இயக்குனர் ஆவதுதான் என்னோட ஆசை! - நடிகர் லுத்புதீன் பாஷா

Wednesday, August 31, 2016

‘பறந்து செல்ல வா’ திரைப்படத்தின் நாயகன் லுத்புதீன் பாஷாவுக்கு அறிமுகம் தேவையில்லை. நகைச்சுவை, குணசித்திரம், முதன்மை கதாபாத்திரம் என்று எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கும் நடிகர் நாசரின் மகன். இளம் வயதிலேயே, தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்திருக்கிறார் இந்த வாரிசு நடிகர். “இப்போ படங்கள்ல நடிக்கணும்னா, கொஞ்சம் மெச்சூர்டான முகத்தோற்றம் வேண்டியிருக்கு.

ஆனால், நான் சீக்கிரமாகவே நடிக்க வந்துட்டேன். வெற்றியோ, தோல்வியோ, எதையும் எதிர் கொள்ளலாம்கிற தைரியத்தோடுதான் களத்துல குதிச்சிருக்கேன். என்னோட கேரியர், கொஞ்சம் ஸ்லோவாத்தான் இருக்கும். இதையும், நான் எனக்கான படிப்பினையாகத்தான் எடுத்திருக்கேன்” என்று அதிரடியாகத் தொடங்குகிறார் லுத்புதீன்.

 

‘பறந்து செல்ல வா’ படம் பற்றி..?

'சைவம்’ படத்துல எனக்கு கேரக்டர் ரோல் தான். ‘பறந்து செல்ல வா’ படத்துலதான், முதல் முறையாக நான் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கேன். அதனால, இது எனக்கு ரொம்ப முக்கியமான ஒரு படம். இந்தப் படத்தை, முழுக்க முழுக்க சிங்கப்பூர்ல படமாக்கி இருக்காங்க. இதுல ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல் கெங்னு ரெண்டு கதாநாயகிகள். ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி எல்லாருக்கும் தெரியும். நரேல் கெங், சிங்கப்பூரைச் சேர்ந்தவங்க. அவங்களுக்கும் ஹீரோயினா இதுதான் முதல் படம். இந்தப் படத்துல, காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. ஏன்னா, இதுல சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே. பாலாஜின்னு ஒரு பட்டாளமே இருக்காங்க. 

 

சினிமாவில் நடிக்கணும்கிற ஆர்வம் எப்போது வந்தது?

‘சைவம்’ படம் நடிச்சதுக்கப்புறம்தான், எனக்கு நடிப்பு மேல ஆர்வம் வந்துச்சு. அதுக்குப் பிறகுதான், நடிப்புக்கான பயிற்சிகளை எடுக்க ஆரம்பிச்சேன். பயிற்சியின் போது. நடிப்புக்குள் ஒளிந்திருக்கும் நுணுக்கங்களைப் புரிஞ்சிக்கிட்டேன். வெறும் கேமரா முன்னாடி வந்து பெர்பார்ம் பண்றது மட்டும் நடிப்பில்லை. அதையும் தாண்டி பல விஷயங்கள் ஒளிஞ்சிட்டிருக்குன்னு, நான் தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன்.

 

சினிமாவில் நீடித்திருக்க, என்னென்ன முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள்? 

அப்பாவால தான், எனக்கு சினிமாவுல  நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. நான் நல்லா நடிக்கணும்னு, அவர்தான் என்னை என்.கே.ஷர்மாகிட்ட நடிப்புப் பயிற்சி எடுக்க அனுப்பி வைத்தார். ஷர்மா சார்கிட்ட கத்துக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் தான், நடிப்புல நிறைய விஷயங்கள் இருக்குன்னு புரிஞ்சது. இதுக்கு, எங்க அப்பாவுக்குதான் நன்றிகளைச் சொல்லணும்.

 

உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது?

‘சைவம்’ படத்துல கமிட் ஆனதும், அப்பாகிட்டே போய் சில டிப்ஸ் கேட்டேன். “நான் இதுவரைக்கும் நானூறு படங்கள்ல நடிச்சிருக்கேன். ஒரு டைரக்டர் உன்கிட்டே என்ன எதிர்பார்க்குறாரோ, அதைத்தான் நீ செய்யணும். அதுதான் உன்னோட வேலையாக இருக்கணும். எப்போதுமே, உன் வேலையை நீ சரியா செய்யணும்.” இதுதான், எங்கப்பா எனக்கு கற்றுத் தந்த பாடம்.

 

‘பட்டிணத்தில் பூதம்’ நாடக அனுபவம் குறித்து?

கார்த்திக் ராஜா இயக்கத்துல வந்த நாடகம் தான் ‘பட்டிணத்தில் பூதம்’. இதுல ராகுல் நம்பியார், சின்மயி கூட நடிச்சது புது அனுபவம். இதுவரைக்கும் நான் வொர்க் பண்ணதுலேயே, இதுதான் ரொம்ப சவாலான ப்ராஜெக்ட்னு சொல்லலாம். டயலாக் மனப்பாடம் பண்ணனும். சில நேரங்கள்ல வசனத்தை மாத்துவாங்க. ஏன், கேரக்டரே கூட மாறிடும். ரிகர்சல் நடக்கிற ஓவ்வொரு நாளும், ஒவ்வொரு சவால் இருக்கும். மூன்று ஷோ முடிஞ்சதுக்கப்புறம்தான், கொஞ்சம் அப்பாடான்னு இருந்தது. 

 

மேடை நாடக அனுபவம், சினிமாவில் நடிக்க எந்த அளவு உதவுகிறது?

வசனங்களை மனப்பாடம் செஞ்சு பேசுறதுக்கு, ரொம்ப ஈஸியா இருந்தது. சினிமா ஷூட்டிங் நடக்கும்போது, எப்போதுமே டயலாக் பேசுறதுக்கு முன்னாடி ஒரு பாஸ் கொடுப்பேன். சில நேரங்கள்ல, நான் மறந்துட்டேன்னு ’ப்ராம்ப்ட்’ செய்வாங்க. அப்படிச் செய்யும்போது, ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, இப்போ கேரக்டரை உள்வாங்கிட்டு நடிக்கிறது ரொம்ப சுலபமாக இருக்கு.

 

சினிமாவில் எந்தமாதிரியான பாத்திரங்களில் நடிக்க விருப்பம்?

நான், என்னை ஒரு நடிகனாத்தான் சொல்லிக்க விரும்பறேன். ‘பறந்து செல்ல வா’ படத்துல ஹீரோ. அதனால, லீட் ரோல் கிடைச்சா மட்டும்தான் நடிப்பேன்னு இல்லை. நல்ல கதை, இன்ட்ரஸ்டிங் ரோல் கிடைச்சா, கண்டிப்பா அதுல நடிக்கணும்னு ஆசைப்படுவேன். ஹீரோ ரோல் மட்டுமே என்னோட நோக்கம் இல்லை.

 

எதிர்காலத் திட்டம்..?

சின்ன வயசுல இருந்து, இயக்குனர் ஆகணுங்கிறதுதான் என்னோட ஆசை. முப்பத்திஅஞ்சு வயசுக்கு மேல, கட்டாயம் திரைப்பட இயக்கத்துக்குள்ள குதிச்சிடுவேன். வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சினிமா எடுக்கணும். என்னோட நண்பர்கள் நிறைய பேர்கிட்டே, இதுபற்றிப் பேசியிருக்கேன். யார் கண்டது, எதிர்காலத்துல சினிமாவே வர்ச்சுவல் ரியாலிட்டியா மாறக்கூடிய சூழ்நிலை கூட உருவாகலாம் இல்லியா? தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருக்கிறது லுத்புதீனின் பேச்சு. அவரது சினிமா பயணம், கண்டிப்பாக அவரது விருப்பங்களுக்கு ஏற்ப அமையும். 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles