ராதாமோகனின் புதிய படம் ‘பிருந்தாவனம்’  @மனம் எக்ஸ்க்ளுசிவ்!

Friday, August 19, 2016

இயக்குநர் ராதாமோகன் படங்கள் என்றாலே, கோலிவுட்டில் தனிக்கவனம் பெறும். காரணம், சமூகப் பிரச்சினைகளை அவர் கையாளும் விதமும், அதைத் திரைமொழியில் திறமையாக சொல்கிற அவரது பக்குவமும்தான். இது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம், உப்புக்கருவாடு என ஒவ்வொரு படத்திலும், வெவ்வேறு கதைகளை அவர் கையாண்டு வெற்றிக்கொடி நாட்டியதையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அந்தவகையில், ராதாமோகனின் அடுத்த செல்லுலாய்டு பயணம் ’பிருந்தாவனம்’. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா. ’துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ள படத்தில் தான்யா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்புக்கு முன்னரே பிருந்தாவனம் தொடங்கிவிட்டதால், ’தான்யா இப்போது ராதாமோகன் படத்தில்..’ என்கிறது கோலிவுட் வட்டாரம். 

வழக்கமாக, ராதாமோகன் தான் இயக்கும் படங்களில் நகைச்சுவை நடிகர்களை மாறுபட்ட கோணத்தில் பயன்படுத்துவார். அந்தவரிசையில், இந்தப் படத்திலும் நடிகர் விவேக்கிற்கு முக்கிய வேடம் அளித்துள்ளாராம். இதுவரை விவேக் ஏற்று நடித்த பாத்திரங்களிலேயே, அது மாறுபட்டு இருக்குமாம். ’இந்தப் படத்தின் மூலம், விவேக் வேறு ஒரு பரிணாமத்தை நடிப்பில் தொடுவார்’ என்கிறது படக்குழு. 

’பிருந்தாவனம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் விவேக் என்ற புதுமுகம். இவர் பி.சி.ஸ்ரீராமின் பட்டறையிலிருந்து வந்தவர். ’ஜில் ஜங் ஜக்’ படத்துக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர், இப்படத்திற்கு இசையமைக்கிறார். ’சிங்கம் 3’ படத்தின் கலை இயக்கத்தைக் கையாண்டுவரும் கதிரின், 51 வது படமாக பிருந்தாவனம் அமையவிருக்கிறது. உப்புக்கருவாடு படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார் பொன்.பார்த்திபன். 

தற்போது, கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகேயுள்ள சக்கலேஷ்பூர் மலைப்பிரதேசத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரே மூச்சில் படத்தை முடித்துவிட்டு கோடம்பாக்கம் திரும்பும் முடிவில் இருக்கிறது பிருந்தாவனம் படக்குழு.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles