சிவகார்த்திகேயனை சம்மதிக்க வைக்க ஆறு மாசமாச்சு! ‘ரெமோ’இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் 

Wednesday, August 31, 2016

“வேலூர் மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்துல இருந்து, சென்னைக்கு சினிமாப் படம் எடுக்கணும்னு வந்தேன். முதல் படமே, எனக்கு பெரிய படக்குழுவோட பணியாற்றும் வாய்ப்பு. இவ்ளோ பெரிய ஜாம்பவான்களோட பணியாற்ற போறோமான்னு நினைக்கும்போதே, எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனால், இப்போ அதுவே எனக்கொரு நல்ல அனுபவமா இருக்கு” என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் ‘ரெமோ’இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்.

பி.சி.ஸ்ரீராம் தொடங்கி ரசூல் பூக்குட்டி வரை, பல நட்சத்திர தொழில்நுட்பக் கலைஞர்கள் ரெமோவில் பணியாற்றி இருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவராலும் ரசிக்கப்படும் சிவகார்த்திகேயன் இதன் நாயகன். இப்படிப் பலத்த எதிர்பார்ப்புகளை எதிர்கொண்டுவரும் பாக்கியராஜ் கண்ணனிடம், ‘ரெமோ’ பற்றிக் கேட்டோம். அவரும் சளைக்காமல் பதிலளித்தார். 

 

‘ரெமோ’வில் என்ன ஸ்பெஷல்? 

“ரொமான்ஸ் கலந்த காமெடி ஸ்க்ரிப்ட்தான் ‘ரெமோ’ திரைப்படம். இதுல லவ், ஆக்ஷன், சென்டிமென்ட்னு நிறையா இருக்கு. இன்னும் சொல்லணும்னா, அறுபது சதவீதம் ரொமான்ஸ் இந்தத் திரைப்படத்துல இருக்கு. இதுதான் 'ரெமோ'.” 

 

முதல் திரைப்படத்திலேயே, பிரம்மாண்டமான குழுவோடு குதித்த அனுபவம்?

“இதுக்கு, முதல்ல ராஜா சாருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ஏன்னா, படம் நல்லா பிரமாண்டமா வரணும்னு,  அவங்கதான் டீமைப் பார்த்து பார்த்து செலக்ட் பண்ணாங்க. முதல் படத்திலேயே, ஐந்து படத்துல  பணியாற்றிய அனுபவம் எனக்கு கிடைச்சிருக்கு.”

 

சிவகார்த்திகேயனை மனதில் கொண்டுதான், இந்தக் கதையை எழுதினீர்களா?

“ஆமா! எனக்கு சிவகார்த்திகேயனை ரொம்ப பிடிக்கும். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை பார்த்துட்டு, நான் அவரோட ரசிகன் ஆகிட்டேன். அவரு இதுவரைக்கும் செய்யாத கதாபாத்திரம் என்னன்னு யோசிச்சு, அவருக்கு எது பொருத்தமா இருக்கும்னு தெரிஞ்சுகிட்டு ’டெவலப்’ பண்ணதுதான் இந்த ‘ரெமோ’ கதை.”

 

பெண்வேடம் ஏற்று நடிக்க, சிவகார்த்திகேயன் எப்படி சம்மதித்தார்?

“ஏற்கனவே சொன்னமாதிரி, சிவகார்த்திகேயனை மனசுல வச்சுதான் இந்தக் கதையையே எழுதினேன். இந்தப் பெண் வேடத்தைப் பற்றி கேட்டவுடனே, கொஞ்சம் யோசிச்சார். ’இப்பவே இந்த வேடத்துல நடிக்கணுமா. எனக்கு சூட் ஆகுமா’ன்னு கேட்டார். உடனே, ’இந்தக் கதையை, உங்களை மனசுல வச்சுதான் எழுதினேன். உங்களுக்குப் பிடிக்கலேன்னா, வேற கதை எழுதறேன். ஏன்னா, உங்களைத் தவிர யாரும் இந்தக் கதைக்கு பொருந்த மாட்டாங்க’ன்னு சொன்னேன். கொஞ்சம் டைம் கேட்டார். அப்புறம், அவர் ப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டு, ஆறு மாசம் கழிச்சுத்தான் இதுல நடிக்கவே சம்மதிச்சார்.”

 

ஹீரோயின் கீர்த்தி சுரேஷின் வேடம் என்ன?

“கீர்த்தி சுரேஷை சுற்றித்தான், படத்தோட கதையே இருக்கு. படம் ஆரம்பிச்சு, பத்து நிமிஷத்துக்கு அவங்க ஸ்க்ரீன்லயே வரமாட்டாங்க. அதுக்கு அப்பறம், படம் முடியறவரைக்கும், எல்லா சீன்லயும் கீர்த்தி சுரேஷ் இருப்பாங்க. ஏன்னா, இது லவ் சப்ஜெக்ட். படத்துல சிவகார்த்திகேயன் ரெண்டு ரோல்ல வரக் காரணமே அவங்க லவ்வுக்காகத்தான்.”

 

‘ரெமோ’படத்துக்கு ரொம்பப் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியிருக்கிறதே? 

“முதல்ல எனக்குப் பயமாகத்தான் இருந்துச்சு. கேமரா பி.சி ஸ்ரீராம்ன்னு சொன்னவுடனே, ஒரு உதறல் எடுத்துருச்சு. ஆனால், நான் நினைச்ச மாதிரி அவர் இல்லை. அவர் எனக்கு அப்பா மாதிரின்னுதான் சொல்லணும். ரொம்ப அன்பா நடத்தினாரு. இன்னொரு படம், அவர் கூட பண்ணமாட்டோமான்னு ஏக்கமாக இருக்கு.

ஏற்கனவே ‘3’ படத்துல அனிருத் கூட பணியாற்றிய அனுபவம் இருந்ததால, அவரோட வொர்க்கிங் ஸ்டைல் நல்லாவேத் தெரியும். ராஜு சுந்தரம் மாஸ்டர் பற்றி, நான் சொல்லவே வேண்டாம். ஷூட்டிங் ப்ரெஷர் தெரியாம ஜாலியா வொர்க் பண்ணுவார். பிருந்தா மாஸ்டர் ஸ்டைலை பார்த்தீங்கன்னா, மாண்டாஜ்  சாங் ஷூட் பண்ணுற மாதிரி இருக்கும். பாபா பாஸ்கர் ஒரு குத்து சாங் கோரியோகிராப் பண்ணியிருக்கார். அதுவும் அட்டகாசமா வந்திருக்கு. இவங்க எல்லாருக்கும், நான் என்னோட நன்றியை சொல்லிக்கிறேன்.”

 

ஷான் பூட் உடன் பணியாற்றிய அனுபவம்..?

“ரெமோவுக்கு முன்னாடி, ‘ஐ’ படத்துல அவர் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி இருக்கார். சிவகார்த்திகேயனோட லேடி கெட்டப்புக்காக, சில ரெபரன்ஸ் எடுத்து வச்சிருந்தேன். ஆனால் கதை கேட்டதும், அவர் தன்னோட ஐடியாக்களைச் சொன்னார். தமிழ் பொண்ணுங்க இப்படித்தான் இருப்பாங்கன்னு, தன்னோட மேக்கப் கிட்டோட ரெடியா வந்துட்டார்.”

 

ஒரு கமர்ஷியல் படத்தில், ரசூல் பூக்குட்டியின் அவசியம் என்ன?

“கதையில லேடி கேரக்டர்தான் 70 சதவீதம் இருக்கு. அந்த கேரக்டருக்கான வாய்ஸ் நேச்சுரலா இருக்கணும். ஆடியன்சுக்கு நம்பகத்தன்மையோட போய்ச் சேரணும். அதுக்கு, ரசூல் தான் சரியான ஆளுன்னு முடிவு பண்ணி, அவர்கிட்ட கேட்டோம். அவரும், அதுக்காக மெனக்கெட்டு ஒர்க் பண்ணிட்டு இருக்காரு. அவுட்புட்டும் சூப்பரா வந்திருக்கு. நீங்க பெரிய திரையில பார்க்கும்போது, இதைக் கண்டிப்பா புரிஞ்சிப்பீங்க.”

 

சரி, இப்போ பாக்கியராஜ் கண்ணன் எப்படி இயக்குனர் ஆனார்னு சொல்லுங்க? 

“நான் சென்னை திரைப்படக் கல்லூரியில படிச்சேன். அப்புறம், இயக்குனர் சுந்தர். சியின் ‘கலகலப்பு‘ படத்துல வேலை செஞ்சேன். அதுக்குப்பிறகு, இயக்குனர் அட்லீ கூட ‘ராஜா ராணி’ படத்துல இணை இயக்குனராக பணியாற்றினேன். அப்போ, சிவகார்திகேயனுக்காக கதை ரெடி செஞ்சுட்டு இருந்தேன். அதை அட்லீகிட்ட சொன்னேன். அவர் சிவகார்த்திகேயன்கிட்ட பேசி, எனக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தார். இந்தத் தருணத்துல, என்னோட இயக்குனர் அட்லீக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்” என்று உணர்ச்சிவயமானார் பாக்யராஜ் கண்ணன். விரைவில் திரைகாணும் ‘ரெமோ’வை வாழ்த்திவிட்டு, அவரிடமிருந்து விடை பெற்றோம். 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles