உலக சினிமாவும் பெண்களும் - எது உண்மை? எது பொய்? வலைதள உலகைத் தோலுரிக்கும் ‘பனாமா’ 

Wednesday, August 31, 2016

உலகம் முழுவதுமுள்ள இன்றைய இளைய தலைமுறையினரின் மனநிலையையும், அவர்களது அசலான வாழ்க்கையையும், அதில் உள்ள நெருக்கடிகளையும் விரிவாக எடுத்துச் சொல்லும் படம் தான் ‘பனாமா’. இந்தப் படத்தின் கதை என்னவென்பதை, முதலில் பார்ப்போம்.

ஜோவனும் மாஜாவும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே, கணவன் - மனைவியாக வாழ முடிவெடுக்கிறான் ஜோவன். அதற்கு மாஜாவும் சம்மதிக்கிறாள். அந்த நகரத்தில் தனியே வீடு எடுத்து தங்குகின்றனர். அதேநேரத்தில், ஒரு கட்டுமான நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக வேலைக்குச் சேருகிறான் ஜோவன். வேலை நேரத்தின் இடையே, தன்னுடைய காதலியான மாஜாவின் சமூக வலைதளங்களில் உள்ள பழைய புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்வையிடுகிறான். ஒவ்வொரு வீடியோவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மாஜாவின் வாழ்க்கையை அறிந்துகொள்வதில், பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறான் ஜோவன். இதன் காரணமாக, அவனால் இல்லற வாழ்க்கையில் மாஜாவோடு சந்தோஷமாக இருக்க முடிவதில்லை.

 

நடைமுறை வாழ்க்கையிலும், மாஜாவின் நடவடிக்கைகள் அவனுக்குள் சந்தேகத்தை எழுப்புகின்றன. நேரிடையாக அதுகுறித்து கேட்க முடியாமல், ஜோவன் மனதிற்குள்ளே புழுங்குகிறான். ஆனால், அவனின் அன்புக்காக ஏங்குகிறாள் மாஜா. ’அவனே உலகம்’ என வாழும் மாஜாவைப் புரிந்துகொள்ள இயலாமல், குழப்பமான உலகில் சஞ்சரிக்கிறான் ஜோவன். அவன் பார்க்கும் அனைத்து வீடியோக்களுமே, ஏதோவொரு சந்தேகத்தை அவனுக்குள் தூண்டியபடியே இருக்கிறது. ஒருமுறை, பார் ஒன்றில் தனது தோழிகளுடன் சந்தோஷமாக இருக்கிறாள் மாஜா. அவள் கையில் மதுக்கோப்பை இருக்கிறது. அவள் வீடியோ மானிட்டரை பார்த்தபடி தன்னை மறந்தவளாகக் காணப்படுகிறாள். அவளது கைகள் அந்த கேமிராவை நோக்கி உயர்ந்திருக்கிறது. அவள் யாருடன் கைகோர்த்துக்கொண்டாள் என்பதை அறியத் தீவிரமாகிறான் ஜோவன்.

 

மாஜாவின் மற்றொரு வாழ்க்கையைத் தேடியலையும் ஜோவனால், தனது வேலையில் கவனம் கொள்ள முடியாமல் போகிறது. இதனால் தனது மேலதிகாரிடயிடம் சண்டையிடுகிறான். அவனைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவருமே ரகசியமான ஒரு வாழ்க்கையை வாழ்வதாக, அவனுடைய பார்வைக்கு த் தோன்றுகிறது. பார்க்கும் எல்லோருமே, சந்தேகத்துக்கு உரியவர்களாகத் தோன்றுகிறார்கள். இதிலிருந்து விடுபட, ஜோவன் மற்றொரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். சமூக வலைதளம் மூலமாக, வேறொரு பெண்ணான சான்ட்ராவோடு அவனுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொண்டு வாழலாம் என முடிவெடுத்து, சான்ட்ராவின் பெற்றோரை சந்திக்கிறான். அவர்கள், இருவரது காதலையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதற்கிடையில் மாஜாவோடு டேட்டிங் செல்கிறான் ஜோவன். அப்படி டேட்டிங் சென்ற சமயத்தில், மாஜாவின் நிழலுலகத்தை கண்காணிக்கவும் செய்கிறான். இதனை அறிந்துகொள்ளும் மாஜா, அந்த இடத்தைவிட்டு வெளியேகிறாள். 

 

ஜோவன் வீடு திரும்புகிறான். வீட்டில் மாஜா இல்லை. அவளைத் தேடி அலைகிறான். அவளை எங்கேயும் காண முடியவில்லை. சமூக வலைதளங்களில் அவளது பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களும் புகைப்படங்களும், மாஜாவால் அழிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான். இதனிடையே, தனது புதிய காதலி சான்ட்ராவை தேடிச் செல்கிறான். ஜோவனின் வாழ்க்கையை அறிந்துகொண்ட சான்ட்ரோவோ, அவனைப் புறக்கணிக்கிறாள். இறுதியாக, மாஜாவின் சொந்த வீட்டுக்குச் செல்கிறான்.  அங்கே, அவனுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கிறது. தன்னை நொந்தபடி திரும்பும் ஜோவன், மாஜா இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கதறுகிறான். அப்போது, அவனது செல்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. முகநூலில் மாஜா பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றுதான் அது. அதில் அவளில்லை. அவள் தற்போது இருக்கும் அழகிய கடற்கரையின் இயற்கைக் காட்சிகள் மட்டுமே இருக்கிறது. அந்த இடம் பனாமா! 

 

பனாமா கடற்கரையில், மாஜாவோடு சந்தோஷமாக டேட்டிங் செய்யும் ஜோவன் செல்பி வீடியோ எடுப்பதோடு படம் நிறைவடைகிறது. இரண்டு மணிநேரம் 10 நிமிடங்களில் எடுக்கப்பட்டிருக்கும், செர்பியன் திரைப்படமான ‘பனாமா’வை பாவெல் விகோவிச் இயக்கியுள்ளார். 

 

இன்றைய இளைஞர்கள் பொய், சந்தேகம், பொறாமை, செக்ஸ், அகங்காரம் போன்றவற்றில் சிக்கி, தங்களை எவ்வாறு இழக்கிறார்கள் என்பதை தோலுரித்திருக்கும் படம் இது. எது உண்மை, எது பொய் என்பதை உணராமல் வலைதள உலகில் மூழ்கியிருப்பவர்களை எச்சரிக்கிறது பனாமா. சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் தங்களது மண வாழ்க்கைக்கு முன் எடுத்துக்கொள்ளும் செல்பிக்கள், பின்னர் அவர்களது வாழ்வை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதையும் இப்படம் அப்பட்டமாகச் சொல்கிறது. குறிப்பிட்ட சில இடங்கள், குறைவான பாத்திரங்கள், கொஞ்சம் செல்பி வீடியோக்களை வைத்துக்கொண்டு, ஒரு முழுநீள யதார்த்த படத்தைத் தந்த இயக்குனர் பாவெல் விகோவிச் பாராட்டுக்குரியவரே!

 

படத்தில் ஜோவனாக நடித்திருக்கும் ஸ்லாவென் டோஸ்லோ, அப்படியே  இன்றைய இளைஞர்களின் நடவடிக்கைகளை நம்முன் பிரதிபலிக்கிறார். காதலியோடு டேட்டிங் செல்லும் இடத்தில், அவளின் அன்பைப் புரிந்துகொள்ள முடியாமல் தள்ளாடும் இடத்தில் ’சபாஷ்’ வாங்குகிறார். ஜோவனுக்குச் சற்றும்குறை வைக்காமல், மாஜாவாக வரும் சோவனா ஸ்டோஜிகேவிச் நடிப்பில் மிளிர்கிறார். காதலன் தன்னைச் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் இடத்தில், அவனைத் தெளிய வைக்க மேலும் நெருக்கமாகும்போதும், வேறுவழியின்றி ஜோவனை விட்டுப் பிரியும்போதும், நம்மையும் கலங்க வைக்கிறார். 

 

2015ல் தயாரான பனாமா, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டது. மெலோடிஸ் சர்வதேச திரைப்பட விழாவில், இது சிறந்த முழு நீளத் திரைப்படத்துக்கான விருதும், சரஜீவோ திரைப்பட விழாவில் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles