சினிமாவுக்கு நான் தகுதியான ஆள் கிடையாது! நடிகர் விஜய் ஆண்டனி 'பகீர்’!

Thursday, December 1, 2016

" 'நான்' ஒரு சஸ்பென்ஸ் திரில்லர், 'சலீம்' ஒரு ஆக்‌ஷன் திரில்லர், 'பிச்சைக்காரன்' எமோஷனலான படம். ஆனா, 'சைத்தான்' இது எல்லாத்தையும் உள்ளடக்கிய கலவையான படமாக இருக்கும். படத்தில் முகம் சுளிக்கிற மாதிரியான காட்சிகள் இல்லாமல், குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்கிற படமாக இருக்கும். அடுத்து என்ன நடக்கப்போகுது என்கிற பதைபதைப்பை இந்தப் படம் ஏற்படுத்தும்.

மேக்கிங் வைஸ், உங்களுக்கு ஒரு புது எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும்னு சொல்லுவேன்!" என்று அதிராமல் பேசுகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் ’சுக்ரன்’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தடதடவென நடிகர், தயாரிப்பாளர் என்று வெவ்வேறு சிகரங்களில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவரும் ஐந்தாவது படம் ‘சைத்தான்’.

 

'ஆ' நாவல் 'சைத்தான்' ஆனது எப்படி?

" 'சலீம்' பட ஷூட்டிங்கின்போதுதான், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கதை சொன்னார். ஸ்கிரிப்ட் எனக்குப் பிடிச்சிருந்தது. ’இந்தக் கதை சுஜாதா சாரோட 'ஆ' நாவலை மையமா வைச்சுதான் எழுதியிருக்கேன்’னாரு. ’அப்படீன்னா நாம முறைப்படி அனுமதி வாங்கிட்டு படம் பண்ணலாம்’னு சொன்னேன். பிறகு, இரண்டு பேரும் சுஜாதா ரங்கராஜன் மேடத்தை பார்த்துப் பேசினோம். அவங்களோட அனுமதி கிடைச்சது. இடையில் 'இந்தியா பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்' படங்களில் பிஸியாக இருந்ததால், 'சைத்தான்' படத்தை உடனே பண்ண முடியவில்லை. இப்போ எல்லாமே கூடி வந்திருக்கு!"

 

படத்தின் பின்னணி இசை மிரட்டுகிறதே?

"நமக்கு பசிச்சா நாமே சாப்பாடு எடுத்துக்கிற மாதிரி, கதையும் சில நேரங்களில் தனக்குத் தேவையான பின்னணி இசையை எடுத்துக்கும். படத்தில் கதையின் நாயகனும் டாக்டரும் பேசிக்கிட்டிருக்காங்கன்னா அதற்கு பின்னாடி எந்தவிதமான இசை ஒலிக்க வேண்டுமோ, அது தானாகவே இசையமைக்கும்போது வந்து உட்கார்ந்திடும். ஸ்பெஷலாக எதையும் நான் செய்யுறதில்லை, தேவையான இடங்களில் இசையால் இட்டு நிரப்புறேன். அவ்வளவுதான்!"

 

படத்தின் நாயகி அருந்ததி நாயர் பற்றி..?

"புதுசா ஒரு நாயகியை அறிமுகப்படுத்தும்போது, அவங்க செய்கிற எல்லாமே பிரஷ்ஷாக இருக்கும். ஏற்கனவே அறிமுகமான ஒரு நாயகியைப் பயன்படுத்தும்போது, அவங்க ஏற்கனவே நடித்த காட்சிகள் நம்முடைய மூளைக்குள்ள இருக்கிறதால, மறுபடியும் அதே மாதிரியான ஒரு ரியாக்‌ஷன் கொடுக்கும்போது பழைய இமேஜ் சேர்ந்து வரும். பல நேரங்களில் படத்துக்கு அது பிளஸ்ஸாகவும் இருக்கும்; சில நேரங்களில் அது மைனஸாகவும் வாய்ப்பிருக்கு. இந்தக் கதைக்கு ஒரு புதுமுகம் இருந்தால் நல்லாயிருக்கும்னு நானும், இயக்குநரும் முடிவு பண்ணினோம். அப்படித்தான் இந்தப் படத்துக்குள்ள அருந்ததி நாயர் வந்தாங்க. ஸ்கீரினுக்குதான் அவங்க புதுசே தவிர, நடிப்பில் நல்லா ஸ்கோர் பண்ணியிருக்காங்க!"

 

எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் வசனம் எழுதியுள்ளாரே?

"இந்தப் புராஜெக்டை பொறுத்தவரைக்கும் ஜோ.டி.குரூஸ் சார் எங்களுக்கு எல்லாம் ஒரு வெல்விஷர். காட்சிகளுக்கு வசனம் எழுதியதோடு மட்டுமில்லாமல், படத்தில் என்னுடைய பூர்வஜென்ம பாத்திரத்திலும் நடிச்சார். ஆனா, தெலுங்கு ரைட்டர் ஒருத்தர் பார்த்துட்டு இதே பாத்திரத்தில் நானே நடித்தால் நல்லாயிருக்கும்னு சொன்னதால, பிறகு, பூர்வஜென்ம பாத்திரத்தில் நானே நடித்துவிட்டேன்.  இந்தப் படத்துக்கு ஜோ.டி.குரூஸோட சப்போர்ட் ரொம்ப அதிகம்!"

 

சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் குறித்து..?

"அதை சர்ச்சைக்குரியாத வரிகள்னும் சொல்லலாம். சிலர் எதிர்த்தாங்க, எங்களைப் பாதிக்குதுன்னு சொன்னாதால, வேறு வரிகளை எழுதி ’கம்போஸ்’ பண்ணேன். உண்மையில், முன்னதை விட இரண்டாவது அருமையாக வந்திருக்கு!"

 

தொடர் வெற்றியின் ரகசியம் என்னவோ..?

"உண்மையில், நான் சினிமாவுக்கு தகுதியான ஆள் எல்லாம் கிடையாது. மியூசிக் ஒழுங்கா படிச்சதில்லை. முறையாக நடிக்கவும் தெரியாது. நிறைய மைனஸ் என்கிட்ட இருக்கு. நல்ல அழகன்னும் சொல்லிட முடியாது. ஆனா, இதையெல்லாம் தாண்டி ஏதோ ஒண்ணு என்னை நகர்த்திக்கிட்டே போகுது. அதற்காக நான் வேலையெல்லாம் செய்யலைன்னு சொல்லலை. ஆனா, சில நேரங்களில் எல்லாம் சரியாக நடக்கணும் இல்லையா? வேணும்னா, வெற்றியின் ரகசியம் கலெக்டிவ் டேலண்ட்ன்னு சொல்லலாம்!"

 

அடுத்து நடித்துவரும் படங்கள் பற்றி..?

"'எமன்' என்கிற படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். இந்தப் படத்துக்குப் பிறகு இரண்டு மாதங்களில் அந்தப் படம் வெளியாகும். இப்போதைக்கு, அதில் மட்டும்தான் கவனம் இருக்கு" என்றவாறே மெல்லிதாகப் புன்னகைக்கிறார் விஜய் ஆண்டனி. அதில் அவ்வளவு அடக்கம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles