சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் - இது இயக்குனர் வெங்கட்பிரபு ஏரியா!

Wednesday, August 24, 2016

திருட்டு விசிடி, தியேட்டர்கள் மூடு விழா என கோலிவுட் கலகலத்துக் கொண்டிருந்த நேரம் அது. ’ஸ்டார் வேல்யூ’ உள்ள படங்கள் மட்டுமே, குறிப்பிட்ட தியேட்டர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அதேபோல, பெரிய பட்ஜெட்டில்தான் படங்கள் உருவாக்க முடியும் என்ற நிலையும் அப்போது இருந்தது. இந்நிலையில்தான், சிறிய பட்ஜெட்டில் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு படம் வெளியானது. அதுதான் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 28’.

அப்போது, ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த படத்தின் போஸ்டர்கள் மெல்ல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதற்குக் காரணம், அந்தப் போஸ்டரில் இருந்த சில கதாபாத்திரங்கள். பக்கத்து வீட்டில், பேருந்து பயணத்தில் எதிர்ப்படும் மனிதர்கள் போல, கையில் கிரிக்கெட் மட்டையுடன் நின்று கொண்டிருந்தனர் சென்னை 28 கும்பல்.

 

‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்பது அந்தப் படத்தின் டேக்லைனாக இருந்தது. அதுவே, படத்திற்கு பப்ளிசிட்டி தேடித் தந்தது. அதன் பின்னர், ’சென்னை 28’ திரையிடப்பட்ட தியேட்டர்களில் பரபரவென பற்றிக்கொண்டது வெற்றித் தீ. ’இன்னும் சில தினங்களில் அந்த தருணம் மீண்டும் வாய்க்கும்’ என்கிறது அதே குழு. காரணம், முந்தைய படத்தின் தொடர்ச்சியாகத் தயாராகி வருகிறது ‘சென்னை 28’ செகண்ட் இன்னிங்ஸ். 

 

பருவ வயதைத் தாண்டிய இளைஞர்களின் கொண்டாட்டத்தை ரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியிருந்த படம் சென்னை 28. எல்லாத் தரப்பு ரசிகர்களையும் அது ஈர்த்தது. சென்னை வாழ் இளைஞர்களின் காதல், நட்பு, துரோகம், விளையாட்டு, கண்ணீர், அவலம் எனப் புதிய களத்தைப் படம்பிடித்திருந்தார் வெங்கட் பிரபு. முத்தான நாயகர்களும் நகைச்சுவை நடிகர்களும், இந்தப் படம் மூலம் கோலிவுட்டுக்குக் கிடைத்தார்கள். சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க சீண்டாமல் கிடந்த அரசு விளையாட்டு மைதானங்கள் அதன்பின் இளைஞர்களின் திருவிழா திடலாக மாறிப்போனது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் மட்டுமல்லாமல், காதுகுத்து, கல்யாணம் போன்ற குடும்ப விழாக்களின்போதும் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்து மகிழ்ந்தது இளைஞர் படை!

 

பெரும்பாலும் கேரளாவில் இருந்தோ, இல்லையெனில் வடநாட்டில் இருந்துதான் நாயகிகளை இறக்குமதி செய்வது தமிழ் சினிமாவுலகின் வழக்கம். அதுவரை இருந்துவந்த வழக்கத்திற்கு மாறாக, சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமியையே நாயகியாக்கியது சென்னை 28. ’இதுமாதிரி ஏராளமான பொண்ணுங்க நம்ம பிளாட்டுலயே இருக்கே. எப்படி மிஸ் பண்ணினோம்’னு, அதுக்கப்புறம் பசங்க பீலானது தனிக்கதை. இப்படியாகச் சென்னை மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து கிரிக்கெட் விளையாடிய வெங்கட் பிரபு, அதன் பிறகு தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். அதுவரை, அவரை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்து மிஸ்டர் பொதுஜனம், வெங்கட்பிரபு என்ற மகா கலைஞனையும் கண்டுகொண்டது.

 

“நாலு பேரா சேர்ந்திருந்தா, நாடே நம்ம கையில மச்சான்” என்கிற லெவலுக்கு நட்புக்கூட்டத்துக்கு பாதைபோட்டவர் வெங்கட்பிரபு. அவரது சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ், வெகு விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது. முதல் டீசர் ஹிட்டடித்த நிலையில், தற்போதைய இளைய தலைமுறையை ஈர்க்கும் பொருட்டு தயாராகியிருக்கிறது இரண்டாவது டீசர். ’வி.பி. படம்னாலே கொண்டாட்டத்துக்கும் ஜாலிக்கும் குறைச்சல் இருக்காது. இது பார்ட் 2 வேற’ என்றவாறே காத்திருக்கின்றனர் தமிழ் சினிமாவுலகத்தினர்.  இந்தப் படத்தை, தனது ‘பிளாக் டிக்கெட்’ நிறுவனம் மூலமாகத் தயாரித்திருக்கிறார் வெங்கட்பிரபு. ’அவரோட இயக்கத்துல வெளியான முதல் படம் ‘சென்னை 28’. அது மெகா ஹிட். இது அவரோட தயாரிப்பு நிறுவனத்தோட முதல் படம். நிச்சயமா, இந்தப் படமும் மரண மாஸாக இருக்கும்’ என்கிறது கோலிவுட் பட்சி. 

 

’சரோஜா சாமான் நிகாலோ’ பாடலில் இடம்பெற்ற ‘மேலே ஏறி வாரோம், நீ ஒதுங்கி நில்லு’ பாடல் வரிகள்தான், நம் நினைவுக்கு வருகிறது. இதுவும், அதுபோன்ற கொண்டாட்ட மனநிலையை உருவாக்கட்டும்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles