அக்டோபரில் சென்னை 28 பார்ட் 2? - இயக்குநர் வெங்கட் பிரபு ‘சூசகம்’!

Wednesday, August 31, 2016

சென்னை 28 முதல் பாகம் வெளியானபோது, தமிழகமே கிரிக்கெட் மட்டையும் பந்துமாக மைதானங்களை நோக்கி படையெடுத்தது. அந்தக் காய்ச்சல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதே டீமுடன் ரீயூனியன் ஆகியிருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. சமீபத்தில், இவரது ‘சென்னை 28 பார்ட் 2’ படத்தின் தி பாய்ஸ் ஆர் பேக்’ டீஸர் ஏகத்தும் ஹிட்டடித்திருக்கிறது. இதனால், “படம் எப்போ ரிலீஸ் பாஸ்?” என டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும், இப்பவே ரகளையாக ரம்மி ஆடிக் கொண்டிருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். அதே பீலிங்கோடு, இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ஒரு பால் போட்டோம், ஸாரி ‘போன்‘ செய்தோம்!

‘படத்தைப் பற்றிய எக்ஸ்குளுஸிவ் சொல்லுங்க பாஸ்’ என்றதும், “சென்னை 28 பார்ட் 2 அக்டோபரில் ரிலீஸ் பண்றோம் என்பதுதான், இப்போதைக்கு எக்ஸ்குளுஸிவ். படத்தோட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் ஏறக்குறைய முடிச்சிட்டோம். செப்டம்பரில் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ்” என்றவரிடம், ‘பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் படப்பிடிப்பின்போது என்ன விதமான பிரச்சினையை எதிர்கொண்டீர்கள்?’ எனக் கேட்டோம். 

 

“படத்தோட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறது கொஞ்சம் சிரமம்தான். ஒரு இயக்குநராக நான் அறிமுகமான முதல் படத்தின் இரண்டாவது பாகத்தை, நானே தயாரிச்சு, இயக்கியிருக்கிறேன் என்கிறபோது சந்தோஷமா இருக்கு. ‘சென்னை 28 பார்ட் 2’ல நடித்த அத்தனை பசங்களுமே ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாங்க. வேற யாராலயும் இதைப் பண்ணிருக்க முடியாதுங்கிற அளவுக்கு, ஷூட்டிங்கின்போது கூட சேர்ந்து வொர்க் பண்ணினாங்க. அதேமாதிரி வேற ஒரு டீமை வைச்சிக்கிட்டு, என்னால இந்தளவுக்கு படத்தை சிறப்பா கொண்டு வந்திருக்க முடியுமான்னு தெரியலை.

 

தயாரிப்பாளரா நிறைய டென்ஷன்ஸ் இருக்கு. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுல பெருசா இல்லை. எல்லாமே ரொம்ப இயல்பா நடந்துச்சு. எப்பவுமே படத்தை எடுக்கிறதை விட, அதை சரியான தேதியில தியேட்டர்ல ரிலீஸ் பண்றதுதான் பெரிய போராட்டம்னு எல்லோரும் சொல்லுவாங்க. அப்படிப் படத்தை வெளியிடும்போது பிரச்சினைகள் வரும்னு நினைக்கிறேன்!” என்றார் மிஸ்டர் கூல்.

 

‘யுவனின் பிறந்தநாளுக்கு ஏதாவது சர்ப்ரைஸ் வச்சிருக்கீங்களா? ’ என்று கொக்கியைப் போட்டால், வி.பி.யிடம் இருந்து சட்டென்று பதில் வருகிறது.

 

“யுவன் ரசிகர்களுக்காக ஒரு பாட்டு ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம்.  இதுதான் ஆகஸ்ட் 31 அன்னிக்கு, யுவனுக்கான பர்த்டே ட்ரீட்!” என்றவரை மடக்கி, அடுத்த கேள்வியைத் தொடுத்தோம். ‘சென்னை 28 டீமை சந்தித்தபோது, எல்லோரும் ஒரே குரல்ல “ஷுட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு. நாங்க, மறுபடியும் நாற்பது நாள் சந்தோஷமா இருக்கப் போறோம்”னு சொன்னாங்க. உண்மையிலேயே படப்பிடிப்பு எப்படி நடந்துச்சு?’ என்றோம். 

 

“இந்தப் படத்துல நடிக்கும்போதும், ஹாலிடே மூடுலதான் என்ஜாய் பண்ணாங்க பசங்க. ஆனா, ஆக்ஷன் சொன்னவுடனே தங்களோட பொசிஷனுக்குப் போய் நின்னுடுவாங்க. படப்பிடிப்பு தடையில்லாம நடந்துச்சு. எந்த மாதிரி திட்டமிட்டிருந்தேனோ, அந்தமாதிரியே காட்சிகள் எல்லாம் நல்லா வந்திருக்கு. ரொம்ப நாள் கழிச்சு ஒரு ரீயூனியன் கிடைச்சது. படத்தைப் பத்தி பசங்ககிட்டே கேட்டீங்கன்னா, இன்னும் நிறையா சொல்லுவாங்க!” என்று சொல்லிச் சிரிக்கிறார். 

 

‘பிளாக் டிக்கெட் என்ற பெயரே, ஜில்லுன்னு ஈர்க்குதே?’ என்றோம்.

 

“கொஞ்சம் பாஸிட்டிவான நோட்ஸ்ல வைக்கணும். அதே சமயத்துல எபெக்டிவாகவும் இருக்கணும்னு யோசிச்சு வச்சதுதான் ‘பிளாக் டிக்கெட்’. பொதுவா ஒரு படத்துக்கு பிளாக்ல டிக்கெட் கிடைக்குதுன்னா, அந்தப் படம் ஹிட்டுன்னு அர்த்தம். அதான் பிளாக் டிக்கெட்னு வைச்சுட்டேன். அப்புறம் முக்கியமான விஷயம், படத்துல வர்ற ஒரு காட்சியில போர் பவுண்ட்ரி லைன் வருது. அதுல எங்க ஸ்டைல்ல மனம் இணைய இதழுக்கு நன்றி சொல்லியிருக்கோம்!” என்று நமக்கும் ஒரு சர்ப்ரைஸ் வைத்தார் வி.பி.! வீ ஆர் வெயிட்டிங்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles