இது மீன் வெட்டுபவனைப் பற்றிய கதை அல்ல!! இயக்குநர் கார்த்திக் ராஜு @மனம் எக்ஸ்க்ளுஸிவ்!

Friday, August 26, 2016

கோலிவுட்டில் ஒரு படத்தை தயாரிக்கும் நிறுவனம், அதே இயக்குநரின் அடுத்தப் படத்தையும் தயாரிக்க முன்வருவது வெகு அபூர்வம். அப்படி நடந்தால்,  நிச்சயம் அந்தப் படத்தின் டைரக்டரை நாம் கரம் பற்றி வரவேற்கலாம். அந்தவகையில், ’திருடன் போலீஸ்’ மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நம்பிக்கை இயக்குநராக அடையாளம் காணப்பட்டவர் இயக்குநர் கார்த்திக் ராஜூ. இவர் மீண்டும் 'அட்டக்கத்தி’ தினேஷோடு கைக்கோர்த்திருக்கும் படம்தான் ‘உள்குத்து’.

கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், தினேஷுக்கு ஜோடியாக நந்திதா நடித்திருக்கிறார். மேலும் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொதுவாக, ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அந்தப் படம் போணியாகிவிட்டால், ரசிகர்கள் மத்தியில்  அதற்கு வரவேற்பு நிச்சயம். அப்படியாக, இந்தப் படத்தின் தியேட்டர் உரிமையை பிரபல நிறுவனமான அபி & அபி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. 

மீனவ கிராமப் பின்னணியில் ‘உள்குத்து’ உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரும், படத்தொகுப்பை பிரவீன் கே.எல்.லும் கையாண்டுள்ளனர். ‘உள்குத்து’ படத்தின் ஸ்பெஷாலிட்டி பற்றி இயக்குநர் கார்த்திக் ராஜூவிடம் பேசியபோது, “படத்துல ரவுடிகளோட வாழ்க்கையைத்தான் சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல, நீங்க எந்த வேலையை வேணாலும் பார்க்கலாம். மூட்டை தூக்கறதோ, பழச்சாறு விற்கிறதோ, ஏன் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யுறதோ, எல்லா வேலையையும் வெளியிலேயே கௌரவமாக சொல்லிக்கலாம். ஆனா, “என் மகன் ரவுடின்னோ, என் வீட்டுக்காரரு ரவுடியா இருக்காருன்னோ, எங்கப்பா ஒரு ரவுடி தெரியுமான்னோ, நாம வெளியில சொல்லிக்க முடியாது. அப்படிச் சொல்றது பெருமையாகவும் இருக்காது.

முகம் தெரியாத யாரோ ஒருத்தன் வீட்டுக்குள்ளே புகுந்து கூலிக்காக கொலை செய்யும்போது, அவனுக்குள்ளே எந்த வலியும் ஏற்படறதில்லை. ஆனா, அதே கொலை அந்த ரவுடியோட வீட்டுலேயே நடந்தா என்னவாகும்? அது எப்படி அவனுக்கு வலிக்கும், எப்படி அவனை அலறவிடும், பாதிக்கும்? ஒரு பலமான அடி தன் குடும்பத்து மேல விழும்போது, அவன் எப்படி கதறுவான். அதைத்தான், யதார்த்தத்தின் பாதையில நின்னு சொல்லியிருக்கேன். நிச்சயமா, இந்தப் படம் ரவுடிகளின் வாழ்வியலை சொல்றதா இருக்கும். ரசிகர்களுக்கும் பிடிக்கும்!” என்றார். 

‘உள்குத்து’ படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்திருக்கும் நிலையில், கார்த்திக் ராஜூவின் வார்த்தைகள் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles