவர் ரெடியா வச்சிருந்தாரு. அதுவும் பெரிய பலமா அமைஞ்சது!"

 

’சைத்தான்’ ஒளிப்பதிவில் என்ன ஸ்பெஷல்..?

" 'சைத்தான்' படத்தில் இரண்டு விதமான ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கிறேன். கிளாஸியா, கிளாமரா பண்ண வேண்டாம் என்கிற சாய்ஸ் இருந்தது. ஏன்னா, படத்தின் கதை ஒரு மனுஷனுடைய மூளைக்குள்ளே நடக்குது என்பதுதான். கொரில்லா பிலிம் மேக்கிங் டைப்பில் ஸ்டைலா கிடைக்கக்கூடிய லைட்டிங்கை பயன்படுத்தினோம். இரண்டாவது, இருக்கிற ஆம்பியன்ஸ் லைட்டை கொஞ்சம் அதிகப்படுத்தி ஷூட் பண்ணோம். படப்பிடிப்புக்கு திட்டமிட்டபோதே ஆர்ட் டைரக்டரோடு கலந்து பேசி, தேவையான வண்ணங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினேன். அதனாலதான், படத்தில் ஒளிப்பதிவு ஸ்பெஷலா தெரியுது!"

 

படத்தின் நாயகியை அழகா காட்டியிருக்கீங்களே..?

"ரொமாண்டிக்கான காட்சி அல்லது இயல்பான காட்சி எதுவாக இருந்தாலும், தன்னுடைய யதார்த்தமான நடிப்பை அருந்ததி நாயர் வழங்கியிருந்தாங்க. அதனால, ஸ்பாட்டில் அவங்களை பொசிஷன், ரீபொசிஷன் பண்ண வேண்டிய அவசியமே ஏற்படலை. அவர்களுடைய நடிப்பு சிறப்பாக இருந்ததும், லைட்டிங் அதுக்கு ஏற்றமாதிரி அமைஞ்சதும், ஸ்கீரின்ல அவங்களுக்கு கூடுதல் அழகை கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்!"

 

சினிமாட்டோகிராபியில ஒரு ரிதம் தெரிகிறதே?

"இந்தப் படத்துக்காக சுமார் இரண்டு வருஷம் டீமா வேலை பார்த்தோம். அதனால, ஒவ்வொரு விஷயமும் எல்லாருக்கும் தெரியும். ஆக, எல்லோருடைய ஒத்துழைப்பும் கிடைச்சதால ரிதம் ஆஃப் சினிமாட்டோகிராபி சரியா வந்திருக்கு. படத்தின் சில காட்சிகளை, காத்திருந்து மாலை ஆறு முப்பதுக்கு எடுப்போம். அப்படி பண்ணும்போது புரொடக்‌ஷன் மேனஜர் சத்தம் போடுவாரு. படத்தோட அவுட்புட்டை பார்த்ததும்தான் அவருக்கு நிம்மதியே வந்தது. ஏன்னா, அந்தக் காட்சிகளுக்கு நிறைய மெனக்கெட்டோம். அதெல்லாம் படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும்!"

 

டிஜிட்டல் பிலிம் மேக்கிங் முழுமையடைந்துவிட்டதா?

"நான் சினிமாவுக்குள்ளே வரும்போது டிஜிட்டல் மீடியம் ஆரம்பிக்கவே இல்லை. விளம்பரப்படங்களை எல்லாம், ஆரம்பத்தில் பிலிமில்தான் எடுத்தேன். பிறகு டிஜிட்டல் வரத்தொடங்கியபோது, அதை கஸ்டமர்கிட்ட கொண்டுபோகும்போது ரொம்ப சிரமமாக இருந்தது. இப்போ டிஜிட்டல் பிலிம் மேக்கிங் கிரியேட்டருக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கு. எல்லோராலும் படம் பண்ண முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கு. அதனால, இனிவரும் காலங்களில் கதைகளில் நிறைய மாற்றங்கள் நிகழும். இதுதான் டிஜிட்டல் நமக்கு கொடுத்திருக்கும் வரம்!" என்றார். புதிய கலைஞர்களின் வரவு புதுவித படைப்புகளைத் தரும் என்பதை உணர்த்தியிருக்கிறது ‘சைத்தான்’ திரைப்படம். அதன் பின்னணி குறித்துப் பேசும்போது, பிரதீப் கலிபுரயத்தின் அனுபவமும் நமக்குக் காணக்கிடைக்கிறது..

 - கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles