கொஞ்சம் திமிரோடதான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன்! இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

Thursday, December 1, 2016

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ரா.பார்த்திபனின் வரவு ரொம்பவும் முக்கியமானது. புதிய பாதையை அமைத்து, தன்னுடைய மாறுபட்ட அணுகுமுறையால் திரை ரசிகர்களை கட்டிப் போட்டவர். நடிப்பு, இயக்கம், மேடைப்பேச்சு, எழுத்து என்று எல்லா திசையிலும் நம்மை ஆச்சர்யமூட்டுபவர். பார்த்திபன் படம் இயக்குகிறார் என்பதே தமிழ் ரசிகர்களுக்கெல்லாம் இனிப்பான செய்தி. குறிப்பாக, 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்கிற வித்தியாசமான தலைப்பின் மூலமாக, இப்போது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அவரிடம் கோ.இ.நி. உட்பட பல விஷயங்கள் பற்றி கதைத்தோம்.

கோடிட்ட இடங்களை நிரப்புக என்று பெயர் வைத்தது ஏன்?

"நம்ம வாழ்க்கையே இட்டு நிரப்புறதுதான். வாழ்க்கை வரும்போதே பூர்த்தியில்லாமதான் இருக்கு. நிறைய கோடுகளும், கேப்ஸ்களும் இருக்கு. நம்ம மனசுல கேப் இருக்கும்போது அங்கே காதல் வந்து உட்கார்ந்துக்கும். அது, பிறகு கல்யாணமா வந்து நுழையும். பின்னர் அது குழந்தைகளாகவும் வந்து மனசுக்குள்ளே உட்கார்ந்துக்கும். இப்படி ஒவ்வொன்றாக இட்டு நிரப்பிக்கிட்டே வருவதுதான் வாழ்க்கை. அதனால கோடிட்ட இடங்களை நிரப்புக என்பது ஒரு அற்புதமான தத்துவம். தத்துவத்துக்காக நான் படம் எடுக்கலை. இந்தத் தலைப்பை அநேகமாக யாரும் வைக்க மாட்டாங்க. வசந்தம் வந்தாச்சு, எல்லோரும் சந்தோஷமாக இருக்காங்க அப்படியான தலைப்புகளை எல்லாம் என் படத்துக்கு வைக்கமாட்டேன். படத்தோட தலைப்பு பேசப்படணும். ஏன் இந்த மாதிரி தலைப்பை வச்சீங்கன்னு நாலு பேரு கேட்கணும். அது ஒரு முக்கியமான காரணம்! 

கோடிட்ட இடங்களை நிரப்புக என்று தலைப்பு வைத்தால், அதற்கேற்ற ஒரு கதையை ரசிகர்கள் புனைஞ்சிருப்பாங்க. அந்தக் கதையும் என்னோட கதையும் ஒன்றையொன்று திருப்திபடுத்துகிறதா என்பது ஒரு வேள்வி. எனக்கு எப்போதுமே அந்த வேள்வி பிடிக்கும். கடினமான பாதைகள்தான் ஒரு அழகான நீர்வீழ்ச்சியைக் காட்டும்னு சொல்லுவாங்க. அப்படி நான் தேர்ந்தெடுக்கிறது கடினமான பாதைகளைத்தான். படத்தை நானே தயாரித்து, இயக்குவது என்பது உலக மகா சிரமமான விஷயம். ’இதைவிட சிரமம் அதை ரசிகர்கள் பார்ப்பது’ என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, ரொம்ப சிரத்தையா, ரொம்ப அழகா, ரொம்ப நேர்த்தியா இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்!"

 

பொதுவாக தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகளுக்கு தோள் கொடுப்பவர்கள் நீங்கள். இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்?

"தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகளுக்கு தோள் கொடுப்பவன் நானல்ல; ரசிகர்கள்தான். எப்போதுமே 'புதிய பாதை'களைக் காட்டுபவர்களும் அவர்கள்தான். என்னுடைய முதல் படத்தை அவர்கள் அப்பவே ’அம்போ’ன்னு விட்டுருந்தாங்கன்னா, என்னை மாதிரி பார்த்திபன் என்கிற ஒருத்தன் வெளியே தெரிஞ்சிருக்க மாட்டான். வியாபாரம் என்பதே ரசிகர்களின் ரசனையை மையமா வைச்சதுதான். கதை திரைக்கதை வசனம் என்கிற ஒரு படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால்தான், கொஞ்சம் திமிரோட உள்ளே ஒரு சட்டை, வெளியே ஒரு சட்டை போட்டுக்கிட்டு ’கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை எடுத்திருக்கேன். அதனால, இந்தத் தைரியம் எல்லாம் ரசிகர்கள் கொடுத்ததுதான். எல்லாப் பெருமைகளும் ரசிகர்களுக்கே!"

 

நாயகனுக்கான தகுதிகளோடு உள்ள நீங்கள், படத்தில் துணை பாத்திரத்தில் நடிப்பதேன்?

"இந்தப் படத்தில் கதாநாயகன் யார் என்பது முக்கியமில்லை. அந்தப் பாத்திரம் படத்தில் என்ன செய்யப் போகிறது என்பதுதான் முக்கியம். என்னுடைய படங்களில் பாத்திரங்கள் மட்டும்தான். முதல் படத்தில் பார்த்தீங்கன்னா, அதில் நான் ஒரு ஹீரோவே கிடையாது, மிக மோசமான வில்லனாகத்தான் நடிச்சிருப்பேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்துக்கிட்டீங்கன்னா, அந்தப் பாத்திரம் அட்ராசிட்டி நிறைந்த வில்லனாக இருப்பான். ஆனா, படம் முடிந்து தியேட்டரில் இருந்து வெளியே வந்தீங்கன்னா, அவன் உங்க மனசுக்குள்ளே எவ்வளவு தூரம் நுழையுறான். அப்போ அவன்தானே நாயகன். 

இந்தப் படத்தோட நாயகனாக நான் பார்க்கிறது ஸ்கிரிப்டைத்தான். ஹிந்தியில் 'யாதோன் கி பாராத்' படத்தில் இரண்டு பேர் நடித்ததை, நாளை நமதே படத்தில் எம்.ஜி.ஆர். டூயல் ரோலாக பண்ணினார். இரண்டு வேடங்களிலுமே எம்.ஜி.ஆர். கலக்கியிருப்பார். ரசிகர்களை ஈர்க்கக்கூடிய அவரைப் போன்றவர்களுக்கு அது எளிது. ஆனால், இங்கே ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு சிறந்த நடிகர் தேவைப்படுகிறார். அதனால், அந்த மாதிரியான ஒரு பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். ஹீரோவாக சாந்தனு நடித்திருக்கிறார்!"

 

கதையை எழுதும்போதே, இது சாந்தனுவுக்குத்தான் என்று எழுதினீர்களா?

"அப்படி யோசித்து எல்லாம் எழுதவில்லை. பொதுவாக, ஒரு கதையை எழுதும்போது இதில் ஒரு நல்ல ஸ்டார் வந்தா நல்லாயிருக்கும்னு தோணும். எழுதிய பிறகு, இதில் சூர்யாவோ, ஆர்யாவோ நடித்தால் சரியாக இருக்கும்னு யோசிப்போம். அப்படி இந்தப் படத்துக்குப் பிறகு, நிறைய இயக்குனர்கள் கதை எழுதும்போது, இந்தப் பாத்திரத்துக்கு சாந்தனு சரியா இருப்பாருன்னு யோசிச்சு எழுதுவாங்கன்னு நினைக்கிறேன்!"

 

உங்க படத்தில் மட்டும் தம்பி ராமையாவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறதே?

"ஒருவேளை அதிகமாகச் சம்பளம் கொடுத்தால் சரியாக நடிக்க மாட்டாரான்னு தெரியலை. கம்மியா சம்பளம் கொடுக்கிறதால, என் படத்தில் சிறப்பாக நடிக்கிறாருன்னு நினைக்கிறேன். ச்சும்மா விளையாட்டுக்காகச் சொன்னேன். (சொல்லிவிட்டு சிரிக்கிறார்). 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வரும்போது அந்தப் படத்தை பற்றியோ, கதாபாத்திரத்தை பற்றியோ அவருக்கு எதுவும் தெரியாது. படப்பிடிப்பின்போது ’இதைச் செய்யுங்க சார்’ன்னு சொன்னா, அதைச் செஞ்சிடுவாரு. அந்தப் படத்துல அவ்வளவு விஷயம் பண்ணியிருக்கிறோம் என்பதே படத்தோட அவுட்புட் வந்ததற்குப் பிறகுதான் அவருக்கே தெரியும். உதாரணத்துக்கு, கிளைமாக்ஸில் அவர் பேசும் நீண்ட காட்சி. அந்தப் படத்தோட வெற்றி, புகழுக்குப் பிறகு இப்போது அவர் எதையுமே கேட்பதில்லை; சம்பளம் உட்பட! ஆனால் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் கதையை எழுதும்போது, அந்தப்பாத்திரத்தை தம்பி ராமையாவை மனதில் வைத்துக்கொண்டேதான் எழுதினேன்!"

இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் பேச்சில் வசியம் இருக்கும் என்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அந்தப் பேச்சு முழுவதுமே உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார் ரா.பா. இந்தப் பேட்டியை நிறைவு செய்தபோது, நம் மனதில் தோன்றியது அதுதான்..!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles