இனிய பிறந்தாள் வாழ்த்துகள் யுவன்!

Wednesday, August 31, 2016

தமிழ் சினிமாவில் நீங்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும், முன்னணி இடத்தைப் பிடிக்க முயற்சி செய்யலாம். இயக்கமோ, நடிப்போ, ஒளிப்பதிவோ, படத்தொகுப்போ, இப்படியாக எதில் வேண்டுமானாலும் நீங்கள் கால் வைக்கலாம். அதற்கு வெறும் பயிற்சியும் கற்றலும் இருந்தால் போதுமானது. ஆனால், இசைத்துறையில் நீங்கள் ஒளி வீச வேண்டுமெனில், இந்தத் தகுதிகள் பொருந்தாது. “ஒருவர் டாக்டராக வேண்டுமெனில், அதற்கான கல்லூரியில் பயின்று டாக்டராகலாம். இன்ஜினியராக நினைச்த்தாலும், அதற்கான படிப்பைப் படித்து இன்ஜினியராகிடலாம்.

 

ஆனால் ஒரு இசையமைப்பாளராக மாறணும்னா, அதற்கு ஒரு வரம் இருந்தால் மட்டுமே சாத்தியம். உங்க இயல்பிலேயே அந்த இசை ஊறியிருக்கணும்” என்கிற பொருள்வருமாறு, ஒருமுறை இசைஞானத் தகப்பன் இளையராஜா சொல்லியிருந்தார். அந்த இசைக்குப் பிறந்த மெல்லிசைதான் யுவன்சங்கர் ராஜா!

 

பூமியில் பிறக்கிற ஒவ்வொரு உயிரினத்துக்கும், அதன் தாயும் தந்தையுமே கடவுள். “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும், தந்தையின் அன்பின் முன்னால்..” என்று அமரர் முத்துக்குமார் எழுதினார். உண்மைதான், அத்தகைய அன்பின் கரம் பற்றி இசைத்துறைக்குள் வந்தவர் யுவன் என்றாலும், தந்தையைப் பிரதியெடுத்தது போல அவர் இசையமைக்கவில்லை. நவீன இளைஞர்களின் ’பல்ஸ்’ பிடித்து, அந்த ரூட்டிலேயே பயணிக்கத் தொடங்கி, இன்று வெற்றிக்கொடியும் நாட்டியிருக்கிறார். தொடர்ந்து, தனக்கான தனிப்பட்ட ரசிகர்களை இழந்துவிடாமல் தக்கவைத்துக்கொண்டும் இருக்கிறார். இன்றைய இளைஞர்களின் அலைபேசி ரிங்டோன்களில், முக்கால் சதவிகிதத்துக்கும் மேல் யுவனுடைய பாடல்கள்தான். இயல்பான, ஆர்ப்பாட்டமான, இயல்பான, மனதை வருடும் தன்மையுடைய என்று எந்தச் சூழலுக்கும் இசை விருந்து படைக்க யுவனால் முடியும்.

 

இன்று யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாள். அவர் ஆயிரமாயிரம் இசை விருந்துகளைத் தொடர்ந்து படைக்க, வாழ்த்தி மகிழ்கிறது மனம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles