வாழ்த்துகள் ‘செவாலியே’ கமல்ஹாசன்!

Monday, August 22, 2016

ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் அளவுக்கு இந்திய தேசத்தில் ஒருவர் உண்டு என்றால், அது நடிகர் கமல்ஹாசன்தான். தமிழ்சினிமாவை அணுஅணுவாக ரசிப்பவர்களின் கருத்து இது. ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை மெருகேற்றுவதோடு, ஒவ்வொரு முறையும் தொழில்நுட்பத்தில் தமிழ் சினிமாவை சிகரம் ஏற்றுபவர் கமல். அவருக்கு, பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் செவாலியே விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

உண்மையில், இது அந்த விருதுக்கான பெருமையே! ஏனெனில், விருதுகளைக் கடந்தவர் உலக நாயகன். ஆஸ்கர் விருது குறித்து,  பலமுறை அவர் சொல்லி வந்திருக்கும் பதில்களே அதற்குச் சான்று! ஆயினும், மனிதர்களுக்கு மதிப்பளிக்கும் பிரான்ஸ் போன்ற ஒரு தேசம் நம் கலைஞர்களைக் கௌரவிக்கிறது என்றால், அதை நாம் கொண்டாட வேண்டும். 

 

சினிமாவில் சம்பாதித்ததை, அந்த சினிமாவின் மேம்பாட்டுக்காகவே தொடர்ந்து அர்ப்பணித்து வருபவர் கமல்ஹாசன். சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோதரர்கள், பேசும்படம், தேவர் மகன், மகாநதி, மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி, குருதிப்புனல், அன்பே சிவம், விருமாண்டி, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவரது நடிப்பு செவ்வாய் கிரகத்தையே தொட்டது! இது மிகையாகத் தோன்றலாம். ஆனால், அவரது நடிப்பைத் தொடர்ந்து ரசிப்பவர்களுக்குத் தெரியும், இது உண்மை என்று..

 

தன் வாழ்நாளில், ஒரு நடிகர் சினிமாவின் அனைத்து தொழில்நுட்ப மாற்றங்களையும் கவனித்தபடியே முன்னேறி வந்திருக்கிறார் என்றால், அதற்கு உதாரணமாகக் கமலைத்தான் நாம் கை நீட்ட முடியும். கவிஞர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் உட்படப் பன்முக அவதாரங்களை எடுத்தவர் கமல். நடிப்பின் அவதார புருஷர். அவருக்கு ஒரு விருது கிடைக்கிறது என்பதை விட, அவர் பெயரிலேயே ஒரு உயரிய விருது உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. விரைவில் அதுவும் நடந்தேறும் என்று நம்புவோமாக..!

 

தன் வாழ்வில் அரை நூற்றாண்டை நடிப்புக்கே செலவிட்ட சிவாஜி கணேசன் போன்ற தமிழ்சினிமா ஜாம்பவான்களின் அன்பைப் பெற்றவர் கமல்ஹாசன். அப்படிப்பட்ட மகா கலைஞனுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கும் பிரான்ஸ் அரசுக்கு, மனம் திறந்த வாழ்த்துகளை சொல்லி மகிழ்கிறது மனம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles