மிரட்டும் வித்யாபாலன்!

Friday, December 2, 2016

இந்தியாவில் இருந்து வெளிவரும் படங்களை வேற்று நாட்டவர்கள் பார்க்கும்போது, அவர்களுக்கு அது உலக சினிமாவாகத் தெரிய வேண்டும். அப்படியொரு அற்புதம் நிகழ வேண்டுமானால், அந்தப்படம் இங்குள்ள கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அதோடு, அது ஒரிஜினலாகவும் இருக்க வேண்டும். (அதெப்படி முடியும் என்பவர்களுக்காகவே, டிவிடி கடைகள் இயங்கிவருகின்றன) அப்படிப்பட்ட படங்கள், இந்தியாவில் இருந்து அவ்வப்போது வெளியாகும்; ரசிகர்களின் மனதோடு ஒட்டிக்கொள்ளும். அதிலொன்று, கடந்த 2012ம் ஆண்டு வெளியான ’கஹானி’ திரைப்படம். இதன் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. 

’கஹானி’ படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர் நடிகை வித்யா பாலன். அந்தப்படத்தை எழுதி இயக்கியிருந்தார் சுஜாய் கோஷ். தொலைந்துபோன கணவனைத் தேடிவரும் மனைவியாக , அந்தப்படம் முழுக்க வருவார் வித்யா. அப்போது நடக்கும் களேபரங்களே, திரைக்கதையைக் கெட்டியானதாக மாற்றியிருக்கும். அதே பாணியில், கஹானி 2 படத்தின் திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதனாலேயே, கஹானி 2வின் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டிருக்கிறது. 

முதல் பாகத்தைப்போன்று இரண்டாம் பாகம் இல்லை என்றோ, அதைவிட நன்றாக இருக்கிறது என்றோ, கஹானி 2விற்கு வரவேற்பு கிடைக்கலாம். இந்த இரண்டு துருவங்களுக்கு நடுவே, ’சுமாரான படம்’ என்ற அந்தஸ்தை இந்தப்படம் பெறாது. எனவே, நகத்தைக் கடித்துக்கொண்டிருக்கிறது கஹானி 2 குழு. இந்தப்படத்தில் தனது குழந்தையைத் தேடும் தாயாக நடித்திருக்கிறாராம் வித்யா. முதல் படத்தைப் போன்றே, இந்தப்படத்திலும் வங்காளக் கலாசாரமும் அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று நம்பலாம்!

வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்றிருக்கும் வித்யாபாலனுக்கு, கஹானி 2 நிச்சயம் மரியாதை செய்யும். காரணம், அந்த அளவுக்கு நடிப்பில் அவர் மிரட்டியிருப்பார் என்று நம்பலாம். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை, தற்போது தமிழில் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், இந்தப்படமும் ரீமேக் ஆகும் வாய்ப்பிருக்கிறது. 

அதற்கான வாய்ப்புகள் உண்டானால், அதில் நடிக்க நயன்தாரா முன்வர வேண்டும். இப்படிச் சொல்வதற்குக் காரணமிருக்கிறது. ஏற்கனவே, கஹானி படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக் செய்தபோது, அதில் நாயகியாக நடித்தவர் நயன். அந்தப்படத்தில், அவர் கர்ப்பிணியாக அல்லாமல் சாதாரண பெண்ணாக வந்துபோயிருப்பார். அதுவே, படத்தின் தோல்விக்கும் காரணமானது. அதனை ஈடுசெய்யவாவது, கஹானி 2 ரீமேக்கில் அவர் நடிக்க வேண்டும். வித்யாபாலனின் மிரட்டலை அசத்தும்வகையில், நயன்தாராவின் பெர்பார்மன்ஸ் அமைய வேண்டும்!

 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles