தியேட்டருக்கு வரும் ரசிகனை ஏமாற்ற மாட்டேன்! - இயக்குநர் ராம்பாலாவின் சபதம்! @மனம் எக்ஸ்க்ளுஸிவ்!

Friday, August 26, 2016

கோலிவுட்டில், நல்ல படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் தலைவணங்கத் தவறமாட்டார்கள். அந்தவகையில், சப்தமில்லாமல் தியேட்டரில் ஐம்பதாவது நாளைத் தொட்டிருக்கிறது சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’. பிரபல தொலைக்காட்சியொன்றில் ‘லொள்ளு சபா’, ‘சகலை ரகளை’ நிகழ்ச்சிகளில் மெகா ஹிட்டடித்தவர் இயக்குநர் ராம்பாலா. அவரது முதல் திரைப்படமான ‘தில்லுக்கு துட்டு’ பெரிய வெற்றியைத் தொட்டிருப்பதை வரவேற்று, வாழ்த்தி மகிழ்கிறது மனம். 

உலகம் முழுவதும் சுமார் 30 நாடுகளில் வெளியான படம் ‘கபாலி’. அந்தப் படம் வெளியாவற்கு முன்பே, ‘தில்லுக்கு துட்டு’ படம் வெளியானது. பொதுவாக, பெரிய ஸ்டாரின் படங்கள் வெளியானால் அதற்கு முன்னால் வெளியான படங்கள் தியேட்டரிலிருந்து திரும்பிவிடும். ஆனால், ‘கபாலி’ படத்தைத் தாண்டியும் தில்லுக்கு துட்டு தியேட்டரை தொடர்ந்து அலங்கரித்து வருகிறது. இதற்கு, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவின்றி வேறெதுவும் காரணம் இருக்க முடியாது. 

 

‘தில்லுக்கு துட்டு’ படம் ரசிகனை கட்டிப்போட்டதன் ரகசியத்தை அறிய, இயக்குநர் ராம்பாலாவையே தொடர்புகொண்டு பேசியபோது, “என்னைப் பொறுத்தவரைக்கும் இது நாயகனுக்கான படம், இது இயக்குநருக்கான படம் என்று ‘தில்லுக்கு துட்டு’வை சொல்ல மாட்டேன். உண்மையில், இந்தப் படத்துக்கான வெற்றி என்பது கூட்டு முயற்சிக்கு கிடைத்ததுதான். அதேமாதிரி படங்களை சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என்று பிரிக்க வேண்டியதில்லை. சிறந்த கதையமைப்புடன் கூடிய ரசிகனை என்டர்டெயின் செய்யும் படமா என்பதை மட்டும்தான் பார்க்கணும். 

 

திரைப்படம் இயக்க முடிவு செஞ்சப்போ, அதைத்தான் நான் மனசுல நிறுத்திக்கிட்டேன். நல்ல சாப்பாட்டு கடையை தேடிப் போறவங்களுக்கு, அவங்க விரும்பின சாப்பாடு கிடைக்கலைன்னா பாதியிலேயே எழுந்து, கைகழுவிட்டு போயிடுவாங்க. அப்படித்தான், தியேட்டருக்கு வரும் ரசிகனும். அவன் தேடிவந்ததை நாம கொடுக்கலைன்னா, தியேட்டரிலிருந்து பாதியிலேயே போயிடுவான். ஆக, ரசிகனுக்கு எது பிடிக்குமோ, அதைத்தான் ‘தில்லுக்கு துட்டு’ படத்துல கொண்டு வந்தேன். நல்ல திரைக்கதைகள் எப்போதும் தோற்றுப் போகாது. என்னை நம்பி படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கு லாபம் தர்ற படமாகவும், ரசிகர்களை ஏமாற்றாத படங்களாகவும், எனது படங்கள் இருக்கும்” என்று நம்பிக்கையோடு முடித்தார். 

 

இன்றைய சூழலில், ஒரு திரைப்படம் ஒரு தியேட்டரில் பத்து நாட்களைத் தாண்டுவதே பெரும்பாடு. அதுவும், ஐம்பது நாட்களைக் கடந்து செல்ல, உண்மையிலயே பெரிய ’தில்லு’ வேண்டும். ராம்பாலா, உண்மையிலேயே ‘தில்’லான ஆள்தான். வாழ்த்துவோம், அவரையும் அவரது குழுவினரையும்..!

 - கிராபியென் பிளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles