அப்போ 'பேச்சுலர்'....இப்போ குடும்பஸ்தன்! - நடிகர் ஜெய்

Friday, December 9, 2016

கோலிவுட் வரலாற்றில் நட்பையும், கிரிக்கெட் விளையாட்டையும் பிணைத்து மிக அற்புதமாக எடுக்கப்பட்ட திரைப்படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'சென்னை 28'. இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்த ரகு கதாபாத்திரம், அந்த அணி வெற்றிக்கோட்டை நெருங்குவதற்கும், கார்த்திக் & செல்வி ஜோடியின் காதலை ஒன்று சேர்ப்பதிலும் மிக முக்கியப்பங்காற்றியது.
 

’பார்க்கிறதுக்கு விஜய் மாதிரியே இருக்கான்’ என்று சிவா சொல்வது போல, ஜெய்யின் பர்சனாலிட்டியும் அதில் உயர்த்திக் காண்பிக்கப்பட்டிருக்கும். 'டி ஷர்ட்', 'ஜீன்ஸ்' என்று சென்னை இளைஞர்களுக்கே உரிய பாணியில் முதல் இன்னிங்ஸில் தோற்றம் அளித்த ஜெய், தற்போது சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸிலும் கலக்கியிருக்கிறாராம். 

படத்தில் தனது நடிப்பு குறித்து நடிகர் ஜெய் பேசியபோது, "ஏறக்குறைய பத்து வருடத்திற்கு முன் சென்னை அல்போன்சா மைதானத்தில் நானும் என்னுடைய 'ஷார்க்ஸ்' அணியினரும் விளையாடிய ஆட்டம், இன்னும் என் நினைவில் ஆழமாக இருக்கிறது. காலங்கள் கடந்து ஓடினாலும், எங்களின் நட்பு மேலும் மேலும் வலுப்பெற்றிருக்கிறது. எங்கள் கேப்டன் வெங்கட்பிரபு சார் 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' பற்றி பேசும்போது, பெருமளவில் உற்சாகம் அடைந்தவன் நான் தான். பாகம் ஒன்றில் பார்த்த அதே ரகுவை இந்த இரண்டாம் பாகத்திலும் பார்க்கலாம். என்ன அப்போ'பேச்சுலர்'... இப்போ குடும்பஸ்தன்..!

திரையுலகில் நான் வளர்ந்து வந்ததிற்கு முழுக்காரணம் 'சென்னை 28' என்பதை நான் எப்போதும் பெருமையாகச் சொல்லுவேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு, எங்கள் ஷார்க்ஸ் அணிக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. அதிலும் என்னுடைய நண்பனும், ஷார்க்ஸ் அணியின் சிறந்த பீல்டருமான பிரேம்ஜியோடு மீண்டும் விளையாடுவது, எனக்குப் புதிய உற்சாகத்தை அளிக்கிறது. நிச்சயமாக, இந்த முறை ராயபுரம் ராக்கர்ஸ் அணியை வீழ்த்துவோம் !" என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles