கனவுகள் நிறைவேறட்டும்! - இன்று நடிகர் விஷால் பிறந்தநாள்

Monday, August 29, 2016

தமிழ் சினிமாவுக்கு, அவ்வப்போது நிறைய கதாநாயகர்கள் வருவார்கள். அவர்களில் எத்தனை பேர் நிரந்தரமாக தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடிக்கப் போகிறார்கள் என்பதை மட்டும், யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில், அதைக் காலம் மட்டும்தான் சரியான நேரத்தில் அடையாளம் காட்ட முடியும். அப்படி அடையாளம் காட்டப்படும் நட்சத்திரங்களே கோலிவுட்டில் பெரிய சிம்மாசனம் போட்டு உட்கார்வார்கள்.

அந்தவகையில், ரசிகர்களிடம் மட்டுமில்லாமல், உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் மனங்களிலும் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளார் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால்.

 

தமிழக ரசிகர்களுக்கு ஒரு நட்சத்திரம் நெருக்கமாக வேண்டுமெனில், அவர் கருப்பாக இருக்க வேண்டும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வருகைக்குப் பிறகு நிகழ்ந்த மாற்றம் இது. அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், தமிழ் நலன் சார்ந்தவராக இருக்க வேண்டும். அத்தகைய தகுதி உடையவரையே தமிழுலகம் ஏற்றுக்கொள்ளும். அப்படியாகத்தான், ரஜினிகாந்துக்கும் விஜயகாந்துக்கும் பெரும் ஆதரவு தந்தார்கள். அதேபோன்ற வரவேற்பைப் பெற்றிருக்கும் இன்னுமொரு நட்சத்திரம் நடிகர் விஷால்.

 

’செல்லமே’ படத்தில் அறிமுகமான விஷால், அடுத்தடுத்து கவனமாகப் படங்களைத் தேர்ந்தெடுத்தார். அதன் பலனாக, வெற்றி நாயகனாக இன்றுவரை வலம்வந்து கொண்டிருக்கிறார். தான் நடிக்கும் படங்களை, அவரே தயாரிக்கவும் செய்கிறார். அது மட்டுமா? தனக்கு நெருக்கமான நண்பர்களை, அந்தப் படங்களில் நடிக்க வைக்கிறார். பொதுவாக, ஒரு நட்சத்திரத்துக்குதான் பல ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், இன்றைய சினிமா நட்சத்திரங்களில் பலர் சேர்ந்து ஒருவருக்கு ரசிகராக இருக்கிறார்கள். அந்த அதிர்ஷ்டம், நடிகர் விஷாலுக்கு வாய்த்திருக்கிறது.

 

பொதுவாக, நடிகர்கள் தங்கள் படம் நூறு நாள் ஓட வேண்டும். ரசிகர்கள் மத்தியில் நிலையான புகழ் பெற வேண்டும். கோடிகளில் சம்பளம் வேண்டும் என்றே நினைத்துச் செயல்படுவார்கள். ஆனால், விஷாலோ வேறு ரகம். ரசிகர்களைப் பொதுநலனுக்காகப் பாடுபடச் சொல்வது, தானே களத்தில் இறங்கி எளியோருக்கு உதவுவது என நட்சத்திரங்களிடம் இருந்து தனித்து இயங்கினார். பிறகு, அவரது கவனம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் குவிந்தது. அதன் நலனுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பினார். அதன்பின், தேர்தலில் நின்று வெற்றிக் கொடியும் நாட்டினார். 

 

தற்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றம் வேண்டும் என்று, விஷாலின் குரல் உயர்ந்திருக்கிறது. அதற்கு பலத்த கண்டனங்களும் குவிந்திருக்கிறது. எதிர்க்குரலைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து இயங்குவது விஷாலின் இயல்பு. அதுபோல, தனது மனக்கணக்குகளைச் சரியாக்க விடாமல் முயற்சிப்பார். இதுபோன்ற அம்சங்களே, அவரை வெற்றியாளராக மாற்றியிருக்கிறது. அவர் மீதான ரசிகர்களின் பார்வையை நிலைக்கச் செய்திருக்கிறது. விளிம்பு நிலை மனிதர்கள், நலிந்த கலைஞர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து பொருளுதவி செய்து வருகிறார் விஷால். தனது பிறந்தநாள் அன்றும், நண்பர்களோடு இணைந்து இதனைச் சாதித்திருக்கிறார். 

 

சினிமா களத்தில் சூறாவளியாகச் சுற்றிவரும் இந்தப் புயலின் பிறந்தநாள் விழா, சமகால அரசியல் கொண்டாட்டங்களுக்குச் சற்றும் சளைத்ததில்லை. மற்றவர்க்கு உதவும் மனம் கொண்ட விஷாலின் எதிர்கால கனவு எதுவாயினும், அது விரைவாக நிறைவேற வாழ்த்துச் சொல்லி மகிழ்கிறது மனம்

- கிராபியென் பிளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles