என்னோட பேவரைட் நயன்தாராதான்! - நடிகை மஞ்சிமா மோகன்

Wednesday, August 31, 2016

மலையாளப் படவுலகில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தைத் தொடங்கியவர் நடிகை மஞ்சிமா மோகன். ‘ஒரு வடக்கன் செல்பி’ படம் மூலம், நாயகியாக புரமோஷன் ஆனார். முதல் படம் ஹிட்டடிக்க, அடுத்தடுத்து பட வாய்ப்புகள். தமிழில் சிம்புவுடன் ‘அச்சம் என்பது மடமையடா’, விக்ரம் பிரபுவுடன் ‘முடிசூடா மன்னன்’ என டாப் கியரில் வேகமெடுக்கிறது அவரது கோலிவுட் பயணம். கேரள அரசின் விருது பெற்ற நடிகை மஞ்சிமாவோடு, ஒரு மாலைப்பொழுதில் சம்சாரித்தபோது..

மலையாளத் திரையுலகம் பற்றி?

“மல்லுவுட்டில் சுமார் நூறு படங்களுக்கு மேல என்னோட தந்தை விபின் மோகன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். அதனால, மலையாள இன்டஸ்ட்ரியில இருக்கிற எல்லோரையும் எனக்குத் தெரியும். மல்லுவுட் என்னோட குடும்பம் மாதிரின்னு கூட சொல்லலாம். ஒரு நடிகையா இந்த உலகத்துக்கு நான் தெரிய வந்ததும், மலையாளப் படங்களின் மூலமாகத்தான். தாய்மொழியில நடிக்கும்போது, ரொம்ப பாதுகாப்பா இருக்கிறதா உணர்வேன். என்னோட வளர்ச்சிக்கும் மலையாள திரைப்பட உலகம்தான் பின்னணியா இருந்திருக்கு!

 

இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன் படத்தில் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?

ஷூட்டிங் ஸ்பாட்டுல, டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன் ரொம்ப கூலா இருப்பார். ஆர்ட்டிஸ்ட்கிட்ட கோபப்படவே மாட்டார். அதேமாதிரி, படப்பிடிப்பின்போது யார் மேலேயாவது எரிஞ்சு விழறதோ, சப்தம் போடுறதோ இருக்காது. எனக்கு இதுதான் வேணும்னு அடம்பிடிக்காமல், நடிகர்கள்கிட்ட எது ஸ்பெஷலாக இருக்கோ, அதையே பயன்படுத்திக் கொள்வார். அதே சமயத்துல, நடிகர்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்கணுமோ அதை முழுவதுமா கொடுப்பார். அவரோட டைரக்ஷன்ல வேலைப் பார்த்தது மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். சரியா சொல்லணும்னா, அவர் ரொம்ப தன்னம்பிக்கையான மனுஷன்.

 

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தீர்களே?

சிம்பு ரொம்ப நல்ல நடிகர். தன்னுடைய கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கிட்டு, மிகச் சிறப்பா அதை வெளிப்படுத்துவார். அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. சிம்பு சார் ஒரே டேக்ல ஓ.கே. வாங்கிடுவாரு. ஆனா, எனக்கு ரெண்டு, மூணு டேக் போயிடும். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அப்புறம், கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு ஈடுகொடுத்து நடிக்க ஆரம்பிச்சிட்டேன். படப்பிடிப்பின்போது அவர்கிட்டே இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். நடிப்பு பற்றி அவரும் டிப்ஸ் கொடுத்தாரு. ஒரே வரியில் சொல்லணும்னா, சிம்பு ஒரு யதார்த்தமான நடிகர்!

 

சினிமா வாழ்க்கையில் உங்க மனங்கவர்ந்த ஹீரோ யாரு?

என்னோட வாழ்க்கையில, நான் சந்தித்த ஸ்வீட்டான மனிதர் நாக சைதன்யா. மிகப்பெரிய பாரம்பரியம் உள்ள குடும்பத்துல இருந்து வந்திருந்தாலும், அவரோடு பழகும்போது அது எதுவும் நமக்கு தெரியாது. சினிமாவுல கடைசி நிலையில இருக்கிறவங்ககிட்டேயும் கூட இறங்கிவந்து பேசுவார். தன்னுடைய கேரக்டர் சிறப்பா வரணும்ங்கிறதுக்காக கடினமாக உழைப்பார். எல்லோருக்கும் அவரை பிடிச்சிருக்குன்னா, அவர் தன்னோட நடிப்பு மேல வைச்சிருக்கிற மரியாதையும், அதற்கு தன்னையே ஒப்புக்கொடுக்கிறதும்தான் அதுக்கு காரணம்!

 

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடிக்கும்போது என்ன வேறுபாட்டை உணர்ந்தீங்க?

மூன்று மொழிகளுக்குமே மிகப்பெரிய வேறுபாடு இருக்கு. இன்னும் சரியா சொல்லணும்னா, ரசிகர்களிடையே கூட வித்தியாசம் இருக்கு. நம்மோட தாய்மொழியில நடிக்கும்போது சவுகர்யமா உணர்வோம். அதுவே மற்ற மொழி படங்கள்னா அப்படியிருக்காது. என்னைப் பொறுத்தவரைக்கும், நடிக்கும்போது வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். என்னால விட்டுக்கொடுக்க முடியாத விஷயங்கள்ல அதுவும் ஒண்ணு. தமிழ், தெலுங்கு, மலையாளத்துல நடிக்கும்போது எனக்கு பிரச்சினை இருக்காது. மற்ற மொழிகளில் நடிக்கும்போது மட்டும், கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும்!

 

‘முடிசூடா மன்னன்’ படம் குறித்து?

கடந்த டிசம்பர் மாசம்தான், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் என்னை வந்து சந்திச்சாங்க. கதை சொல்லி முடிச்சதுமே, இந்தப் படத்துல நிச்சயமா நாம நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதற்கு காரணம், முடிசூடா மன்னன் படத்துல வர்ற என்னோட பாத்திரம்தான். படத்தோட கதை ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்துச்சு. கதை மேல இயக்குநர் ரொம்ப தீவிரமாக இருந்ததும், இந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு ஒரு காரணம். என்கிட்டே இருந்து எது வேணுமோ, அதை சரியா கேட்டு வாங்கிக்கிட்டார். இந்தப் படத்துல ஹீரோவா  விக்ரம் பிரபு நடிச்சிருக்கார். சிவாஜி சார் பேரன்கிற எந்த கர்வமும், அவர்கிட்டே இருக்காது. நட்போட பழகினார். அவரோட நடிக்கும்போது சௌகரியமா இருந்துச்சுன்னுதான் சொல்லுவேன்.

 

உங்களுடைய கனவு பாத்திரம்னு ஏதாவது இருக்கா? 

(கேட்டு முடிப்பதற்குள் சிரிக்கிறார்) அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. சினிமாவுல நடிக்க வந்ததே, ஒரு கனவு மாதிரிதான் இருக்கு. பொதுவாக, இயக்குநர் என்கிட்ட சொல்ற பாத்திரமாகவே மாறணும்னுதான் நினைப்பேன். அதற்கேற்ற மாதிரி என்னை மாத்திப்பேன். அவ்வளவுதான். நடிகை ஸ்ரீதேவி மாதிரி நடிக்கணும், ஜோதிகா மாதிரி ரியாக்ட் பண்ணணும். இப்படி எந்த ப்ளானும் வச்சிருக்கிறதில்லை. எனக்கு எந்த ரோல் கிடைச்சிருக்கோ, அதை சிறப்பா பண்ணினாலே போதும்னு நினைக்கிறேன்.

 

தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை...?

இவரை பிடிக்கும், அவரை பிடிக்காதுன்னு எந்தப் பட்டியலும் எங்கிட்ட இல்லை. எல்லோருடைய படங்களையுமே விரும்பிப் பார்ப்பேன். ரொம்ப பிடித்த நடிகர்னா , அது ரஜினிதான்!. அப்புறம் அஜித், விஜய், விக்ரம், தனுஷ் கூடயெல்லாம் ஜோடி சேர்ந்து நடிக்கணும்னு ஆசையிருக்கு. சின்ன வயசுல இருந்து ஜோதிகாவை பிடிக்கும். அவங்க நடித்த படங்களையெல்லாம் தேடித்தேடிப் பார்ப்பேன். இப்போ என்னோட பேவரைட் நடிகை நயன்தாராதான்!

 

உங்களுடைய பிட்னஸ் ரகசியம்?

பிட்னஸ் விஷயத்துல நான் கொஞ்சம் வீக். என்னை எல்லோரும் “பப்ளிமாஸ்..”னுதான் கூப்பிடுவாங்க. நடிப்புதான் என்னோட துறைன்னு முடிவானதுக்கு அப்புறமா, இப்பத்தான் பிட்னஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன். ரொம்ப ஸ்லிம்மா இருக்கறதுக்கு எனக்குப் பிடிக்காது. கொஞ்சம் பப்ளியா இருக்கணும்கிறதுதான், என்னோட ஆசை. உணவு விஷயத்துலயும் நான் அப்படித்தான். எதையுமே தவிர்க்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும், பிட்னஸ்னா ஆரோக்கியமாகவும் உறுதியாக இருப்பதும்தான்!” மஞ்சிமா பேசி முடித்ததும், இனிமையான இசை ஒலித்து முடிந்ததைப் போலிருந்தது.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles